உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியூஸ் ஜெயின், திரிமூர்த்தி ஃபிராக்னஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி மூலம் பிரபலமான பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள், பெர்ஃப்யூம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பியூஸ் ஜெயின் ஜி.எஸ்.டி வரி ஏற்பில் ஈடுபட்டதாக கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் அவரின் வீட்டில் வியாழக்கிழமை சோதனை செய்யத் தொடங்கினர்.
கான்பூரில் உள்ள ஜெயின் வீடு, தொழிற்சாலை, குடோன், பெட்ரோல் பங்க், மும்பை, குஜராத்தில் உள்ள அலுவலகம், குடோன்களில் மட்டுமல்லாது ஜெயினுக்கு பெர்ஃபியூம் தயாரிக்க தேவையான பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனம், ஜெயின் பான் மசாலாவை எடுத்து செல்லும் லாரி உரிமையாளர் என அவரோடு தொடர்புடைய அனைவரின் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை மற்றும் நேரடி வரிவிதிப்புத்துறை இணைந்து சோதனையில் ஈடுபட்டது.
ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பேப்பர் பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை எண்ணுவதற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து ஊழியர்களும், நோட்டு எண்ணும் இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டது. பணத்தை எண்ணி முடிக்கவே 36 மணி நேரம் பிடித்தது. சோதனை இரண்டு நாள்கள் நீடித்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அட்டை பெட்டிகளில் அடுக்கி வைத்து கண்டெய்னர் மூலம் எடுத்து செல்லப்பட்டது. பணத்தை எண்ணி முடித்த போது மொத்தம் ரூ.177 கோடி அளவுக்கு ரொக்க பணம் இருந்தது. ரூபாய் நோட்டுக்களை அதிகாரிகள் முன்னிலையில் வங்கி ஊழியர்கள் எண்ணும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. கடந்த மாதம் வரை எந்த வித பிரச்னையும் இல்லாமல் தொழில் செய்து கொண்டிருந்த பியூஸ் ஜெயின் திடீரென சமாஜ்வாடி அத்தர் என்ற பெயரில் பெர்ஃபியூம் ஒன்றை அறிமுகம் செய்தார்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நண்பராக கருதப்படும் பியூஸ் ஜெயின் அறிமுகப்படுத்திய, பெர்ஃபியூம் அவருக்கே சிக்கலை கொண்டு வந்து சேர்த்துள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் தேர்தலை சந்திக்க இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு கடுமையான சவாலை கொடுக்கும் கட்சியாக சமாஜ்வாடி கட்சி விளங்குகிறது. தற்போது பியூஸ் ஜெயின் இல்லங்களில் ரெய்டு நடத்தப்பட்டு ரூ.177 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்து இருப்பதால் சமாஜ்வாடி கட்சி ஊழல் கட்சி என்றும், வரி ஏய்ப்பு செய்பவர்கள் என்றும் பாஜக விமர்சனம் செய்து வருகிறது. ஆனால் பியூஸ் ஜெயினுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பியூஸ் ஜெயின் சொந்தமாக வெளிநாட்டில் இரண்டு கம்பெனி என மொத்தம் 40 கம்பெனிகளை நடத்தி வருகிறார். இந்த கம்பெனிகள் மூலம் வருமான வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பியூஸ் ஜெயின் எப்படி சிக்கினார் என்பது குறித்து பரபரப்பு தகவல் கிடைத்திருக்கிறது.
சிக்கியது எப்படி?
கடந்த சில நாட்களுக்கு முன்பு அகமதாபாத்தில் 4 லாரிகளில் பான் மசாலா ஏற்றி வரப்பட்டது. அதனை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது அதில் ஆவணங்கள் இல்லை. அவை யாருக்கு சொந்தமானது என்று விசாரித்ததில் பியூஸ் ஜெயினுக்கு சொந்தமான பான் மசாலா கம்பெனிக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அந்த பான்மலாசா இந்தியா முழுக்க பிரபலமாக விற்பனையாகும் ஒன்றாகும். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த திடீர் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. பியூஸ் ஜெயின், அவரின் பங்குதாரர்கள் இரண்டு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லாரிகளில் பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களை அனுப்பும் போது 50 ஆயிரத்திற்குள் இல்லாத கம்பெனி பெயரில் இன்வாய்ஸ் பில் தயாரிக்கப்படுமாம். 50 ஆயிரத்திற்குள் பில் இருந்தால் இ-வே பில் தேவையில்லை. இ-வே பில் இருந்தால்தான் ஜி.எஸ்.டி. வரி செலுத்தவேண்டி வரும். ஒவ்வொரு முறையும் இது போன்று பொருட்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு இன்வாய்ஸ் பில் தயாரித்து மோசடி செய்துள்ளனர். அதோடு அதிகமான பணபரிவர்த்தனை ரொக்க பணத்தில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பணத்தை வங்கியில் செலுத்தாமல் பண்டல் கட்டி வீட்டிற்குள் பியூஸ் ஜெயின் அடுக்கி வைத்துள்ளார். இந்த ரெய்டு உத்தரப்பிரதேச தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
from தேசிய செய்திகள்
0 Comments