பன்னீர் மனு தள்ளுபடி: இறுதி வாய்ப்புக்கும் `செக்’ - அரசியல், சட்ட ரீதியாக என்ன செய்யபோகிறார்?!

ஜெயலலிதா மறைவுக்கு பின் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து கட்சியை வழிநடத்தி வந்தனர். இந்த சமயத்தில்தான், `கட்சிக்கு இரட்டைத் தலைமை வேண்டாம், ஒற்றை தலைமை வேண்டும்’ என்கிற முழக்கம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுக-வில் வலுவாக எழுந்தது. அதனை தொடர்ந்து பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக தேர்வாக விரும்பினர். இது தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பிரச்னை உண்டான நிலையில், பொதுக்குழுவுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரை நோக்கி பாட்டில்கள் வீசப்பட்டன.

அதிமுக பொதுக்குழு

இதனையடுத்து அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி மீண்டும் கூடியது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டும், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கப்படுவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரியும், தங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான பி.ஹெச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிமுக பொதுக்குழு

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில், மொத்தமாக ஏழு நாள்கள் வாதம் நடைபெற்றது. அத்துடன், இரண்டு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை முடிந்து கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகம்மது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி காலை தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், `அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. பொதுக்குழு கூட்டம் தொடர்பான விரிவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இதன்படி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானம் செல்லும். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டதும் செல்லும். தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்’ எனக் கூறியுள்ள நீதிபதிகள் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நால்வர் தொடர்ந்த மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

பன்னீர்செல்வம்

“இந்த தீர்ப்பு அரசியல் ரீதியாக ஓ.பி.எஸுக்கு பெரிய பின்னடைவுத்தான்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான தராசு ஷ்யாம். மேலும், இந்த வழக்கு குறித்து விரிவாக பேசியவர், “இப்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை ஒட்டி உச்ச நீதிமன்றத்துக்கு சென்றாலும் அங்கும் இதேதான் வரும். இதற்கு முன்னரும் உச்ச நீதிமன்றம் சென்றனர். அப்போது, தனிநபருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பைவிட, கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான் பெரியது. எனவே இதை கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இப்போதும் அதேதான் சொல்லி இருக்கிறார்கள்.

இடைக்கால உத்தரவு வழங்கவில்லை என்றால் எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என நீதிமன்றத்தில் பன்னீர் தரப்பு கன்வீன்ஸ் செய்ய வேண்டும். இங்கு தனிநபர் பாதிப்பு என்றால் தனிநபர் பெருசா, கட்சி பெருசா என்கிற கேள்விதான் முக்கியமானது. அதை வைத்துத்தான் பேலன்ஸ் ஆஃப் கன்வீனியன்ஸ் பார்ப்பார்கள். இடைக்கால உத்தரவு வழங்கிவிட்டால், ஈடு செய்ய முடியாத இழப்பு யாருக்கு ஏற்படும். கட்சிக்கு ஏற்படும் என்றால் இடைக்கால உத்தரவு வழங்க முடியாது. இரண்டாவது, இடைக்கால உத்தரவுக்கு பிறகு சமநிலை நீடிக்க வேண்டும். இடைக்கால உத்தரவு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வழங்கிவிட்டால், எடப்பாடிக்கு சமநிலை வழங்காது. எடப்பாடிக்கு வழங்கினால் ஓபிஎஸ்-க்கு சமநிலை வழங்காது. எனவே இடைக்கால உத்தரவு வழங்க முடியாது. அதைவைத்துதான் நீதிபதி ஆர்.மகாதேவன் அமர்வு இடைக்கால உத்தரவு வழங்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

தராசு ஷ்யாம்

ஓ.பி.எஸுக்கான சட்ட போராட்டத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு கொடுத்தது மட்டும்தான் ஓரளவு ஆதரவாக இருந்தது. ஆனால், அதில் ஃபங்க்சனல் டெட்லாக், அப்ரோச் எரர் என்கிற பிரச்னை வந்தது. அதாவது ஒரு தாவாவை ஒரு நீதிபதி அணுகும் போது, அதில் அப்ரோச் எரர் வரக்கூடாது. தாவாவை சிவில் தாவாவாக மட்டும் அணுக முடியாது. ஏனென்றால் ஒரு அரசியல் கட்சிக்கு செயற்குழு, பொதுக்குழு, பைலா ஸ்கீம் இருக்கும். அதை வெறும் சிவில் வழக்காக மட்டும் அணுக முடியாது. அதை அப்ளை செய்து பார்க்கும் போது எரர் வந்ததாக உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது.

அடுத்தடுத்த அமர்விலும் அதைத்தான் சொன்னார்கள். இனி ஒரு காலக்கட்டத்திலும் பொதுக்குழு தீர்மானத்துக்கு தடை கிடைக்காது. கட்சியைவிட்டு நீக்கியதாக சொன்னதற்கும் இடைக்கால தடை கிடைக்காது” என்றவர், ‘ஓபிஎஸுக்கு இருக்கும் ஒரே வழி அசல் வழக்கை தொடர்ந்து நடத்துவது, மக்களிடம் தன் பலத்தை நிருபிப்பதுதான்’ என்றவர், அசல் வழக்கில் உள்ள சிக்கல்களையும் விவரித்தார்.

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ் - சசிகலா

“அசல் வழக்கு முடிவதற்கு எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் ஆகலாம். இது கடுமையாக இழுக்கும். இதற்கு மிகப்பெரிய உதாரணம் சசிகலா. அதிமுக உட்கட்சி பிரச்னை வந்தபோது, சிறையில் இருந்து கொண்டே வழக்கு தொடுத்தார். ஆனால், இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு போகவில்லை. அப்படி போனாலும் சசிகலா பொதுச்செயலாளர் ஆகிவிடுவாரா என்பதும் கேள்விக்குறியே. ஏனென்றால் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக அதிமுக கட்சியிலும், அதன் செயல்பாடுகளிலும், விதிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அரசியல் கட்சி சம்பந்தமான வழக்குகள் சிவில் வழக்குகளாக இருந்தாலும், அதில் கடைப்பிடிக்கும் அதே விதிமுறைகளை அப்ப்டியே இதிலும் கடைபிடிக்க முடியாது. அப்படி எடுத்தால் அது அப்ரோச்சல் எரர் ஆகிவிடும்” என்றவர், ஒபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலம் குறித்து பகிர்ந்தார்.

“அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபித்தால் எல்லோரும் பணிந்து போவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிருபித்தார்கள்... எல்லோரும் பணிந்தார்கள். ஓ.பி.எஸ் வெற்றி பெறவில்லை என்றாலும், தோற்கடிக்கவாது செயல்பட வேண்டும். இன்னும் அவர் பாஜக காப்பாற்றும் என்கிற நம்பிக்கையில் ஓடி கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கட்சியாக உடைத்து அவர்கள் வர வேண்டும் என்றுதான் பாஜக நினைப்பார்களே தவிர, ஓபிஎஸுக்கு எப்படி உறுதுணையாக நிற்பார்கள். பல மாநிலங்களில் பல உதாரணங்களை பார்த்தும் ஓ.பி.எஸ் இன்னும் பாஜக-வை நம்புவது அவரின் அரசியல் அறியாமை. இப்போது அவருக்கான உடனடி வாய்ப்பு டிடிவி-யுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதுத்தான்” என்றார்.

ஜெயக்குமார்

இதனிடையே இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. தொண்டர்களால், பொதுமக்களால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தால் அடிமேல் அடி... கொட்டு மேல் கொட்டு வாங்கியுள்ள ஓ.பி.எஸ் கோஷ்டி, உண்மையான மானமுள்ளவர்களாக இருந்தால் இனி அதிமுக கரை வேட்டியையோ, கொடியையோ, இரட்டை இலை சின்னத்தையோ, அதிமுக சம்பந்தமான வண்ணங்களையோ, புரட்சி தலைவர், புரட்சி தலைவியையோ எங்கும் பயன்படுத்த கூடாது. அப்படி செய்தால் சட்டத்தை மீறிய செயலாகும்” என்று கூறியுள்ளார்.

ஓபிஎஸ் தரப்போ மேல்முறையீடு செல்வோம் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இனி ஓ.பி.எஸுக்கு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் என்ன மாதிரியான வரும்காலம் இருக்க போகிறது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/w07izRS

Post a Comment

0 Comments