தென்காசி புத்தகத் திருவிழா: கூட்ட நெரிசலில் தவிக்கும் மாணவர்கள்; அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை!

பொதிகை புத்தகத் திருவிழா

தென்காசி மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டு பொதிகை புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பொதிகை புத்தகத் திருவிழாவினை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். தென்காசி இ.சி.ஈ. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் இந்த புத்தக திருவிழாவில் தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள், அரசுத்துறைகளின் திட்ட விளக்க அரங்குகள், சாதனை விளக்க படம், வனத்துறை அரங்கு உள்பட 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

மாணவர்கள்

15.11.2024 தொடங்கி 24.11.2024 வரை 10 நாள்கள் நடைபெற உள்ள புத்தக திருவிழாவின் ஒவ்வொரு நாளும் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறப்புரை, சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது. இதுதவிர நூல் வெளியீட்டு விழா, கலைநிகழ்ச்சி, கருத்தரங்கு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து செய்திருக்கின்றன.

நிகழ்ச்சிக்கு வருகைத்தரும் வாசிப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்காக அடிப்படை வசதிகள், ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டதாக கூறினார்கள்.

இந்தநிலையில், புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன.

அடிப்படை வசதிகள் இல்லை... 

கூட்ட நெரிசல்

இது தொடர்பாக புத்தக திருவிழாவிற்கு வந்திருந்த பள்ளி மாணவ மாணவிகள் சிலரிடம் பேசினோம். அப்போது அவர்கள் தெரிவிக்கையில், "தென்காசியில் முதல் முறையாக புத்தகத் திருவிழா நடைபெறுவதை வரவேற்கிறோம். ஆனால் ஏற்பாடுகள் தான் திருப்திகரமாக இல்லை. புத்தகத் திருவிழா திறந்தவெளியில் அல்லாமல் கூட்டஅரங்குக்குள், புத்தக அரங்குகளை அமைத்துள்ளனர்.

எழுபதிற்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ள அந்த கூட்டஅரங்குக்குள் எதிரெதிர் கடைகளுக்கு இடையே சுமார் 5 அடி இடைவெளிதான் உள்ளது.

இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. புத்தக அரங்கினுள் சரியான அளவு காற்று சுழற்சி இல்லை, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. அவசர கால வழியும் கூட போதுமான இடைவெளியோடு இல்லை. வெளியே குளிர்ந்த சீதோஷ்ண நிலை இருந்தாலும் கூட்டரங்குக்குள் வீசும் அனலால், ஆர்வத்தோடு உள்ளே நுழைபவர்கள் கூட அவசர, அவசரமாக வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

`புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி இல்லை..'

மொழிபெயர்ப்பு நாவல்கள், முன்னணி பதிப்பகங்கள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. மாணவ- மாணவிகளுக்கான கழிப்பறைகளில் தண்ணீர் இல்லை, மின் விளக்கு வசதியும் இல்லை. குடிநீருக்காக அரங்குக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் டம்ளர் இல்லை. இதுபோன்ற குறைபாடுகள் புத்தக திருவிழாவுக்கு வருபவர்களை அசௌகர்யமாக உணர வைக்கிறது.

பில்: தள்ளுபடி விலை இல்லாமல் புத்தகம் விற்பனை

மாணவர்களாகிய எங்களுக்கு பெரிதும் விருப்பமானது காமிக்ஸ் புத்தகங்கள், விடுகதைகள், சிறுகதைகள் மற்றும் சிறு சிறு நூல்கள் தான். பொதுவாக, புத்தகத் திருவிழாவில் நூல்கள் வாங்கும்போது 10 முதல் 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என கேள்விப்பட்டோம். ஆனால், இங்கு நாங்கள் வாங்கிய எந்த புத்தகத்திற்கும் சலுகை தரப்படவில்லை.

பில்: தள்ளுபடி விலை இல்லாமல் புத்தகம் விற்பனை

ஒரு புத்தகத்தின் அதிகபட்ச விற்பனை விலை எதுவோ அதைத்தான் வசூலித்தார்கள். இதனால் வாங்க நினைத்த சில புத்தகங்களை வாங்கமுடியவில்லை" என்றனர்.

`இடவசதி இல்லாதது தோல்வி'

பள்ளி ஆசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், "பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களையும் ஒரே இடத்தில் வாங்க முடியும், மாணவர்களுக்கு புத்தகம் மீதான காதலை அதிகப்படுத்த முடியுமென்பது இந்த புத்தக திருவிழாவின் வெற்றி படிக்கட்டுகள் ஆகும். ஆனால், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோரை ஒருங்கிணைக்க சரியான இடவசதி இல்லாதது தோல்வி. எங்கள் பள்ளியில் இருந்து சுமார் 450 மாணவ-மாணவிகள் புத்தகத் திருவிழாவிற்காக வந்திருக்கிறார்கள்.

இருட்டடைந்த கழிவறை

இதுபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மாணவ- மாணவிகள் வேன், பஸ் மூலமாக புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஒரே நேரத்தில் புத்தக அரங்குக்குள் நுழையும்போது விலகுவதற்கு கூட இடமின்றி சிரமத்தை சந்திக்கின்றனர். மாணவிகள் பலரும் தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.

மாணவிகள்

இங்கு உள்ளே, புத்தக அரங்குகள் பல வரிசைகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவழியாக நுழையும் மாணவ-மாணவிகள் அடுத்த அரங்குக்கு நுழையும் முன்பாக, அடுத்தடுத்து வெவ்வேறு பள்ளியை சேர்ந்த மாணவர்களும் கூட்டத்தோடு கலந்து விடுகின்றனர். இதனால் ஒவ்வொரு பதிப்பக அரங்கிலும் என்னென்ன புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது என தெரிந்துக்கொள்வதற்கு கூட நேரமில்லை. பிள்ளைகளை தனியே விட்டுவிடக்கூடாது என்ற அக்கறையில் அங்கிருந்து அவசரகதியில் நகர்ந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யலாம். இதனால் சற்றே கூட்ட நெரிசல் குறையும்‌.

`மழைக்கு ஒதுங்க கூட முடியாது..'

ஒட்டுமொத்தமாக எல்லோரும் ஒரே அரங்கினுள் நுழைவதால் கூட்ட நெரிசலில் உடல் பலனில்லாத மாணவர்கள் சிலருக்கு மூச்சுத் திணறலும் உண்டாகிறது. இதுதவிர, தற்போது தென்காசியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. அதுபோல் அடிக்கடி பெய்யும் திடீர் மழையிலிருந்து ஒதுங்குவதற்கு இங்கு பள்ளிக்கட்டிடங்கள் தவிர வேறு ஏற்பாடுகள் எதுவும் இல்லை.

பள்ளி

'புட் கோர்ட்' வசதி செய்து கொடுத்தவர்கள், வாங்கிய உணவுகளை அமர்ந்து சாப்பிடுவதற்கும், குப்பைகளை முறையாக ஒரு இடத்தில் சேகரிப்பதற்கும், இடவசதிகளை செய்யாமல் போனதால் வீணான உணவு பொருள்கள், காலி பாட்டில்கள், ஐஸ்கிரீம் டப்பா, குச்சி என ஆங்காங்கே வீசிவிட்டு செல்வது சுய ஒழுக்கத்தை கெடுக்கும் செயலாகப்படுகிறது.

கழிவறை நிலை

தமிழக அரசாங்கம் புத்தகக் கண்காட்சி நடத்திட ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தலா 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு அளிக்கிறது. அதன்படி, ஏற்பாடுகளை இன்னும் விரிவாக, பிரமாண்ட முறையில் புத்தக கண்காட்சியை நடத்தலாம். அரசு நிகழ்ச்சியை அரசுப்பள்ளியில் நடத்துகிறார்கள் என்ற ஆறுதல் ஒன்றே மிச்சம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from India News https://ift.tt/9V8LWa6

Post a Comment

0 Comments