காவிரி விவகாரம்: கர்நாடகத்திலும் வலுக்கும் போராட்டம்! - என்ன செய்யப்போகின்றன இரு மாநில அரசுகள்?

`காவிரி நீரை தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடுங்கள்' எனத் தமிழ்நாட்டிலும், `திறந்துவிட முடியாது; கூடாது' என கர்நாடகாவிலும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன. நீர் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், காவிரி நீரைத் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகா இல்லை எனக்கூறி ஆளும் காங்கிரஸ் கட்சித் தொடங்கி, அங்கிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டிருக்கின்றன.

காவிரி விவகாரம் - உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் திறந்துவிடாமல் கடந்த சில மாதங்களாக கர்நாடகம் முரண்டு பிடித்துவருகிறது. இதனால், காவிரிப்படுகையின் கடைமடை வரை குறுவை சாகுபடிக்கான நெற்ப்பயிர்கள் காய்ந்து கருகிக்கொண்டிருக்கின்றன. `கருகும் பயிரைக் காப்பாற்றுங்கள், காவிரி நீரைத் திறந்து விடுங்கள்' என இரு மாநில அரசுகளுக்கும் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள் தமிழ்நாடு விவசாயிகள். அதேசமயம் கர்நாடகா தங்கள் மாநிலத்தில் போதிய மழை பொழியவில்லை; அணைகளில் நீர் குறைவாக இருக்கிறது; கண்டிப்பாக நீர் திறந்துவிடமுடியாது என மறுத்தது. இந்த விவகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீட்டுக்குச் சென்றது.

கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பை ஆய்வு செய்த ஆணையம், கடந்த 13-ம் தேதி, தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 12,400 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டது. ஆனால், ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா நீர் தர மறுத்துவிட்டது. இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 5,000 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என நீர் அளவைக் குறைத்து காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. ஆனால், அதையும் எதிர்த்து கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட, மேலாண்மை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக் கூறிவிட்டது.

கர்நாடகா பாஜக போராட்டம்

இந்த நிலையில்தான், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிடக் கூடாது எனக் கூறி கர்நாடகா மாநில பா.ஜ.க, மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போராட்டத்தில் கலந்துகொண்ட கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க தலைவருமான பசவராஜ் பொம்மை, ``கர்நாடகாவில் போதுமான மழை இல்லை; இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடுவது எங்கள் மாநில நலனுக்கு எதிரானது. காவிரி கர்நாடகாவில்தான் உற்பத்தியாகிறது. எனவே, காவிரி கர்நாடகாவுக்கே சொந்தம். இது தமிழகத்தின் சொத்து அல்ல. ஆனால், அவர்கள் காவிரி நீரை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்!" என எதிர்த்துப் பேசினார். அதேபோல, கர்நாடகாவைச் சேர்ந்த விவசாய அமைப்புகளும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது எனக்கூறி முழுநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தியிருக்கின்றன. தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்திருக்கின்றன.

டி.கே.சிவகுமார்

இது குறித்துப் பேசிய கார்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், ``காவிரி விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. நாங்கள் மேக்கேதாட்டூ அணை திட்டத்துக்காக பாதயாத்திரை நடத்தினோம். விவசாய மக்களைக் காப்பாற்ற எங்கள் காங்கிரஸ் அரசு தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் எங்கள்மீது தேவையில்லாமல் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றன; இதில் அரசியல் செய்துகொண்டிருக்கின்றன. தற்போது நாங்கள் மேல்முறையீடு செய்தாலும், காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகுங்கள் என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறும். நீங்கள் போராட்டம் நடத்துங்கள். ஆனால் முழு கடை அடைப்பு நடத்தினால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். மேலும், மேக்கேதாட்டூ திட்டத்தைச் செயல்படுத்த நாங்கள் ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். எல்லாவற்றையும் பேசித் தீர்த்துகொள்ளலாம். மத்திய அரசு எப்போது தேதி நிர்ணயம் செய்கிறதோ, அப்போது நாங்கள் டெல்லிக்குச் செல்ல தயாராக இருக்கிறோம்!" என்றிருக்கிறார்.

அதேசமயம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய நீரை திறக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும். இந்தத் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு கர்நாடக அரசு ஆளாக நேரிடும். விநாடிக்கு 5,000 கன அடி நீரை 15 நாள்களுக்கு திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்திற்கான பங்கை தரவேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. போதிய மழை இல்லாததால் கர்நாடகாவில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், இருக்கின்ற தண்ணீரில் தமிழ்நாட்டிற்கான பங்கீட்டை வழங்க வேண்டும் என்பதைதான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பேச்சுவார்த்தையில் பலன் இல்லை என்றுதான் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சென்றோம். மீண்டும் பேச்சுவார்த்தைக்குச் சென்றாலும் நமது உரிமைகள்தான் பறிபோகும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

துரைமுருகன்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், தமிழ்நாடுக்கான நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு முரண்டுபிடிக்கிறது. அதேபோல, தமிழ்நாடு அரசும் எப்படியாவது உரிய நீரை பெற்றுவிட வேண்டும் என விடாப்பிடியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் எம்.பி-க்கள் குழுவும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான குழுவும் டெல்லிக்குச் சென்று, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை தனித்தனியே சந்தித்துத்து பேசிவிட்டன. இருப்பினும், கன்னீத்தீவு கதைபோல காவிரிநீர் பிரச்னை காலம்காலமாக இரு மாநிலங்களுக்கும் இடையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பயிர்கள் இன்றும் கருகிக்கொண்டுதான் இருக்கின்றன. என்றுதான் தீருமோ இந்த காவிரி பிரச்னை?



from India News https://ift.tt/GDChQq9

Post a Comment

0 Comments