உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவருவதைத் தொடர்ந்து, அங்கு தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளா மாநிலம் இடுக்கி தேவிகுளம் லாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்யா ஆல்ட்ரின். உக்ரைனில் மருத்துவம் படிக்கும் அவர், தனது வளர்ப்பு நாயான சைராவையும் பல போராட்டங்களையும் மீறி போர் பூமியிலிருந்து தன்னுடன் அழைத்துவருகிறார்.
முன்னதாக, சைராவை விமானத்தில் அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதாகவும், தன்னிடம் இருந்த சிறிது உணவையும், தண்ணீரையும் சைராவுக்குக் கொடுத்ததாகவும் ஆர்யா வீடியோ வெளியிட, அந்த வீடியோவை ஆர்யாவின் தோழியான சியாமா கெளதம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட, அது வைரலானது. இதைத் தொடர்ந்து பலரும் வளர்ப்பு நாய்க்கு அனுமதி கிடைக்க வலியுறுத்த, ஆர்யா தன்னுடன் சைராவையும் அழைத்துவர அனுமதி கிடைத்துள்ளது.
இடுக்கியைச் சேர்ந்த ஆல்ட்ரீன் - கொச்சுராணி தம்பதியின் மகளான ஆர்யா, உக்ரைன் தலைநகரான கீவ்வில், வெனீஸியா மருத்துவப் பல்கலைகழகத்தில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கீவ் பகுதியில் தாக்குதல் அதிகமானதால் சைராவுடன் பங்கரில் தஞ்சமடைந்தார் ஆர்யா. பின்னர் இந்தியா திரும்புவதற்கு முன்பு தனது செல்லப் பிராணியான சைராவையும் அழைத்து வருவதற்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்தார். ஆர்யாவுக்கு இந்தியா வருவதற்கான அனுமதி கிடைத்ததும், சைராவையும் அழைத்து வர அனுமதி வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புப் பணியில் உள்ள மகேஷ் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.
அவர் உதவியதைத் தொடர்ந்து சைராவுடன் ரொமானியாவுக்கு பஸ்ஸில் சென்றார். ரொமானியா எல்லையில் 12 கிமீ தூரத்துக்கு முன் பஸ்ஸில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர். அப்போது பனிப்பிரதேசத்தில் நடந்ததால் சைராவுக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சைராவை குழந்தையைப் போல கையில் ஏந்திக்கொண்டு நடந்துள்ளார் ஆர்யா.
ரொமானியா எல்லையில் சைராவை அனுமதிக்க முடியாது என ராணுவத்தினர் தடுக்க, `இந்தப் போர்ச்சூழலில் சைராவை அனாதையாக விட்டுச் செல்ல முடியாது' என்று ஆர்யா கேட்டுக்கொண்டதை தொடர்ந்து ராணுவத்தினர் சம்மதித்தனர். இதையடுத்து தனது செல்ல சைராவுடன் கேரளாவுக்குத் திரும்ப உள்ளார் ஆர்யா.
இதுகுறித்து கேரள அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், ``வண்டிப்பெரியாரைச் சேர்ந்த ஆர்யா வளர்ப்பு நாயை கைவிடாமல் இந்திய மண்ணுக்கு அழைத்து வருகிறார். அன்பினால் உருவாகும் உலகம் அன்பால் வளர்ச்சியைத் தேடுகிறது" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆர்யாவும் சைராவும் போர்டிங் பாஸ் எடுத்துவிட்டதாகவும், நாளை இந்தியா வந்துவிடுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
``சாரா, சைபீரியன் ஹஸ்கி வெளிநாட்டு இன நாய். இந்தியாவிலும் வளர்ப்பு நாயாக வளர்க்கப்பட ஆரம்பித்தது. செந்நாயின் லுக்கில் நீண்ட முடியுடன் காட்சியளிக்கும் சைபீரியன் ஹஸ்கி விலை அதிகமானது. பெரியவர்களிடமும், குழந்தைகளிடமும் எளிதில் பழகும் தன்மை கொண்டது. வெளிநாட்டில் இருந்து வரும் சைராவுக்கு இந்தியாவின் காலநிலை ஒத்துப்போவதற்கு சிறிது காலம் பிடிக்கும்" என்கிறார்கள் சைபீரியன் ஹஸ்கி இன நாய் குறித்து விவரம் தெரிந்தவர்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/3Y8pUQD
0 Comments