மசோதாக்கள் விவகாரம்: இன்று கூடுகிறது சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்குமிடையே நீண்ட நாள்களாவே மோதல்போக்கு நீடித்து வருகிறது. அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் ஒத்துழைக்காமல், அவற்றுக்கு எதிராக நிற்பதும், பதிலுக்கு தி.மு.க அமைச்சர்கள் தொடங்கி முதல்வர் ஸ்டாலின் வரை ஆளுநருக்கு எதிர்வினையாற்றுவதுமென, அரசியல் களத்தில் `ஆளுநர் Vs அரசு' என்ற தலைப்பில் அனல் பறந்துகொண்டே இருக்கிறது. `தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார், மாநிலத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி. எனவே, இதற்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்' என தமிழ்நாடு அரசு அண்மையில் ஆளுநரை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``தமிழ்நாடு ஆளுநர் மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாக, மாநில அரசு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
மசோதாமீது மாற்றுக் கருத்து இருந்து திருப்பி அனுப்புவதாக இருந்தால், உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது. எனவே, தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க ஆளுநரின் செயலாளருக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வரும் 24-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு அவற்றைத் திருப்பியனுப்பினார். அதையடுத்து சபாநாயகர் அப்பாவு, ``வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெறும். அதில், ஆளுநர் திருப்பியனுப்பிய 10 மசோதாக்களும், மீண்டும் நிறைவேற்றப்படும்.
சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆனது, இறையாண்மைமிக்கது. மக்களின் கருத்துகளைத்தான் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்குக் கூடுகிறது. அதில், பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் அந்தந்த துறை அமைச்சர்களால் மீண்டும் அவையில் அறிமுகப்படுத்தப்படும். அவற்றுக்கு ஆட்சேபனம் தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தங்கள் எதிர்ப்பை மசோதாக்களின்மீது பதிவுசெய்வார்கள். அதைத் தொடர்ந்து மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவை இருப்பின் அவற்றின்மீது அவையில் விவாதம் நடைபெறும். பின்னர், சபாநாயகரால் மசோதாக்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும். இறுதியாக பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில், மசோதாக்கள் நிறைவேற்றப்படும். பின்னர் மீண்டும், ஆளுநரின் ஒப்புதலுக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனுப்பிவைக்கப்படும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/x4bXu5s
0 Comments