கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக மது, போதை பொருட்கள் கடத்தி செல்வதை தடுக்கும் வகையில் தமிழக கேரளா எல்லைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பெரிய கடத்தல்களை தடுக்க தமிழக, கேரள போலீஸார் இணைந்து வாகன சோதனை நடத்துவதும் வழக்கம். அந்த வகையில் கேரள எல்லைப் பகுதியான படந்தாலுமூடு பகுதியில் தமிழக, கேரள போலீஸார் இணைந்து நேற்று வாகனசோதனை மேற்கொண்டனர்.
அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரள அரசுப் பேருந்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பையுடன் இருந்த நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரின் பதில் திருப்திகரமாக இல்லாததால், அவரின் பேக்கை சோதனை செய்தனர். அதில் கட்டு கட்டாக இரண்டாயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் அதில் 70 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் அந்த நபரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஆதம் (45) என்பது தெரிய வந்தது. மேலும் அவரின் மொபைல் போனை ஆய்வுசெய்தபோது அமெரிக்கன் டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பண பரிவர்த்தனை செய்ததற்கான சில ஆவணங்களும் இருந்ததாக தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக அவரிடம் களியக்காவிளை போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் என்பதால் இதுகுறித்து வருமானவரித்துறையின் திருநெல்வேலியைச் சேர்ந்த விங்க் விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பணம் சென்னையில் இருந்து கேரளாவுக்கு கொண்டுச் செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. ஏன் கன்னியாகுமரி வழியாக கேரளா செல்ல முயன்றார் என்பதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
ஆதம் என்பவர் பணத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்திச் செல்லும் 'குருவி' போன்று செயல்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது. இதற்காக அவருக்கு கமிஷன் கிடைக்குமாம். போலீஸ் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் கன்னியாகுமரி வழியாக கேரளா செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பணம் யாருடையது என்றும், இதுபோன்று எத்தனை முறை ஆதம் பணம் கொண்டு சென்றுள்ளார், வேறு எந்த மாநிலங்களுக்கு எல்லாம் பணம் கொண்டு சென்றுள்ளார் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
from தேசிய செய்திகள்
0 Comments