உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டம், பாகல்பூர் அருகே உள்ளது தேவ்கலி என்ற பகுதி. இங்கு, ரேணு என்ற பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் கணவர், ஆறு மாதங்களுக்கு முன் ஜெய்ப்பூருக்கு வேலைக்குச் சென்றார்.
ரேணு, சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சூதாட்டத்தின் மீதான மோகத்தினால் அதற்கு அடிமையாகிக் கிடந்த அவர், தினமும் நிலஉரிமையாளர் ஒருவருடன் லூடோ விளையாட்டை விளையாடி வந்துள்ளார்.
ரேணுவின் கணவர், தன் குழந்தைகளுக்கும் வீட்டு தேவைகளுக்கும் அனுப்பும் பணத்தை ரேணு சூதாட்டத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். அப்படி ஒருநாள் நில உரிமையாளருடன் லூடோ விளையாடியபோது, தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அதன் பின்னர், ஆட்டத்தை தொடர்வதற்கு ரேணு, தன்னையே அடமானமாக வைத்து விளையாடி அதில் தோற்றுவிட்டார்.
இதையடுத்து ரேணு, ராஜஸ்தானில் இருந்த தன் கணவரை செல்போனில் தொடர்ந்து கொண்டு நடந்த முழு சம்பவத்தையும் கூறியுள்ளார். உடனே பிரதாப்கருக்கு வந்த ரேணுவின் கணவர், இது தொடர்பாக காவல்துறையில் புகார் செய்திருக்கிறார். அத்துடன், இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டதை அடுத்து, அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
ரேணுவின் கணவர் காவல்துறையினரிடம் அளித்த புகாரில், ரேணு தற்போது நில உரிமையாளருடன் வாழ ஆரம்பித்துவிட்டதாகவும், அவரை விட்டு தன்னுடன் வரும்படி அழைத்தபோது அதற்கு அவர் தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி கூறுகையில், ``நாங்கள் அந்த நபரை தொடர்பு கொள்ள முயல்கிறோம். அவரது தொடர்பு கிடைத்ததும், இது குறித்து விசாரணையைத் தொடங்குவோம்" என்றிருக்கிறார்.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதாட்டத்தில் தங்களையே வைத்து ஆடி, அனைத்தையும் இழந்தது போல், உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் சூதாட்டத்தில் தன்னை வைத்து விளையாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/SCOiZnE
0 Comments