நூல் வெளியிட்டு விழா:
சென்னை வர்த்தக மையத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவானது தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நூலை இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். ஸ்டாலின் தனது வாழ்க்கை வரலாற்றை `உங்களில் ஒருவன்' எனும் தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார்.
இந்த நூல் வெளியிட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், கனிமொழி கருணாநிதி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் மற்றும் தி.மு.க-வின் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். விழாவில், ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் கலந்துகொண்டதால் இந்த நிகழ்ச்சி தேசிய அளவின் கவனம் பெற்றது.
தமிழகத்தைப் பிரித்தால் ஏற்க முடியுமா?
விழாவில் பேசிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ``ஸ்டாலின் உழைக்கும் மக்களை நன்றாகப் புரிந்துவைத்துள்ளார். காஷ்மீருக்காகத் தமிழகம் குரல் கொடுத்தது. அதற்காகத் தான் நான் இங்கு வந்திருக்கிறேன். எதைச் சாப்பிட வேண்டும். எப்படி இருக்க வேண்டும். என்ன உடை அணியவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டியது அவரவரின் தனியுரிமை. காவி துண்டு போட வேண்டுமா. ஹிஜாப் அணிய வேண்டுமா, தாடி வைக்க வேண்டுமா என்றெல்லாம் அவரவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மத அடையாளங்களைப் பின்பற்றுவது தனிமனித உரிமை. தற்போது, மதம், மொழி, ஆடை, உணவு சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது" என்றார்.
மேலும், ``பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் அதில் ஒற்றுமையாக இருப்பது தான் இந்தியாவின் தனிச்சிறப்பு. மாநில அரசு மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டது என்ற கருத்து இப்போது உருவாக்கப்படுகிறது. தமிழகத்துக்கும் காஷ்மீருக்கும் பல தலைமுறைகளைக் கடந்த சொந்தம் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மக்களின் குறையைக் கேட்காமலேயே மாநிலம் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு வந்த நிலைமை தமிழகத்துக்கோ, கேரளாவுக்கோ வராது என்பது என்ன நிச்சயம். மக்களின் ஒப்புதல் இல்லாமல் காஷ்மீரைப் பிரித்தார்கள். ஆளுநர் தமிழகத்தை மூன்றாகப் பிரித்தால் ஏற்க முடியுமா. ஜம்முவில் தொடங்கிய பிரிவினை அங்கேயே முடியவேண்டும்" என்று பேசியிருந்தார்.
தீர்மானிக்க இவர்கள் யார்!
நூலை வெளியிட்ட பின்னர் ராகுல் காந்தி பேசியதாவது, ``அருமையான புத்தகத்தை எழுதிய எனது அண்ணன் ஸ்டாலினுக்குப் பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர் பல ஆண்டுகளாக நீண்ட போராட்டத்தை நடத்தி மக்களுக்கு ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தந்துள்ளார். தமிழகம் வருவது ஒருவித மகிழ்ச்சியைத் தருகிறது. நான் மக்களவையில் தமிழகம் குறித்துப் பேசியதற்குத் தமிழக மக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்ததை நான் அறிவேன். அந்த உரையில் என்னை அறியாமலேயே நான் தமிழன் என்றேன். என் ரத்தம் இந்த தமிழ் மண்ணில் கலந்துள்ளது. அதனால் நான் தமிழன் என்பதை உணர்ந்தேன். பாரம்பர்யம் மிக்க தமிழகத்தில் யாரும் எதையும் திணிக்க முடிந்ததில்லை. தமிழகத்தின் பாரம்பர்யத்தையும், மொழியையும், சொல்லையும் புரிந்துகொள்ளாமல் பிரதமர் எந்த அடிப்படையில் தமிழகத்தைப் பற்றிப் பேசுகிறார். மக்களின் மொழியைப் புரிந்துகொள்ளாமல் தமிழர்களுக்காக எப்படிப் பேச முடிகிறது" என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``தமிழக மக்கள் நீட் குறித்துத் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். அதற்கு இதுவரை பதில் அளிக்காதது தான், தமிழக மக்களுக்கு அளிக்கும் மரியாதையா. தமிழக மக்களைப் புரிந்துகொள்ளாமல் மத்திய அரசு அவமதிக்கிறது. மத்திய பாஜக ஆட்சியில், சுதந்திர நாட்டில் மாநிலத்தின் உரிமைகள் முதன்முறையாகப் பறிக்கப்பட்டுள்ளது. ஜம்முவை அங்குள்ள மக்களால் ஆழ முடியவில்லை. குஜராத், உத்தரப்பிரதேச மாநிலத்தினரே ஆள்கிறார்கள். வரலாற்று ரீதியாக இந்தியா பல்வேறு மொழி, கலாசாரங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பலமே அது தான். அதைச் சிதைக்க நினைக்கிறார்கள். இந்தியாவின் பத்திரிகைத் துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை ஒன்றன்பின் ஒன்றாக நசுக்கப்படுகிறது. இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க இவர்கள் யார். இது தான் இப்போதைக்கு பெரும் பிரச்னை. மக்களின் பாரம்பர்யத்தையும், கலாசாரத்தையும் எதிர்த்தால் அவர்கள் தோற்றுக்கொண்டே தான் இருப்பார்கள். நமது மக்களாட்சி முறையில் மக்களின் குரல்தான் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும்" என்று பேசினார்.
சுதந்திரமாக இருக்க வேண்டும்!
வாழ்த்துரையின் போது கேரள முதல்வர் பினராயி விஜயன், `` மாநில அரசின் உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது. கூட்டாட்சி தத்துவம் தாக்குதலுக்கு உள்ளான போதெல்லாம் நாட்டிலேயே முதலாவது ஆளாகக் குரல் கொடுத்தவர் ஸ்டாலின். நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நமது நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகுப்புவாத, சர்வாதிகார சக்திகளுக்கு முடிவு கட்ட முற்போக்கு, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு வழி அமைப்பதை உறுதி செய்ய முடியும். இந்தியாவின் அனைத்து குடிமக்களும் சுதந்திரமாக இருக்க வேண்டும். பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார்" என்று பேசியிருந்தார்.
பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசும்போது, ``தமிழகத்தில் சமூகநீதிக்கு முன்னுரிமை வழங்கி ஆட்சி நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றும் பீகாரில் சமூகநீதிக்காகப் போராடவேண்டிய நிலைதான் இருக்கிறது. தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. இது ஒரு வித்தியாசமான சமூகம். தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக ஸ்டாலின் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். சமூகநீதி, ஒற்றுமை, ஆனந்தம் என்று அனைத்தும் தமிழகத்தில் உள்ளன. தமிழகம் பாரம்பர்யத்துடன் இருப்பதைக் கண்டு ரசிக்கிறேன். இந்த மாநிலம் பல தேசிய பிரச்னைகளுக்குத் தீர்வாக விளங்கியுள்ளது" என்று பேசினார்.
இந்த விழாவில், ஸ்டாலின், ராகுல் காந்தி, உமர் அப்துல்லா, பினராயி விஜயன் என்று அனைவருமே மாநில சுயாட்சி மீதான தாக்குதல்கள் குறித்தும், மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவதின் தேவை குறித்தும் பேசினார்கள். குறிப்பாக ராகுல் காந்தி பேசும்போது, `நாட்டில் மக்களின் குரல்கள் திட்டமிட்டுத் தாக்கப்படுகின்றன. பா.ஜ.க பற்றி நாம் மாயையில் இருக்கக்கூடாது. அவர்களை எப்படி எதிர்த்துப் போராடுவது என்று எங்களுக்குத் தெரியும். அவர்களுடன் போராட போகிறோம். அவர்களைத் தோற்கடிக்கப்போகிறோம்" என்று உணர்ச்சி போங்க பேசியிருந்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/oq61csb
0 Comments