``திமுக அரசு மதுரை மாநகராட்சியை புறக்கணிக்கிறது..." - செல்லூர் ராஜூ காட்டம்

சமீபத்தில் பெய்த மழையில் பாதிப்புக்கு உள்ளான மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அங்கிருந்த அதிகாரிகளிடம் 'பணிகள் ஏன் இவ்வளவு மந்தமாக நடைபெறுகிறது?' என கேள்வி எழுப்பினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ பேசும்போது, "மதுரை செல்லூர் பகுதி ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதி. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்போது கடந்த 20 நாள்களாக அப்பகுதியில் கழிவு நீர் தேங்கியதால், குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவி வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள். கழிவு நீரை அகற்றும் நவீன இயந்திரங்கள் சென்னையில் உள்ளதுபோல் மதுரை மாநகராட்சியில் இல்லை. திமுக அரசு, மதுரை மாநகராட்சியை புறக்கணிக்கிறது.

வெள்ள நீர் புகுந்த நரிமேடு மற்றும் செல்லூர்

மாநகராட்சி நிர்வாகம்...

செல்லூர் பகுதியில் சுணக்கமாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளால் குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மழை பாதிப்பு ஏற்பட்ட பின்னர் கால்வாய்களை தூர்வாரும் மாநகராட்சி, அதை ஏன் மழை காலத்திற்கு முன்பே மேற்கொள்ளவில்லை? மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது மீனாம்பாள்புரம், கட்டபொம்மன் தெரு, பந்தல்குடி கால்வாயை சுற்றியுள்ள பகுதிகள்தான். செல்லூர் கால்வாய்க்கு 11 கோடிரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். அதை ஏன் முன்கூட்டியே ஒதுக்கவில்லை? பந்தல்குடி கால்வாய்க்கு 86 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.

மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது, எதற்கெடுத்தாலும் நிதி இல்லை என கூறுகிறது. பருவ மழைக்கு முன்னதாகவே ஆய்வு கூட்டம் நடத்தியவர்கள் மதுரையில் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் கண்டறிந்து ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.?

இந்த அரசாங்கம் பெயரளவிற்குதான் ஆட்சி நடத்துகிறது. எந்த கூட்டணி பலமாக இருந்தாலும், இந்த அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பு காரணமாக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் போகிறது.

 இந்த தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர், வெள்ள பாதிப்பின்போது பார்வையிட வந்தபோது என்ன செய்யவேண்டும் என்று நானும் அவரிடம் கூறியிருந்தேன். செய்தாரா என்பதை அவரிடம் நீங்கள்தான் கேட்க வேண்டும்" என்றார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் கருத்து...

"திமுக எனும் ஆலமரத்தை வெட்ட சிலர் பிளேடுடன் வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளாரே" என்ற கேள்விக்கு,

"சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான், வெள்ளத்தில் ஆலமரமே பிடுங்கிக் கொண்டு போயிருக்கிறது, உலகமே அழிந்திருக்கிறது. இதெல்லாம் புதுசா வந்த உதயநிதிக்கு தெரியவில்லை. எத்தனை கூட்டணி பலம் இருந்தாலும் மக்கள் பலம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மக்கள்தான் எஜமானர்கள் அந்த மக்களுக்கு வேலை செய்யாமல் கூட்டணி பலத்தோடு மக்களை போய் சந்தித்தால் ஒன்றும் செய்ய முடியாது"

கூட்டணி ஆட்சி..

" கூட்டணி அமைத்தாலும் ஆட்சி அமைக்க முடியாது, அதிமுகவில் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என ஓபிஎஸ் கூறியுள்ளாரே" என்ற கேள்விக்கு,

"அவர் அவரது கருத்தை சொல்கிறார், நமது கட்சி வலுவாக உள்ளது. மக்கள் பணியை பாருங்கள், மற்ற வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என எங்கள் பொதுச்செயலாளர் கூறியுள்ளார். மக்கள் குறைகளை எடுத்துக் கூறுங்கள் என கூறியுள்ளார் அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்"

செல்லூர் ராஜூ

"2026-ல் கூட்டணி ஆட்சி அமையும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாரே" என்ற கேள்விக்கு,

"கூட்டணி குறித்து இப்போதெல்லாம் சொல்ல முடியாது. இதே பாட்டாளி மக்கள் கட்சியினர் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள், பத்து நாள்களில் கூட்டணி மாறியது. தேர்தல் நேரத்தில் எந்தெந்த கட்சிகள் யாரோடு இருக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். கொள்கை ரீதியாக அல்ல. இப்போது கூட்டணி பற்றி பேசுவது தேவையில்லை. கூட்டணி குறித்து யாரும் எது வேண்டுமானாலும் பேசுவார்கள்"

நீர்நிலை ஆக்கிரமிப்பு..

"நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மதுரை முல்லை நகர்பகுதி மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளாரே" என்ற கேள்விக்கு,

"முல்லை நகர் இன்று நேற்று உருவானது அல்ல, 60 ஆண்டுகளாக அப்பகுதியில் பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். அப்பகுதிக்குள் தண்ணீர் போனதற்கு காரணம், அமைச்சர் தொகுதியிலிருந்து வெளியேறிய கழிவுநீரை முல்லை நகருக்கு திருப்பி விட்டதால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டது. எங்கள் ஆட்சியில் ஒரே ஒருமுறை மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அதற்கான வழி வகையை செய்தோம்.

செல்லூர் ராஜூ

பொதுப்பணித்துறையினர் முறையாக கால்வாய்கள், வடிநீர் வாய்க்கால்களை தூர்வாரி இருந்தால் முல்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் புகுந்திருக்காது. நீதி அரசர் கூறியுள்ளது முல்லை நகர் பகுதி மக்களுக்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீர் நிலை ஆக்கிரமிப்புகள் குறித்துதான். மதுரை மாநகராட்சி அலுவலகம் நீர் நிலையில்தான் உள்ளது. மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீர் நிலையில்தான் உள்ளது. சென்னையில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் நீர் பிடிப்பு பகுதியில்தான் உள்ளது இதையெல்லாம் எப்போது அகற்றுவது?

நீர்வழிச் சாலைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றலாம், அதற்காக 60, 70 ஆண்டுகளால வசிக்கக்கூடிய, அரசுக்கு அனைத்து வரியும் கட்டும் பொதுமக்களை திடீரென வெளியேறுங்கள் என கூறினால் எங்கு செல்வார்கள்? நீர்நிலையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்றால் முதலில் உயர்நீதிமன்ற கிளையைத்தான் அகற்ற வேண்டும்.." என்றார்.



from India News https://ift.tt/c9hHf1i

Post a Comment

0 Comments