`அவங்க சமைச்சா எங்க குழந்தைங்க சாப்பிடாது' - தொடரும் பட்டியலினச் சமையலர்கள் மீதான சாதிய மனநிலை

`முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து மதிய உணவோடு சேர்த்து, காலை உணவும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. குழந்தைகளின் காலைப் பசியைப் போக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட மிகச்சிறந்த முன்னோடித் திட்டம் என்றாலும், `அந்த உணவை இன்னார் சமைத்தால்தான் சாப்பிட அனுமதிப்போம். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தோர் சமைத்தால், எங்கள் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்க மாட்டோம்' எனத் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சாதியப் பாகுபாட்டுடன் பெற்றோர்கள் நடந்துகொள்ளும்விதம் நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது.

பள்ளி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள உசிலம்பட்டி கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது. மொத்தம் 11 மாணவ, மாணவிகள் படித்துவரும் இந்தப் பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட, முனிய செல்வி என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சமையலர் காலை உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். ஆனால், 11 மாணவர்களில் வெறும் 2 பேர் மட்டுமே அந்த உணவைச் சாப்பிடுவதாகவும், மீதமுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் வற்புறுத்தலால் சாப்பிடாமல் தவிர்த்திருக்கின்றனர். அதாவது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைப்பதால், தங்கள் குழந்தைகள் உணவு சாப்பிட அந்தப் பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை.

இந்த விவகாரம் மாவட்ட நிர்வாகத்துக்குச் செல்ல, கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டிபாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, காவல்துறை ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பெற்றோர்களைப் பள்ளிக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரம் ஊடகங்களில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, எம்.பி. கனிமொழி கருணாநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் உசிலம்பட்டி பள்ளிக்கூடத்துக்கே நேரில் சென்று ஆய்வுசெய்ததுடன், சமையலருக்கு ஆறுதல் சொல்லி, மாணவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

தூத்துக்குடி பாராளுமன்ற எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் காலை உணவு சாப்பிட்டனர்.

இதேபோல, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலஞ்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண் சமையலராக இருப்பதைக் காரணம் காட்டி , தங்கள் குழந்தைகளைச் சாப்பிடவிடாமல் பெற்றோர்கள் தடுத்திருக்கின்றனர். 30 மாணவ, மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 15 மாணவ, மாணவிகள் மட்டுமே உணவு சாப்பிடுவதாகவும், மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மீதமுள்ள 15 மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் சேர்ந்து எடுத்த ஊர்க்கட்டுப்பாட்டு முடிவால் காலை உணவைச் சாப்பிட மறுத்திருக்கின்றனர். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்குச் செல்ல, அவர் நேரடியாகப் பள்ளிக்கு வந்து சம்பந்தப்பட்ட பெற்றோர்களை சந்தித்துப் பேசினார்.

பேச்சுவார்த்தையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்

ஆனால், மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே சில பெற்றோர்கள், `அவர் சமைத்த சாப்பாட்டை எங்கள் குழந்தைகள் சாப்பிட விட மாட்டோம். வேண்டுமென்றால், நாங்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேறு பள்ளியில் எங்கள் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்கிறோம்' எனச் சாதிய வன்மத்துடன் அடாவடியாகப் பேசியிருக்கின்றனர். இதைக் கேட்டு அதிர்ந்துபோன ஆட்சியர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்ட பெற்றோரைக் கடுமையாக எச்சரித்ததுடன், காவல்துறையினரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிகொடுக்கச் சொல்லி வழக்குப் பதியாமல் திரும்பி அனுப்பியிருக்கிறார். இதே போன்ற சம்பவம்தான் திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் 2018-ம் ஆண்டு நடைபெற்றது. அந்தச் சம்பவம் தொடர்பாக 88 பேர்மீது வழக்கு பதிவுசெய்தது தமிழ்நாடு காவல்துறை.

இப்படித் தொடர்ந்து, `தாங்கள் பெற்ற பிஞ்சுகளின் மனதில் சாதிய நஞ்சை விதைக்கும்விதமாக பெற்றோர்கள் நடந்துகொள்கிறார்களே, பட்டியலினச் சமையலர்களுக்கு எதிரான இந்தச் சாதிய மனநிலை மாறுமா... அரசின் நடவடிக்கை போதுமானதாக இருக்கிறதா?' என்ற கேள்விகளை சமூகச் செயற்பாட்டாளர் ஷாலின் மரிய லாரன்ஸிடம் கேட்டோம். ``இந்தக் கொடுமை பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளிலும் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. இவற்றில் வெளியில் வருவது வெகு சில சம்பவங்கள் மட்டும்தான். சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது; சாதியத் தீண்டாமை மிகப்பெரிய குற்றம் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், இந்தக் குற்றத்தைத்தான் சர்வ சாதாரணமாக சாதிய மனோநிலைகொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் பட்டியிலினச் சமையலர்கள்மீது நிகழ்த்துகின்றனர். அவர்கள் சாதிரீதியில் தீண்டாமையைக் கடைப்பிடித்து துன்புறுத்தல் செய்யும் கொடுமையோடு, தங்கள் சாதிவெறிக்கு அவர்களின் குழந்தைகளையும் பட்டினிபோடும் கொடுமையைச் செய்கிறார்கள்.

ஷாலினி மரிய லாரன்ஸ்

இப்படி வெளிப்படையாகப் பேசுபவர்கள், சட்டத்தை மதிக்காமல் ஆணவமாகச் செயல்படுபவர்கள்மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்ய வேண்டும்தானே... இந்தக் குற்றவாளிகளை, சிறையிலடைக்க வேண்டும்தானே... ஆனால், அரசாங்கமும் காவல்துறையும் அந்தக் குற்றவாளிகளைச் சரிக்கு சமமாக அமரவைத்து, பஞ்சாயத்துப் பேசுவதுபோல அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையின் மூலம் எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்துவிடுமென்றால் பிறகு சட்டம் எதற்கு இருக்கிறது... இதுவரை இந்தக் கொடுமையை நிகழ்த்தியவர்கள்மீது குறைந்தபட்சம் வழக்கு பதிவுகூட காவல்துறை செய்யாமல் மன்னித்து அனுப்புகிறதென்றால், அவர்கள் மீண்டும் மீண்டும் அதே தவற்றைத்தானே பயமில்லாமல் செய்வார்கள்... அவர்களைப் பார்த்து மற்றவர்களும் இந்தக் கொடுமையைத் துணிந்து செய்வார்கள். தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும்போது திருப்பூர் அவினாசி பள்ளிக்கூடத்தில் நடந்த இதே கொடுமையை எதிர்த்து எப்படிப் பேசினார்கள், போராட்டம் செய்தார்கள்... ஆனால் இப்போது ஏன் முதல்வர் ஸ்டாலின் சாதி தொடர்பாக எந்தப் பிரச்னை வந்தாலும் மௌனம் காக்கிறார்?

உணவு பரிமாறிய கனிமொழி

கனிமொழியும் கீதா ஜீவனும் நேரில் சென்று பள்ளிக்கூடத்தில் சாப்பிட்டது வரவேற்கக்கூடிய விஷயம்தான். அதனால் பிரச்னை தீர்ந்துவிடுமா... முதலில் பள்ளியில் சமைக்கும் பட்டியலினச் சமையலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சாதியக் கொடுமைகள் குறித்து அரசாங்கம் ஆய்வுசெய்ய வேண்டும். ஆனால், அதைச் செய்யவேண்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தன் நண்பர் உதயநிதியிடம் ட்விட்டரில் விளையாடிக்கொண்டிருக்கிறார். காலை உணவுத் திட்டம் மிக அருமையான திட்டம்தான். ஆனால் அதில் சாதி புகுந்து எவ்வளவு கலங்கத்தை ஏற்படுத்துகிறது... அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொண்டு இனிமேலாவது தீவிரமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்" என குற்றச்சாட்டுகளுடன் கோரிக்கை வைத்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/NVX4uq9

Post a Comment

0 Comments