தேர்தல் பத்திரங்கள் விவகாரம் நாட்டையே உலுக்கிவருகிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலமாக, அதிகளவில் பயனடைந்த கட்சியாக பா.ஜ.க இருக்கிறது.
மேலும், அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ போன்ற மத்திய அரசின் அமைப்புகளை வைத்து மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க பணம் பெற்றது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள், தனிநபர்களிடமிருந்து நிதி பெற்றிருக்கின்றன. பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸும், அதற்கடுத்து காங்கிரஸ் கட்சியும் அதிக நன்கொடையைப் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு நிதி பெற்றன என்ற விவரங்கள் சம்பந்தப்பட்ட கட்சிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில்தான், 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை ஒவ்வொரு கட்சியிடமிருந்தும் தேர்தல் ஆணையம் பெற்றது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. பா.ஜ.க., ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தங்களுக்கு நிதி கொடுத்தவர்களின் விவரங்களை தற்போது வரை வெளியிடவில்லை.
ஆனால், அ.தி.மு.க., தி.மு.க உள்பட பத்து கட்சிகள் யார் யார் பணம் கொடுத்தார்கள் என்ற விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து, தற்போது அது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. இதில், தமிழ்நாட்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகமான நிதியை தி.மு.க பெற்றிருக்கிறது என்ற விவரம் தெரியவந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.656.5 கோடியை தி.மு.க பெற்றிருக்கிறது.
இதில் சர்ச்சை என்னவென்றால், தி.மு.க-வுக்கு அதிகமாக நிதியைக் கொடுத்திருப்பது தொழிதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம். நான்கு தவணைகளில் ரூ.509 கோடியை அந்த நிறுவனம் கொடுத்திருக்கிறது. மார்ட்டினின் இந்த நிறுவனம்தான், 2019 முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த நிறுவனம் மொத்தம் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கியிருக்கிறது. அதில் 37 சதவிகிதம் (ரூ.509 கோடி) தி.மு.க-வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தி.மு.க பெற்ற ரூ.656.5 கோடி நன்கொடையில், மார்ட்டின் நிறுவனம் வழங்கிய நன்கொடையின் அளவு 77 சதவிகிதம். அதேபோல, ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா என்ஜினீயரிங் என்ற நிறுவனம் தி.மு.க-வுக்கு ரூ.105 கோடி நன்கொடை அளித்திருக்கிறது. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ.14 கோடியும், சன் டி.வி நெட்வொர்க் ரூ.10 கோடியும் வழங்கியிருக்கின்றன.
2019 தேர்தல் காலகட்டத்தில். சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மூலம் அ.தி.மு.க-வுக்கு ரூ.5 கோடி வழங்கிய இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், தி.மு.க-வுக்கு ரூ.10 கோடி கொடுத்திருக்கிறது. அதேபோல, தி.மு.க-வுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்த கோவையைச் சேர்ந்த லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம், அ.தி.மு.க-வுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது.
இந்த விவகாரத்தை தி.மு.க-வுக்கு எதிராக கையிலெடுத்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ‘லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் ஃபியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் ரூ.509 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது.
சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்கத்துடன் எம்.ஜி.ஆர் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரி சீட்டும், என் தலைமையிலான ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டன. ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது’ என்று விமர்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
மேலும், மக்களின் உழைப்பைச் சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப் பணத்தை பெற்றிருக்கும் தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலினுக்கு வரும் நாடாளுமன்றத்தில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்’ என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். சமூகவலைதளப் பக்கத்தில் தி.மு.க-வை காட்டமாக விமர்சித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் கொண்டுசெல்ல வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க-வை விமர்சிக்கக்கூடிய மற்றொரு கட்சியான பா.ஜ.க., இந்த விவகாரத்தில் கடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது.
எனவே, தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை வைத்து, தி.மு.க-வை பா.ஜ.க விமர்சிக்காது. அதனால்தான், இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நேரடியாக தி.மு.க-வை விமர்சிக்காமல் அவர் நழுவியிருக்கிறார். மேலும், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை வைத்து தி.மு.க-வை விமர்சிப்பதைத் தவிர்க்கும் என்றே தெரிகிறது.
அ.தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள்தான், இந்த விவகாரத்தை தி.மு.க-வுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்த முயலும். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்போம் சூளுரைத்துவிட்டு, சூதாட்ட நிறுவனத்திடமிருந்து நன்கொடை பெற்றிருப்பது தி.மு.க-வுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம், அதிமுக இந்த விவகாரத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க போகிறது? அதற்கு திமுக எதிர்வினை எந்த மாதிரி இருக்க போகிறது என்பது வைத்தே மக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என தெரிய வரும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/IbAl8we
0 Comments