பிரதமர் மோடியுடன் சந்திப்பு; கிளம்பிய விமர்சனம்... விளக்கமளித்த மம்தா!

பிரதமர் மோடி, நேற்று மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்றிருந்தார். அங்கு, பிரதமர் மோடியை இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜி, ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு இந்தியா கூட்டணியில் சிறு சலனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, ``மம்தா பானர்ஜி, பிரதமர் முன் தலைவணங்க வந்திருக்கிறார். பிரதமரை மகிழ்விக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி (பாஜக)

ஆனால் அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் அவர் மோடி, அவர் கொள்ளையடிக்கவும் மாட்டார், யாரையும் கொள்ளையடிக்கவும் அனுமதிக்க மாட்டார்" என விமர்சித்திருந்தார். மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ``பிரதமருடனான மம்தாவின் இந்தச் சந்திப்பு தீதியின் தந்திரமா.... ராஜ்பவன் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

இது போன்ற பல்வேறு எதிர்வினைகளுக்குப் பதிலளித்த மம்தா பானர்ஜி, ``தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாததால், நெறிமுறைப்படி பிரதமரைச் சந்திக்க வந்தேன். பிரதமர் மேற்கு வங்கம் வந்தபோது வரவேற்கச் செல்லவில்லை என்பதால், மரியாதை நிமித்தமாகத்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக எதைச் சொன்னாலும் அரசியல் மேடையிலிருந்தே சொல்வோம்.

பிரதமர் மோடி - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இந்தச் சந்திப்பில் மாநிலத்தின் பிரச்னைகள் குறித்து நிறைய உரையாடினோம். சந்தேஷ்காலி விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ்மீது பிரதமர் தாக்குதல் நடத்தியது குறித்துக் கேட்கிறீர்கள். இது பிரதமர் சந்திப்பு குறித்த பேட்டி. நெறிமுறைப்படி இது போன்ற கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். எங்கள் கட்சி இது குறித்துத் தொடர்ந்து மக்களிடம் விளக்கமளித்துக்கொண்டுதான் இருக்கிறது" எனக் குறிப்பிட்டார்.



from India News https://ift.tt/tL7x12G

Post a Comment

0 Comments