``பாஜக-வின் தேர்தல் பயம் காரணமாக எதிர்க்கட்சி தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்'' - பிரகாஷ் காரத்

மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக மதுரையில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், "நடைபெறவுள்ள தேர்தல், வழக்கமான தேர்தல் அல்ல. இந்தியாவின் எதிர்காலத்தை மதசார்பற்ற ஜனநாயகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல். தேர்தலுக்கு பிறகு இந்தியா மதசார்பற்ற ஜனநாயக நாடாக நீடிக்குமா என்பதற்கு விடையளிக்கும் தேர்தல்.

பிரகாஷ் காரத்

பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு இரண்டு மாநில முதலமைச்சர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் கெஜ்ரிவால், மற்றொருவர் ஹேமந்த் சோரன். தேர்தல் பயம் காரணமாக பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்.

ஒன்றிய அரசு, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய முகமைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்தி வேட்டையாடி சிறையில் அடைத்து துன்புறுத்துகிறார்கள். தேர்தல் பிரசாரம் நடத்திக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளை கொள்கை ரீதியாக மோதாமல் அதிகார பலத்தை பயன்படுத்தி எதிர்க்கின்றனர்.

காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி, வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இடையூறு செய்கின்றனர். இந்த தேர்தலை அரசியல் கொள்கை அடிப்படையில் பாஜக தேர்தலை சந்திக்கவில்லை. கட்சித் தலைவர்களை முடக்கி, செயல்படவிடாமல் தடுத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.

பாஜக நாடாளுமன்ற மரபுகளை காலில் போட்டு மிதிக்கிறார்கள்.156 எதிர்க்கட்சி எம்.பிக்களை இடைநீக்கம் செய்து அவையில் இல்லாத நிலையை உருவாக்கினர். சாதகமாக பேசினால் அவையில் அனுமதிப்போம், மக்களுக்காகவோ அரசுக்கு எதிராகவோ பேசினால் அவையை விட்டு வெளியேற்றுவோம் என்ற அடிப்படையில் செயல்படுகின்றனர்.

பிரசார பொதுக்கூட்டம்

இந்தியாவில் இருப்பது முழு ஜனநாயகமல்ல. அரை ஜனநாயகம்தான் உள்ளது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த அரை ஜனநாயகமும் இல்லாத நாடாக மாறிவிடும்.

ராமர் கோயில் கட்டினோம் என்பதை தங்கள் சாதனையாக மோடி சொல்கிறார். அறக்கட்டளை நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சியைப் போல நடத்தினார்கள். பிரதமராக இல்லாமல் ஒரு பூசாரிபோல ராமர் கோயில் விழாவில் பிரதமர் கலந்து கொண்டார்.

மதத்தையும், அரசியலையும் கலந்து ஆபத்தான வகுப்புவாத நிகழ்ச்சியாக ராமர் கோயில் விழாவை மோடி நடத்தினார். இதனால்தான் எதிர்க்கட்சிகள் ராமர் கோயில் விழாவில் பங்கேற்கவில்லை.

அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை உயர்த்திப்பிடிப்பது அரசமைப்பு சட்டத்தின்படி எதிரானது. மதசார்பற்ற கோட்பாடுதான் அரசமைப்பு சட்டத்தில் உள்ளது. ராமர் கோயில் மூலம் இந்துத்துவ ராஷ்டிரத்தை உருவாக்குவதன் அடையாளம் என பாஜக-வினர் கூறுகின்றனர். அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை கைவிட்டு, மனுவாத சட்டத்தை கொண்டு வர முயல்கின்றனர். ஜனநாயகத்தை அரசமைப்பு சட்டத்தை காப்பாற்றவே அரசியல் கட்சிகள் இந்தியா கூட்டணியாக ஓரணியில் இணைந்துள்ளனர்.

பிரகாஷ் காரத்

மோடியும் பாஜகவும், இந்தியா அணியை ஊழல் கூட்டணி என சொல்கிறார்கள். ஊழலின் மொத்த உருவமே மோடிதான். தேர்தல் பத்திர திட்டத்தால் ஊழலில் நம்பர் ஒன் பாஜக என்பது தெரிய வந்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் பிரமாண்ட ஊழலை பாஜக செய்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திர திட்டத்தால் பணம் பெறவில்லை. அந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்த கட்சி சிபிஎம். தேர்தல் பத்திர திட்டம் என்பது ஒரு பரம ரகசிய திட்டம். தேர்தல் பத்திர நன்கொடையாக அதிகளவு நிதியை பாஜக மட்டுமே பெற்றுள்ளது. ஒன்றிய முகமைகளை பயன்படுத்தி தேர்தல் பத்திர நன்கொடைகளை பெற்றுள்ளனர். முதலில் ரெய்டு, பின்பு வழக்கு, அதன்பின்பு தேர்தல் பத்திர நிதி பெற்று தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கி விடுகிறார்கள். மிரட்டி நிதி வாங்கும் முறையே தேர்தல் பத்திர திட்டம். தேர்தல் பத்திர திட்டத்தால் கறுப்பு பணத்தை பாஜக பெற்றுள்ளது. இதுகுறித்த முழுமையான விசாரணையை பாஜகவிடமும் பிரதமர் மோடியிடமும் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அமலாக்கத்துறையோ மற்ற விசாரணை அமைப்புகளோ அதை செய்யவில்லை.

மாநிலங்களுக்கு சில உரிமையும் அதிகாரமும் உள்ளது. ஆனால் மாநிலங்களின் உரிமைகளை காலில் போட்டு பாஜக மிதிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே பண்பாடு என்ற வரிசையில் ஒரே தேசம் ஒரே தலைவர் என்பதை பாஜக முன்னிறுத்துகிறார்கள். மாநில உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருவதால் இன்னும் வலுவாக போராட வேண்டும்.

தமிழகத்தில் ஆளுநர் ஆளுநர் போலவே இல்லை. தன்னை பிரிட்டீஷ் காலத்து வைசிராய் என நினைத்து ஆர்.என்.ரவி செயல்படுகிறார். தமிழகத்திற்கு போதுமான நிதிப்பகிர்வை அளிக்காமல் திட்டமிட்டு ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.
ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் கடன் வாங்கியாவது மக்களுக்கு திட்டங்களை செய்ய நினைத்தாலும் ஒன்றிய அரசாங்கம் கடன் வாங்க கூட முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

பிரகாஷ் காரத்

தமிழக முதல்வர், கேரளா அரசு வழக்கு போட்ட போது ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. தமிழக அரசும் நிதி கேட்டு வழக்கு போட்டுள்ளது.

ஒரு பைசா கூட கொடுக்காமல் கொடுத்தோம் கொடுத்தோம் என பேசுகிறார்கள். தமிழக வாக்காளர்கள் அரசியல் தெரிந்தவர்கள். அதனால்தான் தமிழகத்தில் கடந்த தேர்தலின் போது ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. அதுபோல இந்த தேர்தலிலும் ஒரு சீட் கூட பாஜகவுக்கு கிடைக்கக்கூடாது.

கார்ப்பரேட் ஆதரவு இந்துத்துவா வகுப்புவாத கூட்டணியே பாஜக. அதற்கு எதிராக வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்" என பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/uQtBF9m

Post a Comment

0 Comments