வாரிசு அரசியல் செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார்கள். இந்த நிலையில், கர்நாடகாவில் பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு கட்சியின் மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டமன்றத் தேர்தலில் நடைபெற்றது. அதில், காங்கிரஸிடம் பா.ஜ.க படுதோல்வி அடைந்தது. அதனால், பா.ஜ.க-வின் மாநில தலைவராக இருந்த நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார். அதனால், மாநிலத் தலைவர் பதவியைப் பிடிக்க மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, தமிழக பா,ஜ,க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் முயற்சியில் இறங்கினர்.
முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தன் மகனுக்கு தலைவர் பதவியை வாங்கிக்கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்காக, டெல்லிக்குச் சென்று பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்தார். அதையடுத்து, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு மாநிலத் தலைவர் பதவியை வழங்குவது குறித்து பா.ஜ.க-வின் தேசிய அமைப்புச் செயலாளரான பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பா.ஜ.க மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், பா.ஜ.க-வின் கர்நாடகா மாநிலத் தலைவராக விஜயேந்திரா நியமிக்கப்படுகிறார் என்று பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.
தன் மகனுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு எடியூரப்பா நன்றியை தெரிவித்தார். மேலும், ‘கட்சிக்காக உழைப்பதற்கு விஜயேந்திராவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை 25 தொகுதிகளில் வெற்றிபெறச் செய்வோம்’ என்றார் எடியூரப்பா.
தென் இந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் எடியூரப்பாதான். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த இவர், பா.ஜ.க-வில் செல்வாக்கு மிகுந்த தலைவராக வலம்வந்தார். இவருக்கு எதிராக ஊழல் வழக்குகளை லோக் ஆயுக்தா பதிவு செய்தது. அதையடுத்து, 2011-ம் ஆண்டு முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அந்த வழக்குகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.
எடியூரப்பாவின் முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், நீதிமன்றத்தில் ஆஜரான எடியூரப்பா, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பின்னர், பா.ஜ.க தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை அவர் தொடங்கினார். அந்தக் கட்சி, சட்டமன்ற தேர்தலில் வெறும் பத்து விழுக்காடு வாக்குகளையே பெற்றது. அதையடுத்து, பா.ஜ.க-வுடன் தனது கட்சியை இணைத்தார்.
2016-ல் பா.ஜ.க மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களைப் பெற்ற பா.ஜ.க-வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். அதனால், மூன்றாவது முறையாக முதல்வராகும் வாய்ப்பு எடியூரப்பாவுக்கு கிடைத்தது.ஆனால், பதவியேற்ற மூன்றாம் நாளில் அவர் பதவி விலகினார். 2019-ம் ஆண்டு மீண்டும் அவர் முதல்வராகப் பதவியேற்றார்.
2021 வரை முதல்வராக இருந்த அவர், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி வழங்குவதில் கட்டுப்பாடுகளை பா.ஜ.க பின்பற்றுவதால் அவரிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், அவர் சார்ந்த லிங்காயத்து சமூகத்தினர் பா.ஜ.க மீது அதிருப்தியில் இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கிளப்பிவிட்டனர். சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோற்றதற்கு அதுதான் முக்கிய காரணம் என்று பா.ஜ.க-வில் ஒரு தரப்பினர் கூறினர். இந்த நிலையில், எடியூரப்பாவின் குடும்பத்தாருக்கு முக்கியத்துவம் அளித்தால், வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.
இந்த சூழலில், தன் மகனுக்கு மாநிலத் தலைவர் பதவி தர வேண்டும் என்று பா.ஜ.க தலைமைக்கு எடியூரப்பா அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க துணைத்தலைவராக விஜயேந்திரா நியமிக்கப்பட்டார். தற்போது, மாநிலத் தலைவராகவே அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதை விமர்சித்திருக்கும் கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், 'மற்ற கட்சிகளை வாரிசு அரசியல் செய்வதாக விமர்சித்துவரும் பா.ஜ,க., தற்போது எடியூரப்பாவின் மகனை தலைவராக்கியிருக்கிறது. இதன் மூலம், பா.ஜ.க-தான் வாரிசு அரசியலில் ஈடுபடுகிறது என்பது உறுதியாகியிருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/ix56tvG
0 Comments