திருப்பரங்குன்றத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்குவதை கண்டித்து, திருப்பரங்குன்றத்தில் கண்டன அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா முன்னிலை வகித்தார்.
விலை ஏற்றம்
ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது "அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் எந்தவொரு விலை ஏற்றமும் செய்யாமல், மக்களுக்கான திட்டங்களை அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்து வந்தது. ஆனால், திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது சொத்துவரி, வீட்டு வரியையும், மின்சார கட்டணம் உள்ளிட்ட மக்களுக்கான அனைத்து சேவைகளுக்கும் விலை ஏற்றம் செய்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்.
`அதிமுக கொண்டு வந்த திட்டம் முடக்கம்..'
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை முடக்கியுள்ளனர். பாதாள சாக்கடை திட்டம், லோயர் கேம்ப் கூட்டு குடிதீர் திட்டம் முடங்கி உள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குவதை மறந்துவிட்டு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்கி வைத்துள்ளனர்.
நீட் தேர்வு, கல்விக்கடன், நகைக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என்னாச்சு என்று சட்டமன்றத்தில் கேள்வி கேட்ட பிறகுதான் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் குறைவான அளவில் மட்டும் கொடுத்ததார்கள். கேட்டால் தகுதியானவர்களுக்கு கொடுத்தோம் என்கிறார்கள். மக்கள் தகுதி பார்த்து வாக்களித்திருக்க வேண்டும். ஆட்சிக்கு வர பொய்யான வாக்குறுதி கொடுப்பது திமுகவின் வழக்கம்.
கள்ளச்சாராயம், போதைப்பொருள்
அதிமுக ஆட்சியில் எங்கேயும் கள்ளச்சாராயம் கிடையாது. ஆனால், இப்போது போலீசார் கைகள் கட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் 69 பேர் கள்ளச்சாராயத்தால் பலியானார்கள். இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள் சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மூன்று லட்சம்தான் கொடுத்தார்கள். எங்கள் ஆட்சியில் இருந்த காவல்துறைதான் இப்போதும் உள்ளது. ஆனால், தமிழகமே போதைப்பொருள்களால் சுருண்டு கிடக்கிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிடும். நாடாளுமனற தேர்தல் நாட்டை யார் ஆள்வது என்பதற்கான தேர்தல். ஆனால், சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியாரா? ஸ்டாலினா? என்றால் மக்கள் எடப்பாடியார்தான் வர வேண்டும் என்கின்றனர்" என்று பேசினார்.
`12% வாக்கு எங்களுக்கே வரும்'
பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாதாள சாக்கடை திட்டம் உள்பட அடிப்படை திட்டங்கள் எதுவுமே செயல்படவில்லை. அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இத்தொகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்தும் செயல்படுத்தப்படவில்லை. அதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சியில் இந்த பிரச்னைகள் சரி செய்யப்படும்." என்றவரிடம்,
ஆட்சி பற்றி வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே சாட்சி என முதல்வர் கூறியுள்ளாரே?' என்ற கேள்விக்கு,
"நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு 6 சதவிகித வாக்குகள் குறைந்திருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் 6 சதவிகிதம் குறையும் அந்த 12 சதவிகிதமும் எங்களுக்கு வரும்"
'அதிமுகவில் பிரிந்த அணிகள் ஒன்று சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும் எனக் கூறுகிறார்களே' என்ற கேள்விக்கு,
"கட்சியில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச்செயலாளர் முடிவெடுப்பார்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
from India News https://ift.tt/jaPds7y
0 Comments