US Election: `குறில், நெடில்..!’ - ட்ரம்ப் வெற்றியில் ‘பாலினம்’ முக்கியப் பங்காற்றியது எப்படி?

கடந்த சில மாதங்களாக களைகட்டிக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் திருவிழா ஒருவழியாக முடிந்துவிட்டது. குடியரசு கட்சி சார்பாக களமிறங்கிய டொனால்டு ட்ரம்ப் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

தேர்தல் களத்தில் டொனால்ட் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் இருவருமே கடைசி நாள் வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், டொனால்டு ட்ரம்ப் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் தனிநபர் தாக்குதல்களிலும், கமலா ஹாரிஸின் பின்னணி, பூர்விகம் குறித்த மிகவும் ஆணாதிக்க மனப்பான்மை, நிறவெறி கருத்துகளை வெளிப்படுத்தினார் என்பது உலகறிந்த உண்மை.

ஒரு ஆப்ரிக்க அமெரிக்க, இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்கா வாக்களிக்குமா? ஹிலாரி க்ளின்டனால் 8 ஆண்டுகளாக செய்யமுடியாத ஒன்றை கமலாவால் செய்யமுடியுமா என்ற கேள்விகளுக்கு ‘இல்லை’ என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்லியுள்ளனர் அமெரிக்க மக்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று என்று மார்தட்டிக் கொள்ளும் அந்நாட்டில் இன்னும் நிறவெறியும், பாலின பேதமும் புரையோடிக் கிடக்கிறதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.

கருக்கலைப்பு விவகாரம், கமலா ஹாரிஸ் மீதான பாலினம் தொடர்பான தாக்குகுதல் என இந்த தேர்தலில் பாலினம் ஒரு முக்கிய பங்கு வகித்ததை குறிப்பிடவேண்டியது அவசியமாகிறது. ஐயோவா மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 65 வயது அல்லது மேற்பட்ட வயதுடைய பெண்களில் 50 சதவீதத்தினர் கமலா ஹாரிஸுக்கு வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனாலும் அந்த மாகாணத்தில் ட்ரம்ப் தான் வெற்றி பெற்றுள்ளார்.

2016-ல் பெண்கள் குறித்து ட்ரம்ப் மிக மோசமான பேசிய ஒரு வரி, டிக்டாக் உள்ளிட்ட தளங்களில் இந்த தேர்தலில் மிகவும் பிரபலமான முறையில் பயன்படுத்தப்பட்டது. இன்னொரு புறம் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தால் ஆண்களுக்கான முக்கியத்துவம் குறையும் என்று ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த தேர்தல் முழுக்க பேசி வந்தனர். இது ஆண் வாக்காளர்களை ட்ரம்பின் பக்கம் இழுத்தாக கூறப்படுகிறது.

என்பிசி நடத்திய ஓர் ஆய்வில், குடியரசு கட்சிக்கு ஆதரவளித்த ஆண்கள் 40 முதல் 52 சதவீதம் எனவும், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளித்த பெண்களின் எண்ணிக்கை 37 முதல் 58 சதவீதம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்த தேர்தலில் பாலினம் தொடர்பான விவாதங்கள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை தெரிந்து கொள்ளமுடியும்.

வேட்பாளர்களுமே கூட தங்களுடைய இலக்குகளை கருத்தில் கொண்டே பிரசார உத்திகளை கையில் எடுத்தனர். டொனால்டு ட்ரம்ப் இளைஞர்களை கவரும் நோக்கில், தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த பாட்காஸ்டர் ஜோ ரோகனுடன் மூன்று மணி நேரம் ஒதுக்கி கலந்துரையாடினார். இன்னொருபுறம் கமலா ஹாரிஸ் பெண்கள் அதிகம் பின் தொடரும், ‘கால் ஹெர் டாடி’ என்ற பாட்காஸ்ட்டில் கலந்து கொண்டு பேசினார். இருவருமே தத்தமது வழிகளில் வாக்காளர்களை கவர முயற்சித்தாலும் இறுதியில் ட்ரம்ப் தொடர்ந்து உதிர்த்து வந்த ஆணாதிக்க கருத்துகளே வெற்றிபெற்றுள்ளன.

இந்தத் தேர்தலில் கவனிக்கவேண்டிய இன்னொரு விவகாரம் நிறவெறி. தேர்தல் பிரசாரங்களிலேயே நிறவெறி தொடர்பான கருத்துகளை தாராளமாக பயன்படுத்தி வந்தார் ட்ரம்ப். அவருடைய ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்ற பிரசார முழக்கமே காலனித்துவ, நிறவெறி குறித்த சிந்தனையின் வெளிப்பாடுதான் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். குறிப்பாக 1940,50-களில் தான் அமெரிக்கா சிறப்பான நாடாக இருந்தது என்பது ட்ரம்ப்பின் கூற்று. அதாவது அதுதான் தொடர்ந்து ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் நசுக்கப்பட்டு வந்த காலகட்டங்கள். 

 தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக கமலா ஹாரிஸ் ‘இந்தியரா ஆப்ரிக்க அமெரிக்கரா?’ என்ற சர்ச்சையை தனது பிரசார உத்தியாக கையிலெடுத்தார் ட்ரம்ப். 

அதேபோல லத்தீன் இன ஆண்களின் வாக்குகளும் ட்ரம்ப்புக்கு கணிசமாக விழுந்துள்ளன. 2008-ஆம் ஆண்டில் ஒபாவுக்கு 93 சதவீதமாக இருந்த ஆப்ரிக்க அமெரிக்க ஆண்களின் வாக்கு சதவீதம், 2020-ல் பைடனுக்கு 90 சதவீதமாக இருந்தது. ஆனால் கமலா ஹாரிஸுக்கோ அது 73 சதவீதமாக கீழிறங்கிவிட்டதை கவனிக்கவேண்டும். 

எலான் மஸ்க் போன்ற ட்ரம்ப் ஆதரவு கோடீஸ்வரர்கள் சமூக வலைதளங்களில் உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து தன்பாலின ஈர்ப்பாளர்கள், பெண்கள், ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மீது 24 மணி நேரமும் வெறுப்பை கக்கியும் டொனால்டு ட்ரம்ப்பின் இந்த இமாலய வெற்றி சாத்தியம் ஆகியிருப்பது சற்றே கவலையளிக்க கூடிய விஷயம்தான் என்கின்றனர் சமூக அரசியல் ஆர்வலர்கள்.

‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா இறுதியில் சொல்லும் ‘குறில், நெடில்’ ஒப்பீடுதான் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை நோக்கும்போதும் நினைவுக்கு வருகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from India News https://ift.tt/zepcjXY

Post a Comment

0 Comments