``இந்திய மாணவரின் மரணத்துக்கு நீட் தான் காரணம்" - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி காட்டம்!

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவம் பயிலும் மாணவர், உக்ரைனில் உயிரிழந்தார். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி , ``நவீன் மரணத்துக்கு நீட் தான் காரணம்" என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 96 சதவிகிதமும், பி.யூ.சி-யில் 97 சதவிகிதமும் மதிப்பெண் பெற்ற நவீனுக்கு இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான், தன் கனவை நனவாக்க நவீன் தன்னை மருத்துவராக உருவாக்கிக்கொள்ள உக்ரைன் சென்றுள்ளார். அந்த இளைஞரின் மரணம் இந்தியாவின் மனசாட்சியைக் கேள்வி கேட்க வைத்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு?

நீட் தேர்வு

நீட் தேர்வு பெற்றோர் மற்றும் மாணவர்களின் `மரண சிலை'யாக மாறியிருக்கிறது. மேலும், உயர்கல்வி பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்ற சூழல் உருவாகியுள்ளது. பொருளாதார ரீதியில் தகுதி என்ற போர்வையில் நலிவடைந்த ஏழைக்குழந்தைகளின் திறமைக்கு அநீதி இழைக்கும் வெட்கமற்ற பிரதிபலிப்பே உக்ரைனில் மருத்துவ மாணவனின் உயிரிழப்பு.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 99 சதவிகித மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தனியாரில் பயிற்சி பெற்றவர்கள். எனவே பணக்காரர்களுக்கு மட்டும் உயர்கல்வி அளிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்" எனக் குமாரசாமி குறிப்பிட்டிருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/8hRXarc

Post a Comment

0 Comments