கேரள மாநிலம் ஆலப்புழா மண்ணஞ்சேரியைச் சேர்ந்தவர் ஷான் (38). இவர் எஸ்.டி.பி.ஐ மாநிலச் செயலாளராக இருந்துவந்தார். ஷான் கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கை ஒருகார் வேகமாக மோதியது. இதனால், ஷான் நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஷானை காரிலிருந்து இறங்கிய நான்குபேர்கொண்ட கும்பல் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது. அந்தப் பகுதியினர் அவரை மீட்டு சொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்குச் சிகிச்சை பலனில்லாமல் அன்றிரவு 11.30 மணி அளவில் ஷான் இறந்தார். இந்த கொலைச் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், பா.ஜ.க ஓ.பி.சி மோர்ச்சா மாநிலச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் ரஞ்சித் சீனிவாசன் (45) என்பவர் நேற்று காலை கொலை செய்யப்பட்டார். ஆலப்புழா, வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் சீனிவாசன் வீட்டிலிருந்த போது நேற்று காலை 6 மணி அளவில் அவரது வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக்கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றது. ரஞ்சித் சீனிவாசனை வெட்டியது மட்டுமல்லாது, பெரிய சுத்தியல் கொண்டும் தாக்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இரவு முடிந்து முழுவதுமாக விடிவதற்குள் நடந்த இந்த இரண்டு கொலைகளும், பழிக்குப்பழியாக நடந்த அரசியல் கொலைகளாகப் பார்க்கப்படுகின்றன. இதனால் ஆலப்புழாவில் பதற்ற நிலை தொற்றிக்கொண்டது. இந்த இரண்டு கொலை வழக்குகள் தொடர்பாக 50 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஆலப்புழா மாவட்டம் முழுவதும் 2 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.டி.பி.ஐ நிர்வாகி ஷானின் இறுதிச்சடங்கு நேற்று மாலை நடந்தது. அதே சமயம் கொரோனா பரிசோதனை முடிவு வரவில்லை எனக்கூறி பா.ஜ.க நிர்வாகி ரஞ்சித் சீனிவாசனின் உடற்கூறு ஆய்வு காலதாமதம் ஆனதால், நேற்று உடல் ஒப்படைக்கப்படவில்லை. ரஞ்சித் சீனிவாசனின் உடல் இன்று ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
வேண்டுமென்றே போலீஸார் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகவும், இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் எனவும் பா.ஜ.க கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த கொலை வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்களை என்.ஐ.ஏ கேட்டறிந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் ஆலப்புழாவுக்கு வந்து ரஞ்சித் சீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
எஸ்.டி.பி.ஐ நிர்வாகி ஷான் கொலை வழக்கில் பிரசாத், ரதீஸ் ஆகிய இரண்டுபேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏ.டி.ஜி.பி விஜய் சாகரே கூறியிருக்கிறார். இதுகுறித்து ஏ.டி.ஜி.பி விஜய் சாகரே கூறுகையில், ``ஷான் கொலை வழக்கில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரசாத் என்பவர் இந்த வழக்கில் மூளையாகச் செயல்பட்டிருக்கிறார். ஷான் கொலை வழக்கில் 10 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.
ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 12 பேர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இரண்டு கொலைகளுக்கும் இடையே 12 மணி நேரம் இடைவெளியே இருந்திருக்கிறது. முதல் கொலை நடந்த இரண்டு மணிநேரத்தில் குற்றவாளிகள் குறித்து தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சிலரைப் பிடித்து விசாரித்தோம். ஆனால் ரஞ்சித் சீனிவாசன் கொலையை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்கான அறிகுறிகள் தெரிந்திருந்தால் இந்தக் கொலையைத் தடுத்திருக்கலாம்" என்றார்.
Also Read: கேரளா: ``என் சாவுக்கு யாரும் காரணமில்லை!'' - தற்கொலை செய்துகொண்ட ஆளுநரின் கார் டிரைவர்
from தேசிய செய்திகள்
0 Comments