விருதுநகர் தாலுகாவுக்குட்பட்டது சிவஞானபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட நந்திரெட்டிப்பட்டியில் சுமார் 300 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர் மக்களின் பயன்பாட்டுக்காக பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் சுண்ணாம்பு சத்து கலந்து அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதால், மக்கள் சிறுநீரக கல் பாதிப்பு நோய்க்கு ஆளாக நேரிடுவதாக புகார் எழுந்தது.
இது குறித்து நந்திரெட்டிப்பட்டியை சேர்ந்த ஊர்மக்கள் நம்மிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கென 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியும், பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்கத்தொட்டியும் உள்ளது. எங்களது ஊருக்கு சிவஞானபுரம் பஞ்சாயத்தில் இருந்தே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பொதுவாக நந்திரெட்டிப்பட்டி, சிவஞானபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏனைய பிற கிராமங்களுக்கும் விருதுநகர்- புல்லலாக்கோட்டை சாலையில் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்களில் இருந்து தான் குடிநீர் உறிஞ்சப்படுகிறது.
இவ்வாறு உறிஞ்சப்படும் நீருடன், தாமிரபரணி தண்ணீரை கலந்து பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்காக குளோரின் சுத்திரிகரிப்பு செய்து சப்ளை செய்கிறார்கள். இந்த குடிநீர் சுவையற்று அதிக உப்புத்தன்மையுடன் இருக்கிறது. குடிநீருக்கோ, சமையலுக்கோ பயன்படுத்த லாயக்கற்ற அந்த நீரைத்தான், நாங்கள் கடந்த 8 மாதங்களாக பயன்படுத்தி வருகிறோம். ஏற்கெனவே உப்புத்தன்மையுடைய நீர் குடித்து சிறுநீரக கல் பாதிப்பு ஏற்பட்டவர்கள், எங்களது ஊரில் ஏராளமானோர் உள்ளனர்.
2020-ம் ஆண்டு, `உப்புத்தன்மை அதிகம் உள்ள நீரை குடிப்பதனால் நோய்வாய்பட்டு மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, இதுதொடர்பாக மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களின் சுகாதாரம் காக்க வேண்டும். மேலும், மக்கள் குடிக்க தகுந்த வகையில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்' எனக்கேட்டு ஊர் மக்களின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தோம். ஆனாலும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தி உடனடியாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர்ந்து பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்னே நோய்தடுப்புத்துறை சார்பில் சிவஞானபுரம் மற்றும் நந்திரெட்டிபட்டி ஆகிய இரண்டு ஊர்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தரத்தை பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அதன் பின்னரும் அதிகாரிகள் மௌனம் சாதித்ததால், மாநில தகவல் ஆணையத்தில் எங்கள் ஊரில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் மற்றும் குடிநீர் தர பரிசோதனைக்கான அறிக்கைகளை கேட்டு மனு செய்தோம். அதில், 30 வயது முதல் 75 வயதுக்குட்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின்படி பெரும்பாலான பேருக்கு சிறுநீரக கல் பாதிப்பு மற்றும் ரத்தத்தில் உப்பு அளவு அதிகமாகியிருப்பதும், குடிநீரில் கலந்திருக்கும் உப்புத்தன்மையால் அந்த நீர் குடிப்பதற்கு தகுதியற்றது என அறிக்கை அளித்திருப்பதும் எங்களுக்கு தெரியவந்தது.
இதற்கிடையில் எங்களது கிராமத்தில் 2021-ம் ஆண்டு நிலவரப்படி 7 பேர் சிறுநீரக கல் பாதிப்பு பிரச்னையால் உயிரிழந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் 30 முதல் 45 வயதுக்குட்பட்டோர்தான். எனவே, இந்த விவரங்களை சுட்டிக்காட்டியும் மாநிலத் தகவல் ஆணையத்திலேயே, பொதுமக்களின் நலனுக்காக மீண்டும் சீராய்வு மனு செய்தோம். மனு மீது விசாரணை நடத்திய மாநில தகவல் ஆணையர், நந்திரெட்டிப்பட்டியில் தாமிரபரணி தண்ணீருக்கென தனி நீர்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்யவேண்டும், உப்புத்தன்மை கலந்த நீரை குடிப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மக்கள் இறப்பதை தடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை தொடர்ந்து தாமிரபரணி தண்ணீருக்கென எங்களது ஊரில் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி புதிதாக நிறுவப்பட்டு, ஒப்புக்காக உத்தரவு செயல்முறைப்படுத்தப்பட்டது. இந்தத் தொட்டியின் மூலம் தண்ணீர் பிடித்து மனதை தேற்றிவந்த எங்கள் ஊர் மக்கள், அந்த உணர்வை முழுதாய் அனுபவிக்கும் முன்பே இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் வருவதில்லை. இதனால் நாங்கள் மீண்டும் பழையப்படி, உப்புத்தன்மையுள்ள நீரைத்தான் பருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை எடுத்துச்சொல்லி பொதுமக்களின் நலன் கெடும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினால் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டி வருகிறார்கள்" என்றனர்.
குற்றச்சாட்டுகள் குறித்து, ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "எங்களது ஊரில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் 10,000 லிட்டர் நீர்த்தேக்கத்தொட்டி ஆகிய இரண்டிலும் இருந்து மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகிறோம். இதுதவிர தாமிரபரணி தண்ணீருக்கென தனியே வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியிலும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒரு வீட்டுக்கு இரண்டு குடங்கள் தண்ணீர் பிடித்தால் நந்திரெட்டிப்பட்டியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அந்த சின்டெக்ஸ் தொட்டி தண்ணீர் போதுமானதாக இருக்கும். ஆனால் அவர்கள் குடிப்பதற்கு மட்டுமல்லாமல் இதர பயன்பாட்டுக்கும் தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்துவதில்தான் சிக்கல் ஏற்படுகிறது. இதுதவிர ஊருக்குள் புதிதாக 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டவுடன் விரைவில் குழாய் இணைப்பின் மூலம் அவரவர் இல்லத்திற்கு அருகிலேயே பொதுக்குழாய் மூலம் தாமிரபரணி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
சமூக ஆர்வலர் கோச்சடை தெரிவிக்கையில், "தாமிரபரணி தண்ணீருக்கென அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்க் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக செயல்படவில்லை. சிவஞானபுரம் பஞ்சாயத்திலிருந்து சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீரை பம்ப் செய்வதில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணமென்று சொல்லப்படுகிறது. இதனால் பஞ்சாயத்து நீர்தான் சுழற்சி முறையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதிலும் நந்திரெட்டிபட்டி தெற்கு தெருவில் உள்ள 10,000 லிட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கத்தொட்டி 1970-ல் கட்டப்பட்டது. இந்தத் தொட்டி பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. சுமார் 300 குடும்பங்கள் வாழும் இந்த ஊருக்கு மொத்தமே 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து குடிநீர் வழங்குவது போதுமானதாக இல்லை.
எனவே புதிதாக மேலுமொரு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அதனடிப்படையில், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணிகள்தான் தொடங்கப்படவில்லை. உப்புத்தன்மை உள்ள நீரை பருகியதால் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகி கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இதுவரை 13 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எனவே ஊர்மக்களின் நன்மைக்காக விரைவில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணிகள் தொடங்கப்பட வேண்டும். அதேசமயம், மக்களின் சுகாதார நலன் காக்க, பஞ்சாயத்து நீரை சுத்திகரித்து குடிப்பதற்கு தகுதியுள்ள வகையில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
from India News https://ift.tt/4mgoGN3
0 Comments