அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது’ கதைபோல உள்ளது காவிரி நீர் விவகாரம். கர்நாடக அரசு கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி வரை காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 51 டி.எம்.சி நீரில் 15 டி.எம்.சி மட்டுமே தந்திருப்பதால் எஞ்சியுள்ள நீரை உடனடியாகத் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் 15 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட், ‘காவிரி விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.’ இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கும் விதமாக 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை உருவாக்கி உத்தரவிட்டுள்ளார்.
1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்ப்பூசல் சட்டம் அமலுக்கு வந்தது, இதன் மூலம் இந்தியாவில் பல மாநிலங்களில் உருவான நதிநீர் பிரச்னைகள், தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுதான் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. கிருஷ்ணா நடுவர் மன்றம், நர்மதை நடுவர் மன்றம் போன்றவற்றை முன்மாதிரியாகக் கொண்டு காவிரி நடுவர் மன்றமும் அமைக்கப்பட்டது.
இப்போது புதிய அமர்வு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை நினைத்து ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபக்கம் புதிய அமர்வு உத்தரவிட்டால் மட்டும், உடனே கர்நாடக மாநிலம் கேட்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கடைமடை மாநிலத்துக்குத்தான் அதிக உரிமை என நதிநீர் சட்டங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட சட்டப் போராட்டம் மட்டும் தீர்வாகாது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, சிறப்புச் சட்டம் இயற்றி காவிரியில் நமக்கு உள்ள உரிமையை மீட்டெடுக்க வேண்டும். இல்லையென்றால், காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது.
- ஆசிரியர்
from India News https://ift.tt/Pz7D5mR
0 Comments