அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், `நான் போர்களை தொடங்கப் போவதில்லை; நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களை நிறுத்தப்போகிறேன்' என வெற்றிக் கொண்டாட்டத்தில் சூளுரைத்திருக்கிறார். இதனால், ஆண்டுக் கணக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பாலஸ்தீன்(ஹமாஸ்) போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு உலக மக்களிடையே மிகுதியாக எழுந்திருக்கிறது.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து, வெற்றி பெற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக புளோரிடாவில் உள்ள வெஸ்ட் பாம் பீச்சில் தான் சார்ந்திருக்கும் குடியரசுக் கட்சி தொண்டர்களிடையே உற்சாக உரையாற்றினார். அப்போது பேசிய டொனால்ட் ட்ரம்ப், ``இது அமெரிக்காவின் பொற்காலம். உங்களின் 47-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசாதாரண மரியாதைக்கு அமெரிக்க மக்களாகிய உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஒரு தகுதியான, வலுவான, பாதுகாப்பான, வளமான அமெரிக்காவை நான் வழங்கும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன்.
எனது ஆட்சியில் போர்கள் இல்லை; அந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை தோற்கடித்ததைத் தவிர, வேறு எந்த போர்களும் எங்களிடம் இல்லை. `நான் ஆட்சிக்கு வந்தால் போரைத் தொடங்குவார்' என்று எதிர்க்கட்சியினர் சொன்னார்கள். உண்மையில் நான் போரைத் தொடங்கப் போவதில்லை; நான் போர்களை நிறுத்தப் போகிறேன்!" என அதிரடியாக அறிவித்தார்.
ரஷ்யா, இஸ்ரேல் போர்கள் என குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் ட்ரம்பின் இந்த பேச்சு உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், போரால் பாதிக்கப்பட்டுவரும் பல்வேறு தரப்பினருக்கு நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.
இஸ்ரேல் - காஸா: ட்ரம்புக்கு போர் நிறுத்த கோரிக்கை வைத்த ஹமாஸ்!
குறிப்பாக, இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலால் நிலைகுலைந்து போய்கொண்டிருக்கும் காஸா(ஹமாஸ்)விலிருந்து ட்ரம்பின் பேச்சுக்கு வரவேற்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக, இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிராக போர்புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு,``காஸா பகுதி, மேற்குக் கரையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை, ஆக்கிரமிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் போரை நிறுத்த தீவிரமாக செயல்பட வேண்டும்!" என ட்ரம்புக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``இஸ்ரேலுக்கான ராணுவ ஆதரவை அமெரிக்கா நிறுத்த வேண்டும். சகோதரத்துவ நாடான லெபனான் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். சியோனிச(யூத) நிறுவனத்திற்கு ராணுவ ஆதரவையும் மறைமுக அரசியல் ஆதரவை வழங்குவதையும் நிறுத்த வேண்டும். சுதந்திரம், சுயநிர்ணய உரிமை, ஜெருசலேமை தலைநகராக கொண்டு தங்கள் சுதந்திர பாலஸ்தீனிய அரசை நிறுவுதல் உள்ளிட்ட பாலஸ்தீனிய உரிமைகளை சமரசம் செய்யும் எந்த தீர்வுகளையும் இஸ்ரேல் ஏற்காது. எங்கள் மக்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். பாலஸ்தீன இறையாண்மை குறித்த எங்களின் நீண்டகால நிலைப்பாட்டிற்கும் பாலஸ்தீனர்கள் உரிமை கோரும் பிரதேசங்களில் இஸ்ரேலின் இருப்பை எதிர்ப்பதற்கும் உள்ள நியாயங்களை புரிந்துகொள்ளவேண்டும்.
காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போர் தொடர்பாக ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்க பொதுமக்களால் எழுப்பப்பட்டுவரும் குரல்களைக் கேட்க வேண்டும்!" என ஹமாஸ் அமைப்பு டொனால்ட் ட்ரம்பின் புதிய நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது.
அதேசமயம், இதே ட்ரம்ப் தான் கடந்த 2017-ம் ஆண்டு முதல்முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றபோது, இஸ்ரேல் - பாலஸ்தீன மக்களுக்கு பொதுவாக இருந்த ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததோடு, அங்கு அமெரிக்க தூதரகத்தையும் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா - உக்ரைன் போர்: ட்ரம்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
இரண்டாண்டுகளுக்கும் மேலாக நீடித்துக்கொண்டிருக்கும் ரஷ்யா - உக்ரைன் போரைப் பொறுத்தவரையில் ஜோ பைடனின் தலைமையிலான அமெரிக்காவுக்காவின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை, ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்கா எடுக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். ஆதாவது, ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனை ஆதரித்து ஆயுத உதவிகள் வழங்கியும் வந்தார். ஆனால், டொனால்ட் ட்ரம்போ ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமான நீண்டகால நண்பர். 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு, ரஷ்ய அதிபர் புதின் மறைமுக உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டு அப்போது முதல் இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அதேசமயம், அமெரிக்கா - ரஷ்யா பனிப்போர் என்ற வழமைக்கு மாறாக இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசிக்கொண்ட தருணங்களும் ட்ரம்பின் ஆட்சியில் நடந்தவை. அதுமட்டுமல்லாமல், ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போரில் ட்ரம்ப் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுப்பார் என யூகிக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். அதாவது, ரஷ்யாவுக்கு ஆதரவான ஒப்பந்தத்துடன் போர் நிறுத்தம் கொண்டுவருவார் ட்ரம்ப் என்கிறார்கள்.
ஏனெனில், ஏற்கெனவே ட்ரம்ப், `ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் முடிவுக்கு கொண்டுவரலாம். அதற்கான வழிமுறை என்னிடம் இருக்கிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதே அமெரிக்காவுக்கு சிறந்த நலன் என்று நான் நினைக்கிறேன்' எனப் பலமுறை பேசியிருக்கிறார். இந்த நிலையில், அதற்கான முன்னெடுப்புகள் நடக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``அதிபர் ட்ரம்ப் தலைமையில் வலுவான அமெரிக்க சகாப்தத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம். வலிமையின் மூலம் அமைதியான அணுகுமறையை கையாளும் அதிபர் ட்ரம்பின் உறுதிபாடு பாராட்டத்தக்கது. கூட்டாண்மையைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் இருக்கிறோம்!" என்று டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
போர் நிறுத்தம் வருமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
from India News https://ift.tt/5qQSx1s
0 Comments