மும்பை மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராக இருப்பவர் யஷ்வந்த் ஜாதவ். இவரது மனைவி யாமினி ஜாதவ். பைகுலா சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர்களின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் திடீர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு தொடர்ந்து 35 இடங்களில் 72 மணி நேரம் வரை நடந்தது. மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் பீமல் அகர்வால், மதானி, பிபின் ஜெயின் போன்றவர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் அகர்வால் இதற்கு முன்பு மாநகராட்சிக்கு தரம் குறைந்த வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் உபகரணங்களை சப்ளை செய்ததாக அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்டவர் ஆவார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் வேண்டப்பட்டவராக கருதப்படும் யஷ்வந்த் ஜாதவ் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ``யஷ்வந்த் ஜாதவ் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.130 கோடிக்கு சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவை 36 பினாமி சொத்துக்களாக இருக்கிறது. ஜாதவ் குடும்பத்தினர், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் மொத்தம் 36 சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் சர்வதேச ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி ஒப்பந்ததாரர்களும் யஷ்வந்த் ஜாதவும் சேர்ந்து கொண்டு செயல்பட்டு இருப்பதும், பணிக்களுக்கான தொகையை அதிகரித்து காட்டி பணம் பெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மாநகராட்சி ஒப்பந்தாரர்களிடம் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.200 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவதை குறைக்க ஒப்பந்ததாரர்கள் செலவு கணக்கை அதிகரித்து காட்டி இருப்பது ரெய்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் காட்டாமல் பணம் அதிக அளவு சொத்துக்கள் வாங்க செலவிடப்பட்டு இருக்கிறது. கணக்கில் வராத வரவுகளுக்காக தனிப்பைல்களை ஜாதவ் பராமரித்து வந்தார். அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஜாதவ் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடி பணம் மற்றும் 1.5 கோடி மதிப்பு தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாதவ் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரித்துறையின் இத்தகவல்கள் வரும் மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்று பாஜக கருதுகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/fULKg9W
0 Comments