இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பல்வேறு கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதன்பேரில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி சார்பில் ஆளும் திமுக சார்பில் மார்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.சச்சிதானந்தம் வேட்பாளராக களம் காண்கிறார். இவருக்கு ஆதரவாக உள்ளூர் அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வேளையில் நேற்று (07.04.2024) பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனி நகர், ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், பச்சளநாயக்கன்பட்டி, கணக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆர்.சச்சிதானந்தம், பிறகு பழனி-ரயில்வே ஃபீடர் ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்ட்) முன்னாள் பொதுச்செயலாளர் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி. செந்தில் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பிரகாஷ் காரத் பேசுகையில், ``நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் என்பது எப்போதும் நடைபெறுவது போல சாதாரணமான, வழக்கமான ஒரு தேர்தல் அல்ல..! இது ஒரு புதிய அத்தியாயத்தை, புதிய அரசாங்கத்தை, மக்களின் வாழ்வாதாரத்தை காக்கிற ஒரு மிக முக்கியமான தேர்தல். அத்தோடு இந்தியாவில் மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் காக்கின்ற ஒரு ஒப்பற்ற தேர்தல்.
அதற்காகத்தான் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் யாவும் தங்கள் கொள்கைகளை விடுத்து, தங்கள் கட்சியின் முரண்பாடுகளை விடுத்து அனைவரும் "இந்தியா" என்ற மகத்தான ஒற்றை கூட்டணியின் கீழ் மதச்சார்பின்மையை காப்பதற்காக ஒன்று கூடியுள்ளோம்.
இன்று மோடி அரசாங்கம் இத்தேர்தலை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ள திராணியற்று, எதிர்க்கட்சிகளை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள முடியாமல் பல்வேறு அடக்குமுறைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும் உட்படுத்தி "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு முதலமைச்சர்கள்... ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரையும் கொடுங்கோல் பாஜக அரசாங்கம் ஜனநாயகமற்ற முறையில் தங்களின் கைப்பாவையாக வைத்துள்ள அமலாக்கத்துறையை ஏவி விட்டு சிறையில் அடைத்துள்ளது.
சட்டத்தின் ஆட்சியின் மீது நம்பிக்கையற்று, ஒடுக்கு முறை அதிகாரத்தின் மேல் நம்பிக்கை கொண்டு அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள முடியாமல் ஆளும் பாஜக அரசாங்கம் ஒடுக்கு முறையின் மூலம் எதிர்கொள்ள முயலுகிறது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையையும், அபரிவித வளர்ச்சியையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள பாஜக தங்களின் கைப்பாவையாக, ஏவல் தூதுவர்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கிற ED மற்றும் வருமானவரித்துறை மூலம் தன் சர்வாதிகாரத்தை பயன்படுத்தி எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கிற மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பிரதான கட்சிகளின் முக்கிய தலைவர்கள் என அனைவரையும் அச்சுறுத்தும் வகையிலும், அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவர்களை மிரட்டி, அச்சுறுத்தி அதிகார தூஷ்பிரயோகம் செய்து வருகிறது.
பாஜக'வானது ஆர்எஸ்எஸ் அமைப்பினுடைய கொள்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துகிற இயக்கமாகவும் இந்துத்துவா ராஜ்ஜியத்தை உருவாக்கவும் முயற்சி செய்கிறது.
ஆர்எஸ்எஸ் இன் கொள்கையை பிஜேபி தற்பொழுது செயல்படுத்தி வருவதோடு, நாட்டில் சமூகஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பல புதிய சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. அதிலும் குறிப்பாக சிஏஏ என்று சொல்லக்கூடிய "குடியுரிமை திருத்த சட்ட மசோதா" 2019 நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதோடு, மதத்தின் அடிப்படையில் தான் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்து வருகிறது.
ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சாதி, மதம், இனம், நிறம், பிறப்பு போன்ற பாகுபாடுகளற்று அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அம்பேத்கர் தீட்டிய அரசியலமைப்புச் சாசனம் சொல்லுகிறது.
அதனை அவமதித்து நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீர்குலைத்து மதத்தின் அடிப்படையில் ஆட்சியை நடத்தி, மதத்தின் மூலமாக தேர்தலை சந்தித்து, மதத்தின் மூலமாக வாக்குகளை பெற்று வெற்றி பெற்று விடலாம் என்கிற மமதையில் பாஜக அரசு செயல்படுகிறது. தற்பொழுது பாஜக ஆளும் உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் "சிறுபான்மையினர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள்"
இந்த தேர்தல் 'இந்துத்துவா கொள்கைக்கும் - மதச்சார்பின்மை கொள்கைக்கும் இடையே நடக்கிற மகத்தான போர். கடந்த 10 ஆண்டுகள் ஆளும் பாஜக அரசு விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், சிறுபான்மையினர்கள், பெண்கள், இளைஞர்கள் என இவர்களுக்கு எதிரான கொள்கைகளை நிறைவேற்றி கார்ப்பரேட்டுகளுக்கும், பெருநிறுவன முதலாளிகளுக்கும் ஆதரவாக செயல்பட்டு, கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 6564 கோடியை நன்கொடையாக பெற்று ஊழல் செய்துள்ள பாஜக விரட்டிவிட்டு, இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர வையுங்கள், உங்கள் தலைமுறைகள் நிம்மதியாய் வாழ வழிவகை செய்யுங்கள்” என பேசினார்.
அதை தொடர்ந்து பேசிய பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி. செந்தில்குமார், ``திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் எங்களை எதிர்த்து இரட்டை இலை சின்னம் போட்டியிடுகிறது. ஆனால் அதிமுக களம் காணவில்லை அதிமுகவில் போட்டியிட ஆளில்லாத காரணத்தால் அதனை எஸ்.டி.பி.ஐ க்கு ஒதுக்கி திருநெல்வேலியிலிருந்து வேட்பாளரை களம் இறங்கியுள்ளனர்.
அதேபோல, பாஜக சார்பில் பாமகவின் வேட்பாளராக விருதுநகரை சேர்ந்த திலகபாமாவை நிறுத்தியிருக்கிறார்கள். எதிர்த்து போட்டியிடும் இருவருமே வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் போட்டியிடும் களம் திண்டுக்கல். ஆனால் நம் கூட்டணியில் நம் மண்ணின் மைந்தராக திண்டுக்கலை சேர்ந்த ஆர்.சச்சிதானந்தத்தை களமிறக்கியுள்ளோம். மக்கள் நல பணியினை செய்ய ஓடோடி வருபவர் நம் கட்சி வேட்பாளர். அதேபோல, பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, சொத்தில் சம உரிமை, அரசியலில் பிரதிநிதித்துவம் என கலைஞர் பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அவரை போன்றே அவரது மகன் மு.க.ஸ்டாலின் அரசு பேருந்துகளை பெண்களின் சொத்துகளாக மாற்றி கொடுத்துள்ளார்” என பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/8i6qFSk
0 Comments