அக்டோபர் 01-ம் தேதி தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையின் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள், திமுக தலைமை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முதல்வர் ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்திலிருந்து கூட்டத்தில் பங்கேற்றார். காலை 10.30 மணிக்குக் காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டம், சுமார் 1.30 மணிநேரம் தொடர்ந்திருக்கிறது. வழக்கத்துக்கு மாறாகக் கூட்டத்தில் தொடக்கத்திலேயே முதல்வரின் முகம் கடுகடுத்தே காணப்பட்டிருக்கிறது.
"ஆறு மாதங்களுக்கு முன்பாகவே நாம் நாடாளுமன்ற பணியைத் தொடங்கிவிட்டோம். பூத் ஏஜென்டுகளும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான மூன்று பயிற்சிப்பாசறை கூட்டங்களும் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்ததாகத் திருவண்ணாமலை, சென்னையிலும் கூட்டம் நடைபெறவுள்ளது. நாம் சொன்னதைச் செய்தலே கண்டிப்பாக வெற்றியடைவோம். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதனை வாக்காக மாற்றுவது முக்கியம்" என்று முதல்வர் பேசியிருக்கிறார்.
`பாரபட்சம் இல்லாது நடவடிக்கை'
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஏற்கனவே மாவட்டச் செயலர்களுக்குத் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூட்டம் தொடங்கியதும் முன் சொல்லப்பட்ட பணிகளைச் சரிவரச் செய்யாத ஏழு மாவட்டச் செயலாளர்களிடம் கடுமையாகப் பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் வாக்காளர்களுக்குப் பொறுப்பாளர்களை நியமிக்காத மாவட்டச் செயலாளர்களை வசைபாடியிருக்கிறார் என்கிறார்கள் உள்விபரம் அறிந்த சிலர். "வரும் தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் நாம் வென்றாக வேண்டும். யாரையும் விட எனக்கு இயக்கமும், இயக்கத்தின் வெற்றியும்தான் முக்கியம். உழைப்பு மட்டுமே வெற்றியைப் பெற்றுத்தரும். திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற அனைவரும் உழைக்கவேண்டும்" என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து, "வரும் தேர்தலில் நமது வேட்பாளர்கள் யாரவது தோல்வியடைந்தால், அந்த மாவட்டச் செயலாளர் கண்டிப்பாகப் பதவி நீக்கம் செய்யப்படுவர். கூட்டணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தாலும் காரணமானவர்கள் மீது பாரபட்சம் இல்லாது நடவடிக்கை எடுக்கப்படும். நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களுக்கு மா.செ-க்கள், அமைச்சர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்று புகார் வருகிறது. அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியம். தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகள் செய்துள்ள பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்" என்று முதல்வர் கறார் குரலில் சொல்லியிருக்கிறார்.
`சரிசெய்யவேண்டிய கட்டாயம்’
இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். ``அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியது திமுக-வுக்குச் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், தமிழகத்தில் இருக்கும் பாஜக வெறுப்பு திமுகவுக்குக் கைகொடுக்கும். ஆனால், அதிமுக தனித்துத் தேர்தலைச் சந்தித்தால் திமுக-வின் வாக்குக்கள் குறைய அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது. அந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இப்போதே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடுமை காட்டி இருக்கிறார். பல மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்களிடையே ஒரு மோதல் போக்கு நிலவுகிறது. அதனைச் சரிசெய்யவேண்டிய கட்டாயம் கட்சித் தலைவராக ஸ்டாலினுக்கு உள்ளது.
`ஒரு தலைவராக நான் சொல்கிறேன். இன்னும் இதனை நீங்கள் செய்யவில்லை என்றால் எனக்கு என்ன மரியாதை?’ என்று ஆத்திரமடைந்திருக்கிறார். இதனால்தான் பணியாற்றாத மாவட்டச் செயலர்கள் அமைச்சராகவே இருத்தலும் அனைவர் மத்தியிலும் கடுமையான வார்த்தைகளால் அவர்களை லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார். சொன்ன தேர்தல் அறிக்கையை 99 சதவிகிதம் நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்று முதல்வர் பேசுகிறார். கடந்த ஒரு வரமாக டி.பி.ஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்பதுதான். மகளிர் உரிமை தொகை திட்டம் ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும். பணம் கிடைக்காத மகளிர் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை. அந்த அதிருப்தியைப் போக்க அந்தந்த பகுதி திமுக உறுப்பினர்களை வைத்து அவர்களைச் சமாதான படுத்த முயற்சி நடக்கிறது" என்றார்கள் விரிவாக.
`முதல்வர் அச்சம் கொள்ள முகாந்திரமே இல்லை!’
முதல்வர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மிகக் கடுமையாகப் பேசியது குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். "தமிழகத்தில் தளபதி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆகச்சிறந்த ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியை திமுக அடையும் என்பது எதிர்க்கட்சிகளுக்குக் கூட தெரிந்த ஒன்று. இப்படி ஒரு சூழலில் தேர்தலைப் பார்த்து முதல்வர் அச்சம் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை. நடந்த கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் என்ற முறையில் நானும் அந்த கூட்டத்தில் பங்கேற்றேன். மாவட்டச் செயலாளர்கள் பலர் பேசும்போது திமுக அரசின் திட்டங்களால் மக்கள் தொடர்ந்து பயனடைந்து வருகிறார்கள். நமது ஆட்சியில் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.
அப்போது பேசிய தளபதி, ``ஆட்சி நன்றாக நடக்கிறது கண்டிப்பாகத் தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று அசால்ட்க இருந்துவிட வேண்டாம். கடந்த முறை போலவே இந்த முறையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றியடையவேண்டும். அதிலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இம்முறை அதிக வாக்குகள் வாங்கி மாபெரும் வெற்றிக்குக் கடுமையான பணியாற்றவேண்டும்” என்று சொன்னார். அப்படிச் சொல்லும்போதுதான் சரியாகி பணியாற்றாத மாவட்டச் செயலாளர்களை மாற்றக்கூடும் என்று கூறினார். தளபதி பேசியதைக் கோபமாகப் பேசினார். கடுமை காட்டினார் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. தேர்தலுக்கு எப்படி பணியாற்றவேண்டும் என்று எங்களுக்கு எடுத்துரைத்ததாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்" என்றார்.
எக்கச்சக்க உட்கட்சி பிரச்னை:
இந்த விவகாரம் குறித்து அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம். "திமுக சார்பில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் தங்கநகை தள்ளுபடி தொடங்கி மகளிர் உரிமை தொகை வரை திமுக சொன்னது ஒன்று செய்தது ஒன்று. ஆட்சி நடத்தத் தெரியாதவர்கள் கையில் சிக்கி மாநிலம் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களிடையே திமுக மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. இவை அனைத்துமே வரும் தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அதிமுகவுக்கு எப்போதுமே மாநிலத்தின் நலன் மட்டுமே முக்கியம். ஆனால், திமுகவுக்கு எப்போதுமே சுயநலம் மிக்க அரசாகவே செயல்படும்.
இந்த பிரச்னை ஒருபக்கம் என்றால், திமுக-வில் உட்கட்சி பிரச்னையும் எக்கச்சக்கமாக இருக்கிறது. மாற்றிவிடுவேன் நடவடிக்கை எடுப்பேன் என்பதை திமுகவில் யாருமே பெரிதாக நினைக்கமாட்டார்கள். காரணம் எதுவும் நடக்கப்போவதில்லை என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று வெறும் வாய் வார்த்தையில் மட்டுமே பேசிக்கொண்டிருப்பார். ஆனால், செயலில் எதுவும் இருக்காது. இவ்வளவையும் வைத்துக்கொண்டு எப்படித் தேர்தலைச் சந்திப்பதை. எப்படி வெற்றி பெறுவது என்ற அச்சத்தின் வெளிப்பாடுதான் இவை எல்லாமே. திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் குறு நில மன்னர்களைப் போலச் செயல்படுகிறார்கள். பிரச்னை பூதாகரமாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலை ஏற்படும்போது அந்த சூழலைத் திசைதிருப்ப ஏதாவது செய்வார்கள். விடியாத திமுக அரசு வெறும் விளம்பரம் செய்யும் அரசாகவே இருக்கிறது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/Y63mel1
0 Comments