நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த தேசமும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியலிலும் பல திருப்புமுனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நேற்றுவரை அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி உறுதி எனச் சொல்லப்பட்ட நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், சேலத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியது.
இந்த நிலையில்தான் ‘தேச நலன் கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி உறுதி' என பா.ம.க தெரிவித்திருக்கிறது.
இன்று காலை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்குச் சென்றிருந்தனர். அதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் குறித்து சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, பா.ஜ.க - பா.ம.க கூட்டணி உறுதியாகியிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், ``10 ஆண்டுக்காலமாக பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கமாக இருந்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் கருதி பிரதமரின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர இந்த முடிவை எடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் 60 ஆண்டுக்காலம் ஆட்சி செய்துகொண்டிருக்கும் கட்சிகள்மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது.
எனவே மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஆழமாக இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கூட்டணி இந்தியளவில் வெற்றி பெறும். மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வருவார்." எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ம.க எங்களுடன் களம் இறங்கியிருக்கிறது. வாஜ்பாய் உள்ளிட்ட மூத்த பா.ஜ.க தலைவர்களின் அன்பைப் பெற்றவர் ராமதாஸ்.
தமிழ்நாட்டில் முக்கிய மற்றும் வலுவான கூட்டணியாக எங்கள் கூட்டணி உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் மாற்றாக இந்தக் கூட்டணி இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது. சேலத்தில் நடக்கும் பிரதமர் மோடியின் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களுடன் கலந்துகொள்ள அன்புமணி ராமதாஸ் இசைவு தெரிவித்திருக்கிறார், அதற்கு நன்றி. பா.ம.க தமிழ்நாட்டின் 10 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/64KSaTq
0 Comments