அரசுப் பேருந்தில் போலி பயண டிக்கெட் விற்பனை; சிக்கிய நடத்துனர் - அதிர்ச்சி சம்பவமும் பின்னணியும்!

சேலத்திலிருந்து கடந்த 16-ம் தேதி அதிகாலை சிதம்பரத்துக்கு ஏசி பேருந்து ஒன்று புறப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அனைத்து நிறுத்தங்களிலும் அந்தப் பேருந்து நின்றிக்கிறது. இதில் கடுப்பான பயணிகள் சிலர், 'ஏன் எல்லா இடத்திலும் நிக்குறீங்க... எப்போ நாங்க வீட்டுக்குப் போறது?' என கோபப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஓட்டுநரும், நடத்துனரும், 'நாங்க அப்படித்தான் போவோம்... எங்க வேணுனாலும் போய் சொல்லுங்க' என பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் விருத்தாசலத்தை அடுத்த வடலூர் என்ற இடத்தில் சம்மந்தப்பட்ட பேருந்தில், டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் ஏறியிருக்கிறார்கள். அவர்கள் நடத்துனரிடம் இருந்த டிக்கெட்டுகளை பரிசோதனை செய்திருக்கிறார்கள். அப்போது அது மறுவிற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகள் என்பது தெரியவந்திருக்கிறது.

இது குறித்து சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், "சேலம், மெய்யனூர் கிளையைச் சேர்ந்த TN30/N2130 என்ற பேருத்தில் ஓட்டுநராக சத்தியமூர்த்தி, நடத்துனராக நேரு ஆகியோர் இருந்திருக்கின்றனர். இந்தப் பேருந்து காலை 5:55-க்கு சேலத்திலிருந்து சிதம்பரத்துக்குப் புறப்பட்டது. காலை 9:30 மணிக்கு ஊமக்கலம் (நெய்வேலிக்கு 4 கி.மீ முன்பு) என்னும் இடத்தில் விழுப்புரம் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு பரிசோதகர்கள் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது நடத்துனரால் தலைவாசல் பேருந்து நிலையத்தில் ஏறிய பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரண்டு ரூ.100, இரண்டு ரூ.10 மதிப்புள்ள பயணச்சீட்டுகள் 15-ம் தேதி வழங்கிய பயணப்பட்டியலில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆய்வு செய்தபோது, சம்பந்தப்பட்ட பயணச்சீட்டுகள் இதே நடத்துனரால் ஏற்கெனவே இவருடைய முந்தைய பணியில் பயணிகளுக்கு விற்கப்பட்டவை எனத் தெரியவந்திருக்கிறது. ஆகவே, இந்தப் பேருந்தின் நடத்துனர் நேரு, பயணிகளுக்கு டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்திருக்கிறார். இதையடுத்து அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில், மாதந்தோறும் பயணர் சீட்டு பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்களால், நடத்துனர்களின் பணப்பை மற்றும் லாக்கர்கள் திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது, சேலம் போக்குவரத்துக் கழகத்தில் வழக்கமாக நடைமுறையில் இருக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசுப் பேருந்து

சேலம் போக்குவரத்துக் கழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் இந்த விவாகரத்துக்குப் பின்னால் என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, அரசுப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். "சேலம் சம்பவத்தில் நடத்துனர் நேரு டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்தபோது சிக்கியிருக்கிறார். இதை விழுப்புரம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒருவேளை சேலம் கோட்ட அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தால், சம்பந்தப்பட்ட நடத்துனர் சிக்கியிருக்க மாட்டார்.

தி.மு.க-வின் தொழிற்சங்கமான தொ.மு.ச பேரவையின் சேலம் கோட்ட பொதுச்செயலாளர் மனோகரன் என்பவரின் நெருங்கிய உறவினர்தான், இந்த நேரு. இதேபோல் ஓட்டுநர் சத்தியமூர்த்தி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு மிகவும் நெருக்கமான ஆதரவாளர் எனச் சொல்லப்படுகிறது. எனவே இவர்கள் இருவரும் அடாவடியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியின் ஆதரவு இருப்பதால் அதிகாரிகளும் அடக்கி வாசித்து வந்தனர். இந்த நிலையில்தான், விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் எதேச்சையாக நடத்திய ஆய்வில் சிக்கியிருக்கிறார், நேரு. இதில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கக்கூடும். இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

அதில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் பங்கு இருக்கிறது. எனவேதான், அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மெஷின்களைத் தயாரித்து வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு முறையாக போக்குவரத்துத்துறை பணம் செலுத்தவில்லை. இதன் விளைவு நாளடைவில் அவர்கள் மெஷின்களை பராமரிப்பத்தில் சுணக்கம் காட்டினர். இதனால் பல இடங்களில் ஏராளமான மெஷின்கள் பழுதடைந்து கிடக்கின்றன. எனவே அரசே இத்தகைய மெஷின்களை தயாரித்து வழங்க வேண்டும். அப்போதுதான் முறைகேடுகளை தடுக்க முடியும்" என்றனர்.

இது குறித்து விளக்கம் கேட்பதற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதனை உரிய பரிசீலனைக்கு பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/AzxV6t8

Post a Comment

0 Comments