கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின் படி நாட்டின் சில்லறை பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் வரம்பை மீறி கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக கடந்த ஜூலை மாதம் 7.44 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான பணவீக்க விகிதம் ஜூன் 2023-ல் 4.81 சதவிகிதமாகவும், ஜூலை 2022-ல் 6.71 சதவிகிதமாகவும் இருந்தது. நாட்டில் சில்லறை பண வீக்கம் 2 முதல் 6 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ள நிலையில் கடந்த 15 மாதங்களாக வரம்புக்குள் இருந்த சில்லறை பணவீக்கம் தற்போது உச்சவரம்பை கடந்துள்ளது.
கடந்த மாதம் தக்காளியின் விலை உச்சம் தொட்டதே சில்லறை பணவீக்கம் பல மடங்கு உயர்ந்ததற்கு பிரதான காரணமாக கருதப்படுகிறது. தக்காளி மட்டுமின்றி பிற காய்கறிகளின் விலையும் கடந்த மாதம் 37.3% அதிகரித்துள்ளது. இதே போல பருப்பு மற்றும் தானியங்களின் விலை 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற RBI நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் தற்போது சில்லறை பணவீக்கம் உச்சவரம்பை கடந்துள்ள நிலையில் ஆர்.பி.ஐயின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதை பற்றி நம்மிடம் பகிர்ந்துக்கொண்ட குடும்ப நிதி நிபுணர் லலிதா ஜெயபாலன் கூறுகையில், ``கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை சரி செய்ய இருக்கும் ஒரே வழி வட்டி விகிதத்தை அதிகப்படுத்துவது மட்டும்தான், எனவே ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக்கொண்டே வந்தது. நாட்டில் கடன் வட்டி விகிதங்கள் ரெப்போ வட்டியை விட 2% அதிகமாகவே இருக்கும்.
வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்கள் உயர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம். தற்போதைய சூழலில் ஆர்பிஐ ரெப்போ வட்டியை அதிகரிக்காமல் பொறுமைக்காத்து வருகிறது. இப்போதைய சில்லறை பணவீக்கம் நிலையானது அல்ல, எனவே வரும் காலத்தில் சில்லறை பணவீக்கம் குறைந்தால் ஆர்பிஐயின் ரெப்போ வட்டி விகிதம் அதற்கு ஏற்ப போல இருக்கும், ஒருவேளை வருங்காலத்தில் சில்லறை பணவீக்கம் இதே நிலையில் தொடர்ந்தால் வரும் அக்டோபர் மாதம் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு எல்நினோ ஆண்டாக கருதப்படுகிறது. இந்த பருவக்காலத்தில் அதிகப்படியான மழை மற்றும் அதிகப்படியான வறட்சி இருக்கும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த காலநிலை மாற்றத்தை பொறுத்துதான் பயிர்களின் விளைச்சல், பொருள்களின் ஏற்றுமதி ஆகிய அனைத்துமே இருக்கும். ஆனால் வரும் நாள்களில் சில்லறை பணவீக்கம் குறையும் என்பதுதான் ஆர்.பி.ஐயின் கணிப்பு. இந்த சில்லறை பணவீக்கம் உயர்வால் சேமிப்பாளர்களுக்கு தான் நன்மை, ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் சேமிப்புக்கான வட்டியும் அதிகரிக்கும், அதே நேரம் வீட்டுக்கடன், தொழில் கடன் ஆகியவை வாங்குபவர்களுக்கு இதனால் பாதிப்புதான் ஏற்படும்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் கடன் வட்டி விகிதமும் உயரும் எனவே கடன் வாங்குபவர்கள் சிரமப்படுவார்கள். இதனால் தான் ஒரு நாட்டில் வட்டி விகிதம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வார்கள், ஏனெனில் சேமிப்பாளர்களை விட, சிறு, குறு, பெரிய தொழில் என கடன் வாங்குபவர்களே அதிகம். ரெப்போ அதிகரித்தால் நாட்டின் ஜிடிபியும் பாதிக்கப்படும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஆர்பிஐ சுமூக முடிவெடுக்கும்.
சில்லறை பணவீக்கத்துக்கு தக்காளி விலையேற்றம் மட்டும் முக்கிய காரணம் என சிலர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, தக்காளி மட்டுமல்லாது அனைத்து காய்கறி, பழங்கள் மற்றும் பருப்புகளின் விலையும் கடந்த மாதம் அதிகமாகதான் இருந்தது. இவை அனைத்தும் சேர்ந்தே சில்லறை பணவீக்கத்துக்கு காரணமாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக சில்லறை பணவீக்கத்தில் இருந்து எளிய மக்கள் தப்பிக்க ஒரே வழிதான் உள்ளது, அது தங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத வீண் செலவுகள் செய்வதை தவிக்க வேண்டும். குறிப்பாக மிக பெரிய செலவுகளான கார், வீடு போன்ற செலவுகள் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும், இந்த செலவுகளை அடுத்து 6 முதல் 9 மாதங்களுக்கு ஒத்திவைத்தால் நல்லது” என்றார்.
from India News https://ift.tt/vpiwyq6
0 Comments