அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசியதை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் பதிலுக்கு கடுமையாக பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பார்கள். அது போல அண்ணாமலை பேச்சு உள்ளது.
தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை சட்டப்பூர்வமாக மீட்டு கொடுத்த அதிமுக, 52 ஆண்டுகால கட்சி என்பது அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை?
சமூக நீதிக்காக 69 சதவிகித இட ஒதுக்கீடு வாங்கித் தந்த அதிமுகவின் வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை இன்றைக்கு மனநலம் பாதிக்கப்பட்டது போல் பேசியிருக்கிறார். அண்ணாமலை சிறந்த மனநல மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சித்தம் கலங்கியவர்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் புரியாது.
பதவி வெறியால் மன அழுத்தத்தில் அண்ணாமலை இருக்கிறார். எந்த உழைப்பும் இல்லாமல் ஒரு சொட்டு வியர்வை சிந்தாத அண்ணாமலை மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம், பைசா கட்டணம் இல்லாமல் அவருக்கு மதுரையில் நல்ல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அனுப்புகிறோம்.
அக்டோபஸ் நஞ்சுக்கு மருந்து கிடையாது, அதேபோல் அட்டை பூச்சி தன் எடையை காட்டிலும் எட்டு மடங்கு ரத்தத்தை உறிஞ்சும். அதை போலத்தான் அண்ணாமலை ஆக்டோபஸாகவும், அட்டைப் பூச்சியாகவும் உள்ளார். இனி அண்ணாமலை ஆக்டோபஸ் அட்டைப்பூச்சி என்று அழைக்கப்படுவார்.
ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு வானத்துக்கு பூமிக்கும் குதிக்கிறார் அண்ணாமலை? தமிழக பாஜக தலைவராக வந்த அண்ணாமலை அவிழ்த்து விட்ட கட்டுக் கதைகள் பச்சைப் பொய்கள் சாத்தியமில்லாதவை என தமிழக மக்களுக்கு தெரிய வந்துள்ளது.
பாஜகவை பின்னுக்கு தள்ளி அரைவேக்காட்டு தனமாய் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் செயல்பட்டார். இன்றைக்கு தனது பதவிக்கு ஆபத்து என்று என்று தெரிந்தவுடன் அதை தக்க வைக்கவும், தனது முதலமைச்சர் கனவு தவிடு பொடி ஆகிவிட்டதே என்ற விரக்தியில் வரம்பு மீறி, அரசியல் நாகரிகமில்லாமல் அண்ணாமலை உளறி வருகிறார்.
2011-ல் ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்றபோது அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த தற்போதைய பாரதப் பிரதமர் பண்பின் அடையாளமாக விழாவில் கலந்து கொண்டார். ஜெயலலிதா அவருக்கு மரியாதை செலுத்தினார். 2016-ஆம் ஆண்டு பிரதமராக மோடி, இருந்த போது ஜெயலலிதாவின் இல்லம் தேடி வந்தார். இணக்கமான உறவை வைத்து தமிழக வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை வழங்கினார். ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடியாரும் 11 மருத்துவக் கல்லூரிகள், சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதிகளை தமிழகத்திற்கு பெற்றுத் தந்தார்.
அப்போதிருந்த பாஜக தலைவர்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவியதன் மூலம், கட்சியை வளர்க்க முயற்சித்தனர். ஆனால், இன்றைக்கு பாஜக தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, தாந்தான் முதலமைச்சர் என்று பைத்தியக்காரத்தனமாக அண்ணாமலை உளறி வருகிறார். யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம், அதில் மாற்று கருத்து இல்லை.
அதிமுக-வின் 50 ஆண்டுகால வரலாற்றில் சமூக நீதியை நிலைநாட்டினோம், பெண்கள் பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், அன்னதான திட்டம், குடிநீர் திட்டங்கள், கல்வித் திட்டங்கள் என தொலைநோக்கு திட்டங்களை எங்களால் பட்டியலிட முடியும்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததற்கு துப்பு கெட்ட அண்ணாமலை சீறி எழுந்தாரா? சிறப்பு திட்டங்கள், ரயில்வே திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததற்கு அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை?
உங்களுடைய தகுதி தராதரம் பேச்சிலேயே தெரிகிறது. நிறைகுடம் தழும்பாது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் நிறைகுடம். நீங்கள் காலி தகர டப்பா. காலி டப்பா சத்தம் எழுப்பும், அந்த சத்தத்தினால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை.
பச்சை தமிழன் என சொல்லிக்கொண்டு, கர்நாடகாவில் சேவை செய்தபோது பச்சை துரோகியாக தமிழினத்தை கேவலமாக பேசியுள்ளார்.
நியமன பதவியில் இருந்துகொண்டு வாய்ச்சவடால் பேசும் அண்ணாமலை, சத்தமாக பேசினால் உண்மையாகி விடாது. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஊமைகள் போலவும், இவர்தான் தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போலவும் வாய்ச்சவடால் எதற்கு?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தெய்வத்திற்கு நிகரானவர். அண்ணாமலை கழுதையாக கத்தினாலும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. ஒரு கவுன்சிலர் பதவியில் நின்று வெற்றி பெற முடியாத ஆக்டோபஸ் அண்ணாமலை நாகரிகமான முறையில் பேச பயிற்சி எடுக்க வில்லையா? எங்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி பழி வாங்கினாலும் பயப்படாமல் உங்கள் முகத்திரையை கிழிப்போம்.
அழிப்பேன், ஒழிப்பேன் என்று கூறும் உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பகல் கனவு காண்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது, கனவில் முதல்வராகவும், பிரதமராகவோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியாக மாறுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.
நான்கரை ஆண்டுகள் முதல்வராக இருந்து கொரோனா காலகட்டத்தில் மக்களுக்காக உழைத்தவரை பழித்து, இழித்து பேசினால் உங்கள் நாக்கு அழுகிப்போய்விடும். அப்படி பேசி செல்வாக்கை வளர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் தப்பு கணக்காகிவிடும்.
கடல் வற்றி கருவாடு திங்க காத்திருந்து கடைசியில் குடல் வற்றி செத்துப்போன கொக்கு போல அண்ணாமலையின் முதல்வர் கனவு பறிபோகும். அண்ணாமலையின் பேச்சு தமிழக மக்கள் மத்தியில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்களையும் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.
பாஜகவை வளர்க்க உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வெள்ள நிவாரணம், நிதிநிலை அறிக்கையில் ரத்து செய்யப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு மதுரை மெட்ரோ ரயில் திட்டம், கச்சத்தீவை மீட்க, எடப்பாடியார் பெற்று தந்த எய்ம்ஸுக்கு நிதியை பெற்றுத்தர முயற்சி எடுங்கள்.
அண்ணாமலையின் நடிப்பு, நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பைவிட உலககா நடிப்பாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் கோவையை சொர்க்கப்புரியாக மாற்றுவேன் என்றீர்கள். அதை பெற்றுத்தர உங்களுக்கு வக்கில்லை. ஒன்றரைக் கோடி மக்கள் வாக்களித்து எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவரை பற்றி பேச உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
அதிமுகவை டெண்டர் கட்சி என்கிறீர்கள், உங்கள் கட்சிதான் டெண்டர் கட்சி. உங்கள் கட்சியில் தான் நிதி மோசடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை பின்புலம் உள்ளவர்கள் அடைக்கலமாகியுள்ளனர். தேர்தலில் இத்தனை சதவிகிதம் வாக்கு வாங்கினோம், அவ்வளவு வாங்கினோம் என்று தவறான புள்ளி விவரங்களை கூறி மக்களை மூளைச்சலவை செய்கிறார், 39 தொகுதியிலும் தோற்றோம் என்று சொல்ல வேண்டியதுதானே.
ஒரு பைசா லஞ்சம் வாங்கவில்லை என்று அண்ணாமலை கூறுகிறார். ஆனால் தமிழகத்திற்கு என்னென்ன பெற்றுத் தந்திருக்கிறேன் என்று குறிப்பிடுங்கள் நாங்கள் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகுகிறோம்" என்றார் காட்டமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/fDN7Vl9
0 Comments