ஒன் பை டூ

பார்த்தசாரதி

பார்த்தசாரதி, துணை பொதுச்செயலாளர், தே.மு.தி.க

“உள்ளதைத்தானே சொல்லியிருக்கிறார்... சீமான் ஓர் அரசியல் பச்சோந்தி. காலை ஒன்று பேசுவார்... மதியம் ஒன்று பேசுவார். `பெரியார் என் தலைவர்’ என்பார், பிறகு அவரையே தரக்குறைவாக ஏசுவார். கேப்டன் புகழ் பாடிவிட்டு அதே வாயால் வசைபாடவும் செய்வார். இவரைப் போன்ற ஒரு சந்தர்ப்பவாதியை வரலாறு பார்த்ததில்லை. நேற்று வரை, `தம்பி... தம்பி...’ என்று விஜய்யைச் சொல்லிக் கொண்டிருந்தார். இன்று விஜய் தனது அரசியல் கொள்கைகளைச் சொன்னதும், சீமானுக்குத் தாங்க முடியவில்லை. எங்கே தன்னுடைய வாக்குகளையெல்லாம் விஜய் அள்ளிக்கொண்டு போய்விடுவாரோ என்ற பயத்தில் உளறிக்கொட்டுகிறார். தே.மு.தி.க அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்கப்பட்ட தலைவரைக்கொண்ட இயக்கம். லஞ்சம், ஊழலுக்கு எதிராக அனைவருக்குமான அரசியல் இயக்கமாக தே.மு.தி.க-வைத் தொடங்கினார் கேப்டன். இன்றுவரை மக்கள் பிரச்னைக்காக நாங்கள் களத்தில் நிற்கிறோம். எங்களை விமர்சிப்பவர்களைக்கூட மரியாதையாகத்தான் கையாள்வோம். இப்படி எந்த அரசியல் மாண்புமற்ற சீமான் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியாது. அந்த ஆதங்கத்தில்தான் அவர் மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருக்கிறார். இப்படியே பேசிக்கொண்டிருந்தால் மக்கள் ஒருபோதும் அவரை அங்கீகரிக்க மாட்டார்கள்!”

இடும்பாவனம் கார்த்திக்

இடும்பாவனம் கார்த்திக், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நா.த.க

“எந்த கொள்கைப் பிடிப்பும் இல்லாத தே.மு.தி.க-வுக்கு எங்களை விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது... உண்மையில் நாம் தமிழர் கட்சிக்கும், சீமானுக்கும் விஜய் மீது எந்தக் கோபமும் இல்லை. அவருடன் எங்களுக்குத் தத்துவார்த்த முரண், கருத்தியல் சண்டை நடக்கிறது. திராவிடம் என்ற கருத்தை யார் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று விஜய் தனது கட்சிப் பெயரை அறிவித்தபோது நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால், கருத்தியல் முரண்பாட்டை விமர்சிக்காமல் இருக்க முடியாது. தேசியம், திராவிடம் என்று கட்சியின் பெயரிலேயே முரண்பாட்டைக்கொண்டிருக்கும் தே.மு.தி.க-வுக்கு வேண்டுமானால் விஜய்யின் கருவாட்டுச் சாம்பார் ருசியாக இருக்கலாம். எங்களுக்கு அது பொருந்தாது. தே.மு.தி.க கொள்கையும் இல்லாத, கோட்பாடும் இல்லாத காலி மண்டபம். தேய்மானம் அடைந்த கட்சி. இன்று ஒரு கூட்டணி நாளை, வேறு கூட்டணி என்று எந்தப் பக்கம் வேண்டுமானாலும் குடை பிடிப்பார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது, `மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி’ என்றார். அப்படித்தான் தே.மு.தி.க இருக்கிறதா... பக்கத்து வீட்டில் அண்ணனை உட்காரச் சொல்லிவிட்டு, எதிர்த்த வீட்டில் தம்பியுடன் பேரம் நடத்துகிறவர்கள் மற்றவர்களைப் பார்த்து பச்சோந்தி என்று விமர்சிப்பது நகைப்புக்குரியது.”



from India News https://ift.tt/Z7JlITK

Post a Comment

0 Comments