ஹமாஸ் படையை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற முடிவுடன் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது இஸ்ரேல் ராணுவம். இஸ்ரேலியர்கள்மீது கடந்த சனிக்கிழமை (அக். 7) ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் படையினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் காஸாவில் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின.
‘ஹமாஸ் படையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மரணமடைந்தவர்களே’ என்று கூறிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ‘அவர்களை நாங்கள் நசுக்குவோம்’ என்றார். ‘பூமியிலிருந்தே அவர்களைத் (ஹமாஸ்) துடைத்தெறிவோம்’ என்று கூறியிருக்கிறார் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கல்லன்ட். காஸாமீது முழுமையாகத் தடை விதிக்கப்பட்டதை நியாயப்படுத்திய கல்லன்ட், ‘பாலஸ்தீனர்கள் மிருகத்தனமானவர்கள்’ என்று குறிப்பிட்டார்.
வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டுவருவதால், காஸா கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துவருகிறது. அங்கு சுத்தமாக மின்சாரமும் தண்ணீரும் இல்லை. காஸாவில் 3,40,000 பேர் வீடிழந்து தவிக்கிறார்கள். இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக குண்டுமழை பொழிந்துவருவதால், அந்த மக்கள் தப்பிச்செல்ல வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிடமிருந்து தப்பித்த பாலஸ்தீன மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க எகிப்து மறுத்துவிட்டது. தன் நாட்டு எல்லையையும் எகிப்து மூடிவிட்டது. அதனால், எங்கும் செல்ல இயலாத நிலையில் பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள்.
இஸ்ரேல்மீது அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் படையினர் 5,000 ராக்கெட்களை ஏவி நடத்திய மிகப்பெரிய தாக்குதல், இஸ்ரேலின் 75 ஆண்டுக்கால வரலாற்றில் இதுதான் முதன்முறை. அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர் என்று சொல்லப்படும் நிலையில், காஸாமீது இஸ்ரேல் நடத்திவரும் பதிலடி தாக்குதலில் காசாவில் பொதுமக்கள், ஹமாஸ் படையினர் என இரண்டு தரப்பிலும் கடுமையான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. காஸாவில் பொதுமக்கள் சமார் 1,000 பேர் உயிரிழந்ததிருப்பதாகக் கூறும் இஸ்ரேல், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையைச் சேர்ந்த 1,500 பேரைத் தாங்கள் கொன்றுவிட்டதாகக் கூறியிருக்கிறது.
இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலில் காஸா பகுதியில் வாழும் மக்கள் நிலைகுலைந்துபோயிருக்கிறார்கள். குறிப்பாக, குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘இஸ்ரேலின் தாக்குதலில் காஸாவில் உயிரிழந்தவர்களில் 260 பேர் குழந்தைகள். அங்கு, காயமடைந்த 3,726 பேரில் 10 சதவிகிதம் பேர் குழந்தைகள்’ என்ற துயரச் செய்தியை பாலஸ்தீன சுகாதார தகவல் மையம் பகிர்ந்திருக்கிறது. சர்வதேச குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்ற மனித உரிமைகள் அமைப்பு, ‘2005-ம் ஆண்டு முதல், காஸாவில் நடைபெற்ற ராணுவத் தாக்குதல்களில் சுமார் 1,000 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்று தெரிவிக்கிறது.
2007-ம் ஆண்டிலிருந்து காஸாவின் எல்லைகள், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்துவருகின்றன. இந்த நிலையில், காஸாவுக்கான மின்சாரம், உணவு, எரிவாயு, தண்ணீர் என அனைத்து விநியோகமும் துண்டிக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காஸாவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்திலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக ஹமாஸ் படையின் கதையை முடிப்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவது, ஹமாஸ் படைக்குப் பின்னடைவை ஏற்படுத்தினாலும், இஸ்ரேலின் தாக்குதல் நீண்ட நாள்களுக்கு நீடித்தால் சூழல் வேறு மாதிரியாக மாறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதாவது, பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் நாடுகளான இரானும், இராக்கும் தங்கள் நாட்டின் ஆயுதக்குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகவேதான், மத்தியக் கிழக்கு இஸ்லாமிய நாடுகள், இந்தப் போரில் நேரடியாகத் தலையிடக் கூடாது என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/JjBGCK7
0 Comments