திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்துக்குட்பட்ட மேல்மா கிராமத்தில், ‘சிப்காட்’ விரிவாக்கத் திட்டத்துக்கெதிராகப் போராட்டம் நடத்திவந்த விவசாயிகளில், போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான பச்சையப்பன், அருள், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். அருள் பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலையிலும், பச்சையப்பன் மதுரை மத்தியச் சிறைச்சாலையிலும், தேவன் கோவை மத்தியச் சிறைச்சாலையிலும், சோழன் கடலூர் மத்தியச் சிறைச்சாலையிலும், திருமால் திருச்சி மத்தியச் சிறைச்சாலையிலும், பாக்கியராஜ், மாசிலாமணி ஆகிய இரண்டு பேரும் வேலூர் மத்தியச் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், ‘‘மண்ணுரிமைக்காகப் போராடிய உழவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் அளவுக்கு தமிழக அரசு கீழிறங்கிச் சென்றதை நியாயப்படுத்தவே முடியாது. தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். இதை உணர்ந்து, ஏழு விவசாயிகள்மீதான குண்டர் சட்ட நடவடிக்கையைக் கைவிட்டு, அவர்களை விடுதலைச் செய்ய வேண்டும்’’ என்று பல தரப்பிலிருந்தும், கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மட்டுமன்றி தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும்கூட, ‘‘நிலம் காக்கப் போராடிய விவசாயிகள்மீதான அடக்குமுறையைக் கண்டிக்கிறோம்’’ என்று தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்திருந்தார்கள்.
இந்த விவகாரம் தமிழகத்தைத் தாண்டி எதிரொலிக்கத் தொடங்கியதையடுத்து, ஏழு விவசாயிகளில் 6 பேர்மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே ரத்துசெய்து உத்தரவுப் பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், `திருவண்ண்ணாமலை மாவட்டத்தில் பெரிய அளவில், தொழிற்சாலைகள் ஏதுமில்லாத நிலையில், சிப்காட் பகுதி-3 தொழிற்பூங்கா அமைக்கும் பொருட்டு மேல்மா மற்றும் அதனைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் 3,174 ஏக்கர் அளவுக்கு நில எடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நில எடுப்பு செய்ய உத்தேசித்திருக்கும் 3,174 ஏக்கர் பரப்பில், ஏழு ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலமாகும்.
தற்போது, 1,200 ஏக்கர் அளவுக்கு மட்டுமே நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. இதில், நஞ்சை நிலம் ஏதுமில்லை. மேலும், அறிவிப்புக் கடிதம் அளிக்கப்பட்டதில், நில எடுப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டிருக்கும் 1,881 நில உரிமையாளர்களில், 239 நில உரிமையாளர்கள் மட்டுமே ஆட்சேபனை மனுக்களை அளித்திருக்கின்றனர். சிப்காட் விரிவாக்கத்தின் மூலம் இந்தப் பகுதியில், தொழில் வளர்ச்சி பெருகுவதோடு, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேல்மா கிராமத்திலுள்ள பட்டா நிலத்தில், ‘சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க’ ஒருங்கிணைப்பாளரான தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் தலைமையில், தென்னங்கீற்றுக் கொட்டகை அமைத்து, 02-07-2023 அன்று முதல், தினமும் 15 முதல் 20 நபர்களைக் கொண்டு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திவந்திருக்கிறார்கள். போராட்டத்தின்போது, அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்து, அடிக்கடி சாலைமறியலில் ஈடுபட்டு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தனர். நில எடுப்பு செய்ய தாமாக முன்வந்த பொதுமக்களையும் தடுத்து நிறுத்தினர். பணிசெய்த காவலர்களையும் தாக்கியிருக்கின்றனர். பொது உடைமைகளையும் சேதப்படுத்தியிருக்கின்றனர் என்பன உட்பட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக, 04-11-2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகியான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் உட்பட 19 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதில், ஏற்கெனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய அருள் உள்ளிட்ட 7 நபர்களை, திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரைபேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்.
இந்த நிலையில், குண்டர் சட்டத்தின்கீழ் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் செய்யாறு சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்து, அவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை அமைச்சரையும் சந்தித்து, இது தொடர்பாக மனு அளித்தனர். இவர்கள் அளித்த மனுக்களில், ‘வருங்காலங்களில், இது போன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம். இத்தகைய தவறுகளை வெளியாட்களின் தூண்டுதலின்பேரில், செய்துவிட்டோம். இனி, இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டோம். குடும்பச் சூழ்நிலைக் காரணமாக, அவர்களை விடுவிக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோரைக் குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையிலிருந்து விடுவிக்க ஆணைப் பிறக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், அந்த 6 பேர்மீதான சட்ட ஆணை விலக்கிக் கொள்ளப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
6 பேர்மீதான குண்டர் தடுப்புக்காவல் ரத்துசெய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் அருள் என்ற ஒருவர்மீதான நடவடிக்கை மட்டும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. `கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திலுள்ள அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் 45 வயது மகனான அருளுக்கும், திருவண்ணாமலைக்கும் என்னத் தொடர்பிருக்கிறது, போராட்டம் தூண்டப்படுவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்' என்று குற்றம்சாட்டி, அரசுத் தரப்பில் இவர்மீதான நடவடிக்கையை ரத்துசெய்ய மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், குண்டர் சட்டம் பாய்ந்த ஒரே நாளில், அரசுக்கெதிராக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், முதல்வரே அதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
from India News https://ift.tt/qFj98SP
0 Comments