கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி அங்கு புற்றுநோய் தலைமை மருத்துவரான பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியெடுத்திருக்கிறது. முதலமைச்சர் தொடங்கி அனைத்து அரசியல் கட்சியினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்க, மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனக்கோரி அரசு மருத்துவர்கள், செலியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தாக்குதலுக்குள்ளான மருத்துவர் பாலாஜிக்கு கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு, உடல் நலம் தேறியிருக்கிறார். அதேசமயம், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரை கைதுசெய்த காவல்துறை அவர்மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்திருக்கிறது.
காவல்துறையில் புகாரளித்திருக்கும் இளைஞரின் தாய்:
இந்த நிலையில், தாக்குதல் நடத்திய இளைஞர் விக்னேஷின் தாய் பிரேமா, சம்மந்தப்பட்ட டாக்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், கிண்டி காவல் நிலையத்தில் புகார் கடிதம் ஒன்றைகயும் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகாரில், ``கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி என்னுடைய கணவர் மனோகர் இறந்து விட்டார். மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி எனக்கு உடல் நலம் சரியில்லாததால் தனியார் மருத்துவமனையில் 18 நாள்கள் சிகிச்சை பெற்றேன். அப்போது எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். என்னிடம் போதிய பணம் இல்லாததால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்றேன். அங்கு எனக்கு 95,000 ரூபாய் வரை செலவானது. அதனால் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனர். அதனால் மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற பணம் இல்லாததால் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு கடந்த 10.1.2024-ம் தேதி சென்றேன். பின்னர் 14.1.2024-ம் தேதி முதல் 17.1.2024-ம் தேதி வரை என்னை அங்கு அட்மிட் செய்து எனக்கு சிகிச்சை அளித்தனர்.
`ஸ்கேன் ரிப்போர்ட்டை டாக்டர் கையில்கூட வாங்கிப் பார்க்கவில்லை!'
அதன்பிறகு எனக்கு 14 நாள்களுக்கு ஒரு முறை ஊசி போடப்பட்டது. 5-வது ஊசி போடும் போது என்னுடைய உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதால் டாக்டர் பாலாஜியிடம் அதுகுறித்து கூறினேன். உடனே அவர், ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தினார். அதன்படி ஸ்கேன் எடுத்துவிட்டு அவரிடம் காண்பித்தபோது அதை அவர் கையில் கூட வாங்கி பார்க்கவில்லை. கடந்த 15.5.2024-ம் தேதி எனக்கு உடல்நலம் சரியில்லாததால் ஒருவாரம் அங்கு அட்மிட் செய்யப்பட்டேன். அப்போது எனக்கு என்ன பிரச்னை என்று மருத்துவமனையில் யாரும் சொல்லவில்லை. என்னுடைய உடல் நலம் மிகவும் மோசமானதால் மீண்டும் நான் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன். அப்போது அங்கிருந்த டாக்டர்கள், எனக்கு 5-வது ஊசி போடும் போது என்னுடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதன்பிறகும் உங்களுக்கு ஏன் ஊசி போட்டார்கள் என்று கூறினர். இதையடுத்து வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு வீட்டில் நோயாளியாக சிகிச்சையில் உள்ளேன்.
`இருதய நோயாளியான என் மகனை மார்பிலேயே எட்டி உதைத்தனர்'
மீண்டும் ஸ்கேன் எடுக்க வடபழனிக்குச் சென்றபோதுதான் எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், என்னுடைய மகன் விக்னேஷ், கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை தாக்கிவிட்டதாகவும் நியூஸ் சேனலைப் பார்க்கும்படியும் கூறினார். நான் நியூஸ் சேனலைப் பார்த்தபோது டாக்டர் பாலாஜியை கத்தியால் என்னுடைய மகன் குத்திவிட்ட செய்தியைப் பார்த்தேன். என் மகன் அந்தமாதிரி ஆள் கிடையாது. அங்கு பணியிலிருந்த அடையாளம் காட்டக்கூடிய அரசு மருத்துவர் எனது மகனை எட்டி உடைத்ததோடு மூக்கு, வாயில் குத்தினார். என் மகன் இருதய நோயாளி என்று தெரிந்தும் மார்பிலேயே அங்கிருந்த சிலர் எட்டி உதைத்தனர். என்னுடைய மகனின் உயிரைப் பறிக்கும் நோக்கத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" எனத் தனது புகார் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
டாக்டர் மீது புகார்களை அடுக்கும் விக்னேஷ் குடும்பத்தினர்:
அதேபோல விக்னேஷின் சகோதரர் கமலேஷ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ``Hodgkin lymphoma என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் என் அம்மா பிரேமாவுக்கு சிகிச்சை அளிப்பதில் ஆரம்பம் முதலே டாக்டர் பாலாஜி அலட்சியமாக நடந்துகொண்டார். தவணை முறையில் என் அம்மாவுக்கு ஊசியை டாக்டர் போடும்போதே, மூச்சு வாங்குகிறது என அம்மா சொல்லியிருக்கிறார். அதைப் பொருட்படுத்தாமல், `நீ டாக்டரா? நான் டாக்டரா? இந்த ஊசிப் போட்டால் இப்படித்தான் இருக்கும்' எனச் சொல்லி கடுமையாக நடந்துகொண்டார் டாக்டர் பாலாஜி. அதன்பிறகு, அம்மாவுக்கு ஸ்கேன் எடுத்துப்பார்த்ததில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. ஆனால், அந்த ஸ்கேனையும் டாக்டர் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகும் டாக்டர் தொடர்ந்து அந்த ஊசியைப் போட ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு நுரையீரல் பாதிப்பு கடுமையாகிவிட்டது. அதன்பிறகு, வேறு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்ததில், அம்மாவின் உடம்புக்கு சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டாலும் பெரிய சிக்கல் ஏற்படும் என அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் மன அழுத்தத்திலும்தான் விக்னேஷ் இதுபோன்று செய்துவிட்டான்" எனத் தெரிவித்திருகிறார்.
தொடர்ந்து, விக்னேஷின் குடும்பத்தினர், ``டாக்டரை விக்னேஷ் கத்தியால் குத்தியது பற்றி முன்பே எங்களுக்கு எதுவும் தெரியாது. இதைப் பற்றி அவன் எங்களிடம் எதுவுமே பேசவில்லை. அவன் இப்படி செய்யப் போகிறான் என்று தெரிந்திருந்தால் நாங்கள் அவனைத் தடுத்து நிறுத்தியிருப்போம். அவன் செய்தது தவறுதான். அதேசமயம், அந்த டாக்டரின் சிகிச்சையால் எங்கள் வீட்டிலும் ஒரு உயிர் கடுமையாக பாதிக்கப்பட்டு கிடக்கிறது. எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பேச இங்கு யாருமே இல்லையே!" எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
மருத்துவம் தொடர்பாக புகார் தெரிவிக்க சட்டம் என்ன சொல்கிறது?
பொதுவாக இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், தேசிய மருத்துவ ஆனையம் உள்ளிட்டவை ஒரு மருத்துவருக்கான மருத்துவ நெறிமுறைகள் விதிமுறைகள், மருத்துவரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விரிவாக வகுத்தளித்திருக்கிறது. குறிப்பாக, ``ஒரு மருத்துவர் தனது தொழிலின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் நிலைநாட்ட வேண்டும், நோயுற்றோரைக் கவனிப்பதில் விடாமுயற்சியுடனும், நிதானமாகவும், பொறுமையாகவும், பதட்டமில்லாமல் தனது கடமையைச் செய்வதில் உடனடியாகவும் இருக்க வேண்டும். ஒரு மருத்துவ சிகிச்சையை மேற்கொண்ட பிறகு, மருத்துவர் நோயாளியை புறக்கணிக்கக்கூடாது, நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போதுமான அறிவிப்பு கொடுக்காமல் அதிலிருந்து விலகக்கூடாது. பதிவுசெய்யப்பட்ட மருத்துவர் வேண்டுமென்றே அலட்சியச் செயலைச் செய்யக்கூடாது" என பல்வேறு ஒழுக்கங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது.
அதேபோல, மருத்துவர் தனக்கான கடமையிலிருந்து தவறினால், அதாவது `மருத்துவ அலட்சியம்' செய்தாலோ, அதனால் சம்மந்தப்பட்ட நோயாளி பாதிக்கப்பட்டாலோ அதற்கு சட்டப்படியான நடவடிக்கையை பாதிக்கப்பட்டவர் மேற்கொள்ளவும் வழிவகைகள் சட்டத்தில் இருக்கின்றன. `இந்திய மருத்துவ கவுன்சில் (தொழில்முறை நடத்தை, நெறிமுறைகள் மற்றும் நெறிமுறைகள்) விதிமுறைகள், 2002'-ன்படி அதற்கான பிரத்யேக சட்டங்கள் இருக்கின்றன. முதல்கட்டமாக சம்மந்தப்பட்ட மருத்துவர் அல்லது மருத்துவமனை பயிற்சியாளர்கள் மீது மாநில மருத்துவக் கவுன்சில் அல்லது இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு தொழில்முறை முறைகேடு தொடர்பாக புகாரளிக்கலாம். அதேசமயம், மாநில மருத்துவ கவுன்சில் ஆறு மாதங்களுக்கும் மேலாக புகார்மீது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றால், புகார்தாரர் இந்திய மருத்துவ கவுன்சிலை(MCI) அணுகலாம். இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாநில கவுன்சிலில் இருந்து வழக்கைத் திரும்பப் பெறவும், அதை தங்களுக்கு மாற்றவும் அதிகாரம் இருக்கிறது.
அதேபோல, மாநில மருத்துவ கவுன்சிலின் முடிவால் ஒருவர் திருப்தி அடையவில்லை என்றால், கவுன்சிலின் உத்தரவைப் பெற்ற 60 நாட்களுக்குள் முடிவை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சிலுக்குச் செல்லலாம். இருப்பினும், 60 நாட்கள் கடந்துவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் புகாரை MCI ஏற்கலாம் அல்லது ஏற்காமலும் போகலாம். மருத்துவ கவுன்சிலுக்கு இப்படியான புகார் வந்தவுடன், சம்பந்தப்பட்ட டாக்டரிடம் கவுன்சில் விசாரணை மேற்கொள்ளும். விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட மருத்துவருக்கான தண்டனை கவுன்சிலால் தீர்மானிக்கப்படும். அதில் மருத்துவர் மேற்கொண்டு மருத்துவம் செய்வதற்கு இடைக்காலத் தடைகூட விதிக்கப்படலாம்.
இவை தவிர, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986-ன் கீழும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் மருத்துவர்களுக்கு எதிராக மருத்துவ அலட்சியச் செயல்பாட்டுக்காக, சேவைக் குறைபாட்டிற்கான புகாரை நுகர்வோர் மன்றத்தில் தாக்கல் செய்யலாம். இந்திய தண்டனைச் சட்டம், 1860ன் பிரிவு 304-A இன் கீழ் சிவில் அல்லது குற்றவியல் வழக்கும்கூட தொடரலாம்.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
from India News https://ift.tt/fvN7HFI
0 Comments