காலை உணவுத் திட்டம் -தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இதில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை பதிவு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 31,000 அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு செய்து, இன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. `அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் பெரும் துணை நிற்பதாக முதலமைச்சர ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவையும் அவர் சாப்பிட்டார். முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தொடர்ந்து தமிழகத்தின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ எம்.பி-க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த தொகுதியில் உள்ள பள்ளியில் நடைபெறும் காண உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், ``காலை உணவு திட்டத்துக்கு அரசு செய்வது நிதி ஒதுக்கீடு அல்ல... நிதி முதலீடு. யாரும் உதவவில்லை எனக் கலங்கும் மக்களுக்காக திமுக அரசு உறுதுணையாக உள்ளது. பலரின் மகிழ்ச்சிக்கு நானும் காரணமாக இருப்பதால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
from India News https://ift.tt/l4KjJvU
0 Comments