பல ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஜம்மு காஷ்மீரில், கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகளால் காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் காஷ்மீரிலிருக்கும் பல அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சாடிவருகின்றன.
சமீபத்தில் கூட, ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வலைப்பதிவு, பிரதமரின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் ஈடுபட்டிருக்கும் 56 காஷ்மீர் பண்டிட் ஊழியர்களின் பட்டியலை வெளியிட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது. இதற்கும் கண்டனங்கள் கிளம்பியிருந்தன.
இந்த நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி, காஷ்மீர் பண்டிட்களின் வலியை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்கிறது எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள காசிகுண்டில் செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா முஃப்தி, ``இந்த அரசாங்கம் காஷ்மீர் பண்டிட்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. மேலும் இது, இந்த சமூகத்தின் வலி மற்றும் துன்பங்களை தன்னுடைய சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது. மத்தியிலும், ஜம்மு-காஷ்மீரிலும் பா.ஜ.க ஆட்சி செய்துகொண்டிருந்தாலும், கடந்த 6 மாதங்களாக இங்கு இருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளின் பிரச்னைகளில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது." என்று கூறினார்.
மேலும், காஷ்மீர் பண்டிட் ஊழியர்களின் விவரங்கள் கசிந்தது எப்படி நிகழ்ந்தது என மக்களுக்கு அரசாங்கம் தெரிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Vz3tU2h
0 Comments