பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், ``தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை, சென்னையில் கடந்த 2018, டிசம்பர் 26 முதல் 30-ம் தேதிவரை நடத்த திட்டமிட்டோம். அதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அவருக்கு முன்தொகையாக ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தோம்.
ஆனால், நிகழ்ச்சி நடத்த இடமும் அனுமதியும் தமிழக அரசிடமிருந்து கிடைக்கவில்லை. எனவே, முன்தொகையை திரும்பத் தரும்படி அவருக்கு கடிதம் அனுப்பினோம். ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கு ஒப்புக்கொண்டு, அந்த தொகைக்கான பின் தேதியிட்ட காசோலையை கொடுத்தார். ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லையென காசோலை திரும்ப வந்துவிட்டது.
நாங்கள் கொடுத்த பணத்தைத் தரும்படி கடந்த 5 ஆண்டுகளாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், இதுவரை எங்கள் பணம் திருப்பி தரப்படவில்லை. எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது செயலாளர் செந்தில்வேலவன் ஆகியோர்மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்" என்று புகார் மனுவில் கூறியிருந்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கறிஞர் ஷப்னம் பானு மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக, ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில், ``இசைத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான், சமூகத்தில் பல தலங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார். அவரை பற்றி ASICON 2018 நிகழ்ச்சி நடத்திய இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு, அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது.
ASICON அமைப்புடன் ஏ.ஆர்.ரஹ்மான் எந்த விதத்திலும் தொடர்பிலோ, ஒப்பந்தத்திலோ இல்லாத நிலையில், மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள்.
தனக்கு கொடுத்ததாகக் கூறப்படும் பணத்தை தான் பெறவில்லை என ரஹ்மான் கூறுகிறார். மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், தேவையில்லாமல் ரஹ்மான் பெயரை இதில் ஈடுபடுத்தி உள்ளது. ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீஸை 3 நாள்களில் திரும்பப் பெற வேண்டும். பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமூகத்தில் உள்ள நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயை தர வேண்டும். தவறினால் சட்டரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்" என்று வழக்கறிஞர் நர்மதா சம்பத் அனுப்பியுள்ள நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/7YB53RX
0 Comments