பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, `என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று இரவு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் நடைபயணத்தை தொடங்கினார். கொண்டமநாயக்கன்பட்டியில் தொடங்கிய இந்த நடைபயணம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம், தேவர் சிலை, எம்.ஜி.ஆர்.சிலை வழியாக சென்று பாலகோம்பை பிரிவில் உள்ள முருகன் தியேட்டர் பகுதியில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார்.
அப்போது பேசிய அண்ணாமலை, ``ஆண்டிபட்டி சாதாரண தொகுதி கிடையாது. அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய தொகுதி. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை முதலமைச்சராக மாற்றியது ஆண்டிபட்டி. இன்று நடைபெற்ற யாத்திரையை பார்க்கும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. இங்கு இருப்பவர்கள் ஆன்மீகம் மற்றும் தர்மத்தின் பக்கம் இருப்பவர்கள். ஏன் என்றால் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசுகிறார் அதை எல்லாம் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள். தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்வாதி முதலமைச்சர் முக.ஸ்டாலின். அவரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் சொன்னதில் இருந்தே ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை. ஏன் என்றால், அடுத்த இரண்டரை ஆண்டுகள் கொள்ளை அடிக்க முடியாது என்பதால். ஊழல் மற்றும் குடும்ப கட்சிகள் ஒரு புறம். மற்றொரு பக்கம் பிரதமர் உள்ளார். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடைபெறுகின்ற யுத்தம் தான் வரும் தேர்தல். நமது பிரதமர் பாண்டவர் அணி. 2024 பாராளுமன்ற தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற செய்வீர்கள்.
படத்தில் நடிக்க தெரியாத இரண்டு நபர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்கள் வேறு யாரும் இல்லை மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தான். அரசியலில் நடிப்பதை படத்தில் நடித்தாலாவது படம் ஓடியிருக்கும்.
ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வராகத்தான் உள்ளார். துண்டு சீட்டு இல்லாமல் அவரால் பேசமுடியாது. அதனாலே பொய்யாக பேசுகிறார்.
பாஜக எதுவும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் கூறினார். அதற்கு 13 பக்க வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். அதில் பாரத பிரதமர், `10 லட்சம் கோடிக்கு நிதி ஒதுக்கி உள்ளார்’ என தெரிவித்துள்ளோம். ஏழு நாள்கள் ஆகியும் முதல்வர் இதற்கு பதில் கூறவில்லை. இந்தியா என்ற வார்த்தையை உச்சரிக்காத ஸ்டாலின் இந்தியா என்ற கூட்டணியில் இருக்கிறார்.
முளைத்து மூன்று இலை விடவில்லை அதற்குள் சனாதன தர்மத்தை வேரறுப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். கி.வீரமணி சனாதனமும் இந்து மதமும் ஒன்று என கூறுகிறார். சனாதன தர்மம் எந்த ஒரு மதத்திற்கும் எதிரானது கிடையாது. திமுக முதலில் சனாதனத்தை எதிர்ப்போம் என கூறுவர், இரண்டாவதாக ஒழிப்போம் என கூறுவார்கள் , மூன்றாவது வேரறுப்போம் என சொல்வார்கள். தேர்தல் வந்த பின்னர் வெற்றிவேல் வீரவேல் என கூறி திமுக இந்துக்களுக்கான கட்சி என்று கூறுவர். அதற்கு நீங்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். எந்த ஒரு மதத்தையும் கொச்சைபடுத்தாதீர்கள்.
நான் யாத்திரை செல்லும் இடங்களில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர். அவர்களுக்கு ஒன்று கூறிக்கொள்கிறேன் சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நிற்காது” என நகைச்சுவையாக கூறி பேச்சை நிறைவு செய்தார்.
from India News https://ift.tt/rsOPLFi
0 Comments