``அமித் ஷாவுக்கு போன் செய்த பிறகே விட்டார்கள்” -மத்திய அமைச்சர் ரானேயிடம் நள்ளிரவு வரை நீண்ட விசாரணை

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பெண் மேலாளர் திஷா சலியன் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதாவது சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. சுஷாந்த் சிங் தற்கொலை எந்த அளவுக்கு மர்மமாக இருந்ததோ அதே போன்றுதான் திஷா தற்கொலையும் அமைந்தது. அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியானது. அவர் தற்கொலை செய்யும் போது கர்ப்பமாக இருந்ததாகவும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்திருந்தார்.

அவரின் மகன் நிதேஷ் ரானேயும் இந்த செய்தியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக திஷாவின் பெற்றோர் மாநில பெண்கள் ஆணையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் ரானே மீதும் அவரின் மகன் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு பெண்கள் கமிஷன் உத்தரவிட்டது.

திஷா சலியன்

இதையடுத்து மும்பை மால்வானி போலீஸார் நாராயண் ரானே மற்றும் அவரின் மகன் நிதேஷ் ரானே ஆகியோர் மீது கடந்த மாதம் 27-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருவரும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டனர். எனவே இருவரும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மேல் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக மால்வானி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே போலீஸ் நிலையத்திற்கு வெளியில் பாஜக தொண்டர்கள் கூடினர். அவர்களை கலைந்து போகும்படி போலீஸார் கேட்டுக்கொண்டனர். ஆனால் கலைந்து செல்லவில்லை. இதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அமைச்சரிடமும், அவரின் மகனிடமும் நள்ளிரவு வரை விசாரணை நடந்தது. அதாவது 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகே இருவரும் விடுவிக்கப்பட்டனர். நள்ளிரவில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் நிலையத்திற்கு வெளியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த நாராயண் ரானே, ``நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அழைத்து போனில் பேசிய பிறகுதான் எங்களை வெளியில் விட்டார்கள். மேயர் கிஷோரியின் தூண்டுதலின் பேரிலேயே திஷாவின் பெற்றோர் பெண்கள் கமிஷனில் புகார் செய்துள்ளனர். திஷா மற்றும் சுஷாந்த் சிங் ஆகிய இருவரும் தற்கொலை செய்த பிறகு உத்தவ் தாக்கரே எனக்கு இரண்டு முறை போன் செய்து இவ்வழக்கு குறித்து பேசினார்” என்று தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/DdsCvQx

Post a Comment

0 Comments