``இஸ்லாமிய சிறைவாசிகள் விவகாரம்... தி.மு.க மீது பாயும் நாம் தமிழர் கட்சியினர் என பரபரப்பான அரசியல் சூழலில், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னாவைச் சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தேன்!
``இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில், தி.மு.க-வுக்கு என்ன பிரச்னை.. ஏன் காலம்தாழ்த்திக் கொண்டே போகிறீர்கள்?”
``சட்டத்தின்படி, குண்டு வெடிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஒருவர்மீது வழக்கு பதிவுசெய்திருந்தால், அவரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. ஒன்றிய அரசுக்கே இருக்கிறது. மாநில அரசின் அதிகாரத்துக்குள் வருபவர்களை நாங்கள் விடுதலை செய்திருக்கிறோம், மேலும் ஆதிநாதன் கமிட்டியின் பரிந்துரைக்கு ஏற்ப ஆளுநரின் அதிகாரத்தால் விடுதலை செய்ய இயலும் பட்டியலை தயாரித்து ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறோம். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் தூங்கிக் கொண்டிருக்கிறார். எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்."
``தமிழ்நாடு அரசு நினைத்தால் அவர்களை விடுதலை செய்ய முடியும்... ஆனால் தி.மு.க விரும்பவில்லை என்ற விமர்சனம் உள்ளதே!"
இஸ்லாமிய சிறைவாசிகளை தி.மு.க விடுதலை செய்ய மறுக்கிறது எனப் பேசிக் கொண்டிருப்பவர்களை, அரசியலமைப்புச் சட்டத்தின் 161, 435, 431 மற்றும் 432 ஆகியவற்றைப் படிக்கச் சொல்லுங்கள்."
``கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம்... எனப் பெண் வாக்காளர்களை குறிவைக்கிறதா தி.மு.க?"
``தி.மு.க என்பது அரசியல் கட்சி மட்டுமல்ல. சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் 75 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைப்பு. பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்ததும், பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூகநீதியை நிலைநாட்டுவதெல்லாம் தி.மு.க-வின் சமூக அக்கறை. அதன்நீட்சியே இந்த திட்டங்களெல்லாம். இதனையெல்லாம் தேர்தலை கணக்கில் வைத்துதான் செய்கிறோம் என்பது அபத்தம்."
``நிதிக்கு எங்கே செல்வீர்கள்... என்ற கேள்வி மக்கள் மத்தியிலேயே எழுந்திருக்கிறதே!”
``சமூக நலத்திட்டங்களை சமூக வளர்ச்சிக்கான முன்னெடுப்பாக பார்க்கவேண்டுமே தவிர, முதலீடுகளாக பார்க்கக் கூடாது. அ.தி.மு.க-வின் 10 ஆண்டுக்கால ஆட்சியில் ஜி.டி.பி மைனஸ் 4-ல் இருந்தது, இப்போது 8-ஆக உயர்ந்திருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு ஓடின. ஆனால் இப்போது ரூ.2 லட்சம் கோடிக்கான முதலீடுகள் வரப்பெற்றுள்ளன. தொழில் முதலீட்டில் 17-வது இடத்திலிருந்த மாநிலம் தற்போது 3-வது இடத்துக்கு வந்திருக்கிறது. தொழில் வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கிறோம். பொருளாதாரரீதியிலும் தமிழகம் வளர்ந்து கொண்டிருக்கிறதே. அதன் வருவாயை வைத்து கடனையும் அடைக்கலாம், சமூக முன்னேற்றத்துக்கும் செலவிடலாமே!”
``சனாதனம் குறித்து தி.மு.க பேசிவருவது I.N.D.I.A கூட்டணிக்குள்ளேயே சலசலப்புகளை ஏற்படுத்திவிட்டதே!"
``பா.ஜ.க அப்படித்தான் கிளப்பிவிடும். எதிர்க்கட்சிகளின் கூட்டணிமீது ஓர் அழுத்தத்தை பா.ஜ.க உருவாக்க முயல்கிறது. மக்களை மதரீதியாக எங்கேயெல்லாம் பிளவு படுத்தமுடியும் என திட்டம் போட்டு, இதுபோன்ற விஷம பிரசாரம் செய்யும் கட்சிதானே பா.ஜ.க. இதைவைத்து I.N.D.I.A கூட்டணி உடைந்துவிடுமென பேசுவதெல்லாம் முட்டாள்தனம். அப்படி பா.ஜ.க பேசுகிறதென்றால் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்றே பொருள்.”
``விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் என தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன... இதர மாநிலங்களில் நடந்தார்போல் தெரியவில்லையே?”
``பகுத்தறிவு, சுயமரியாதை, ஒரு பிரச்னையை எப்படி கையாள்வது என்ற புரிதல் என தமிழ்நாடு எப்போது பி.ஹெச்.டி பட்டதாரி அளவில் சிந்திக்கும். இதர மாநிலங்களில் அவ்வாறில்லை. விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு விதை போட்டிருக்கிறது. இந்தியா முழுக்க இதன் ஆபத்துகள் குறித்த புரிதல் மிக விரைவில் ஏற்படும்.”
``விஜயலட்சுமி விவகாரத்தை வைத்து தி.மு.க-வை நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சிக்கிறார்களே!"
``அவர்கள் இழிவாகப் பேசுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வை எதிர்த்து சித்தாந்தரீதியாக பேச வக்கற்று, இப்படியான அவதூறுகளை பரப்பி, குறை சொல்லி, பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார் சீமான்."
``நாம் தமிழர் கட்சியினர் இழிவாகப் பேசுகிறார்கள் என்கிறீர்களே... தி.மு.க-வினரும் கன்னியம் தவறி பேசுவதாக குற்றச்சாட்டுகள் இருக்கிறதே?”
``தி.மு.க தலைவர்களை சீமான் தாக்கிப் பேசினார் என்பதற்காக நான் சீமானைக் கடுமையாக விமர்சித்திருந்தேன். சீமானை கடுமையாகச் சாடினேன் என்பதற்காக, எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை அழைத்து கண்டித்தார். `உனக்கு தேர்தலில் சீட் இல்லை!' என்றார். எங்கள் அரசியல் தலைமை எங்களை எப்படி வழிநடத்துகிறது என்பதற்கு இதுவே உதாரணம். ஆனால் அந்த அயோக்கர்கள் கேவலமாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்களே!”
from India News https://ift.tt/XMQijDy
0 Comments