டெல்டா மாவட்டத்தில் சோழ மண்டல தளபதி என அழைக்கப்பட்ட வைத்திலிங்கம் அ.தி.மு.க-வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு பிறகு ஓ.பி.எஸ் பக்கம் சென்றார். இதனை தொடர்ந்து வைத்திலிங்கத்துடன் நெருக்கமாக இருந்த பலர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றனர். இதனை தொடர்ந்து வைத்திலிங்கம் கோட்டை காலியானது என இபிஎஸ் தரப்பினர் விமர்சனம் செய்தனர்.
வைத்திலிங்கம் வகித்த மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு பல மாதங்களாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்தநிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்தார். தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு பேரணியாக சென்று மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆர்.காமராஜிக்கு, மாநகர கழக செயலாளர் சரவணன் வீரவாள் பரிசாக கொடுத்து ஆளுயுர மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்தநிகழ்ச்சி தஞ்சாவூர் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றிருக்கிறது. வைத்திலிங்கம் தரப்பினர், அதிமுக நிர்வாகிகளை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெரிய அளவில் கூட்டத்தை திரட்டியிருந்தனர். தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் பேசிய நிர்வாகிகள் பலரும் வைத்திலிங்கத்தை சாடியது குறிப்பிடத்தக்கது.
இதில் பேசிய மாநகர கழக செயலாளர் சரவணன், ``தஞ்சாவூர் மாவட்ட அ.தி.மு.கவை நான் பார்த்து கொள்கிறேன் என நம்மை வழி நடத்திய ஆர்.காமராஜ் தான் சோழ மண்டலத்தின் உண்மையான தளபதி” என்றார். மருத்துவர் அணி துணை செயலாளரான டாக்டர் கோ.கருணாநிதி, ``32 ஆண்டுகளாக எங்களை ஒரு குடும்பம் அடிமைபடுத்தி வைத்திருந்தது. இங்கு தளபதி தளபதி என சொல்லிக் கொண்டிருந்த ஒருவர் தான் மட்டும் தான் வளர வேண்டும் நம்மை தவிர வேறு யாரும் வளரக் கூடாது என எல்லோரையும் அடிமையாய் வைத்திருந்தார். ஊமையாய் கிடந்த எங்களுக்கு விடுதலை பெற்று தந்தவர் ஆர்.காமராஜ்” என்றார்.
மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், ``இந்த நிகழ்ச்சிக்காக திரண்ட கூட்டத்தை பார்த்து தி.மு.க-வினர் அதிர்ந்திருப்பார்கள். அ.தி.மு.க என்கிற கட்சி இல்லை, இனி தி.மு.க மட்டும் தான் என சொல்லிக் கொண்டிருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது செயல்படாத மாவட்ட செயலாளர்களை பதவியிலிருந்து எடுத்து விடுவேன் என சொல்லியிருக்கிறார். ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்து விட்டது” என்றார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், ``ஐந்து நாள்களாக எனக்கு உடல் நிலை சரியில்லை. ஆனாலும் உங்கள் முன் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் இதில் பங்கெடுத்திருக்கிறேன். மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை மாநாட்டு நிகழ்ச்சி போல் தஞ்சாவூர் மத்திய மாவட்டம் கொண்டாடுகிறது. ஒன்றரை ஆண்டுகளாக தஞ்சாவூரில் அ.தி.மு.க இருக்குமா இல்லாமல் போய் விடுமா என பலர் கனவு கொண்டிருந்தனர். அதை நொறுக்கி தவிடு பொடியாக்கி இன்றைக்கு தஞ்சாவூரில் நம்பர் ஒன் இயக்கம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதனை தான் எடப்பாடியார் பெரிதும் எதிர்பார்க்கிறார். எந்த தேர்தலாக இருந்தாலும் தஞ்சாவூரில் அ.தி.மு.க வெற்றி பெற்றதாக முதல் செய்தி வர வேண்டும். எம்.ஜி.ஆர் தீயசக்தி தி.மு.கவை எதிர்த்து இந்த இயக்கத்தை தொடங்கினார். 51 ஆண்டுகளை கடந்து அ.தி.மு.க நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் மக்கள் தான். எப்போது அ.தி.மு.க ஆட்சி வரும் என மக்கள் ஏங்கி தவிக்கிறார்கள். தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. மக்களுக்கான தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
தஞ்சை தரணி காய்ந்து கிடக்கிறது. நமக்குரிய தண்ணீரை காவிரியில் பெற்றுத் தருவதற்கு தகுதியில்லாதவர் இன்றைக்கு முதலமைச்சராக இருந்து கொண்டிருக்கிறார். தண்ணீர் கேட்டு பெற வேண்டிய மாதங்களை விட்டு விட்டு இப்போது தண்ணீர் கொடு என்கிறார்கள் கர்நாடகா தர மறுக்கிறது. உரிய நேரத்தில் நம்முடைய உரிமையான கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்று தராத அரசாக தி.மு.க இருக்கிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/HNBtya9
0 Comments