தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அரசு மீதான நீதிமன்றத்தின் அதிருப்தியும், அரசின் விளக்கமும்!

`தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 21 பேருக்கு எதிராக துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியிருக்கிறது என தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் பதில் தெரிவித்திருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் நீர், நிலம் காற்று என சுற்றுச்சூழல் சீர்கெட்டு, கேன்சர் உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகிவருவதாக்கூறிய, சுற்றுவட்டார கிராம மக்கள் `ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்' எனக்கோரிக்கை வைத்து ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தின் 100 நாளில், மிகப்பெரிய பேரணியை நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 13 பேர் குண்டடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னர் மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது. ஆனால், `இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்றும், தனது புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கூறியும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருக்கிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் அதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், கடந்த நவம்பர் 3-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், `உயர் நீதிமன்றத்திலிருந்து பெற்ற அறிக்கையைத் தவிர, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து எந்த அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை!' என பதிலளிக்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்

அதைத்தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், ``மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை என்ற காவல் துறை அதிகாரியை மட்டும் வழக்கில் சேர்த்திருக்கிறது. ஆனால், துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு, அதன் அடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை!" எனக் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

இந்தநிலையில், நவம்பர் 17 அன்று இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் கடந்த முறை நீதிமன்றம் கேட்ட விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், `நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்று கொண்டுடிருப்பதாகவும், அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜியாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி.யாக இருந்த மகேந்திரன் உள்ளிட்ட 17 காவல்துறை அதிகாரிகள், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட மொத்தம் 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும்' சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் தெரிவித்திருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றம்

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், `இது தொடர்பாக விளக்கமளிக்க, சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞரும், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் அடுத்த விசாரணையின்போது ஆஜராவார்கள் எனத் தெரிவித்தார்.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அரசிடம் சமர்பிப்பு

அதைத்தொடர்ந்து, நீதிபதிகள், ``தற்போது நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கும் 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்!" என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/HYXsEvO

Post a Comment

0 Comments