பெங்களூரு என்றதும், தகவல் தொழில்நுட்பத் துறை, நெரிசலான சாலைகள் இப்படி சில விஷயங்கள் நினைவுக்கு வரும். கடுமையாக வாகன நெரிசல் காரணமாக வாகனம் ஓட்டுவதில் மக்கள் சிரமப்படுகின்றனர் என்பது கடந்த காலங்களில் பலமுறை புகார் செய்யப்பட்டிருக்கிறது. நெரிசலான சாலைகள் எப்போதும் எரிச்சலைத் தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், அந்த நெரிசல் சிலரின் வாழ்க்கையை நெருக்கமாக்கியிருக்கிறது என்ற தகவல் சுவாரஸ்யமாக பகிரப்படுகிறது. இந்த நெரிசலான சாலையில், ஒரு காதல் மலர்ந்திருக்கிறது. திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல அந்த நபர் தனது காதல் கதையை Reddit செயலியில் எழுதியது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
Reddit பயனரின் பதிவில் அவர் தனது மனைவியை பெங்களூரின் சோனி வேர்ல்ட் சிக்னலுக்கு அருகில்தான் முதன்முதலாக சந்தித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். பின்னர், யாரென்றே அறிமுகமில்லாத அவர்கள் நண்பர்களானார்கள். 5 வருடத்துக்கு முன்பு எஜிபுரா மேம்பாலம் கட்டும் பணி நடந்துக்கொண்டிருந்தது. அதனால் ஏற்பட்ட டிராஃபிக்கில் இருவரும் சிக்கிக் கொண்டனர். ஒருமுறை அவர்கள், ஒரே காரில் பயணிக்கையில் இருவரும் எரிச்சலுடனும், பசியுடனும் இருந்ததால்,அந்த சாலைப் பகுதியிலிருந்து வேறு வழியைத் தேர்ந்தெடுத்து, ஒன்றாக இரவு உணவிற்குச் சென்றிருக்கின்றனர். அந்த தருணத்திலிருந்து அவர்களின் காதல் தொடங்கியிருக்கிறது.
அதன்பிறகு தோழியாக அறிமுகப்படுத்த ஒரு நாள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் நட்பு காதலாக மலர்ந்து, திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆவதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர், "எப்படியும் அவளுடன் 3 வருடங்கள் பழகினேன். திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது, ஆனால் 2.5 கிமீ மேம்பாலம் இன்னும் கட்டுமானப் பணியில்தான் உள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட் ட்விட்டரில் பகிரப்பட, அது வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பலர் அவர்களின் காதல் கதையை பாராட்டி வாழ்த்தியும், சிலர் 5 வருடமாக இன்னும் கட்டிமுடிக்கப்படாத பாலத்தைப் பற்றி விமர்சித்தும் கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZW6V5OP
0 Comments