எண்ணெய்க் கழிவுகளை கசியவிட்டது பெருங்குற்றம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்பதுபோல உள்ளது சென்னைக்கு அருகிலுள்ள எண்ணூர் பகுதியில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரிகளின் நிலை. மிக்ஜாம் புயலின் மழைவெள்ள பாதிப்புகளுக்கு நடுவே, எண்ணெய் நிறுவனங்களிலிருந்து சத்தமில்லாமல் கசிந்த கழிவுகள், எண்ணூர் முகத்துவாரம் தொடங்கி, காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை பரவி, சூழல் பேரிடரை உருவாக்கியுள்ளது.

இந்தத் தகவல், விகடன் சமூக வலைதளத்தில் காணொலியாக வெளியான பிறகு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததோடு, எண்ணெய்க் கழிவுகளை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டது.

கழிவுகளில் இருக்கும் ரசாயனங்களால் மக்களுக்குச் சுவாச நோய், தோல் நோய், புற்றுநோய்கூட உருவாகும் வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மீன்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், கோடிக்கணக்கில் லாபங்களைக் குவிக்கும் எண்ணெய் நிறுவனங்கள், கழிவுகளை அகற்றக் கண்டுபிடித்த கருவி என்ன தெரியுமா... வெறும் ‘வாளி’. 2017-ம் ஆண்டு இதே பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டபோதும் ‘வாளி’தான் வழங்கப்பட்டது.

முதலில், எண்ணெய்க் கழிவுகளை கசியவிட்டது பெருங்குற்றம். அடுத்து, அவற்றை அகற்றுவதற்கான உரிய தொழில்நுட்பம்கூட இல்லாமல் ஆலைகளை இயக்கிக்கொண்டிருப்பது கடுங்குற்றம்.

இத்தகைய கொடுமைகள் எதிர்காலத்தில் நிகழாமலிருக்க... சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல, பெருந்தொகையை அபராதமாகவும் விதிக்க வேண்டும். அந்தத் தொகையைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக விரைந்து வழங்க வேண்டும்.

அலட்சியத்தால் ஏற்படும் இத்தகைய ‘பேரிடர்’, நடக்காமல் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுடையதுதான். ஆனால், அதை இந்த அரசுகள் துளிகூட உணர்ந்ததுபோல தெரியவில்லை என்பது... பெருந்துயரே!

- ஆசிரியர்

கார்ட்டூன்


from India News https://ift.tt/jyxVTWA

Post a Comment

0 Comments