'கோயம்பேடு சந்தைக்கு மூடுவிழா' - வியாபார புதுத் திட்டத்தில் திமுக அரசு?!

சென்னை, கோயம்பேட்டில் 85 ஏக்கர் பரப்பளவில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இது தான் ஆசியாவில் இருக்கும் சந்தைகளில் மிகப் பெரியது. இந்நிலையில் இந்த சந்தையை திருமழிசைக்கு மாற்றுவதற்கான பணிகளில் சிஎம்டிஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்கு வருவாய் குறைவாக கிடைப்பதே காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கோயம்பேடு காய்கறிச் சந்தை | Koyambedu market

அதாவது, அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்த போது, ``கோயம்பேடு சந்தை மூலமாக சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.12 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் சந்தையை பராமரிப்பதற்கு மட்டும் ரூ.11 கோடிக்கு மேல் செலவு செய்யவேண்டியிருக்கிறது. மேலும் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் அதிகமாக வருவதால் கோயம்பேடு பகுதியில் கடுமையான போக்குவதற்கு நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தான் ஏற்கெனவே தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான அரசு பஸ் ஸ்டாண்டை, கிளம்பாக்கத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக கொரோனா காலத்தில் திருமழிசையில் தான் சில காலத்துக்கு காய்கறி சந்தை இயங்கி வந்தது. பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் பழக்கப்பட்ட இடம் என்பதால் தற்போது பிரச்னை இருக்காது.

கோயம்பேடு சந்தை பகுதியில் சுமார் 30 ஏக்கரில் திறந்த வெளி விற்பனை நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கோயம்பேடு சந்தை

இதுதவிர சுமார் 25 ஏக்கரில் வணிக வளாகம், நட்சத்திர ஹோட்டல், விளையாட்டு மைதானம் போன்றவையும் அமையவிருக்கிறது. இதற்கான வடிவமைப்பு தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. மறுபுறம் கோயம்பேட்டில் சில்லறை விற்பனை கடைகள், உணவகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் இவ்விடம் தான் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் மற்றும் 2-ம் கட்ட திட்டப்பணியை இணையும் இடமாக இருக்கிறது. எனவே பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள். அவர்களை கவரும் வகையில் இந்த திட்டம் இருக்கும். இதன் மூலம் வருவாயும் அதிகரிக்கும். இருப்பினும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் முழுமையாக மாற்றலாமா? அல்லது பாதியாக மாற்றலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்கிறார்கள். மறுபுறம் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மெட்ரோ ரயில்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில துணை பொதுச்செயலாளர் கார்த்திகேயன், "இன்று மையப்பகுதியான கோயம்பேட்டில் காய்கறி சந்தை இயங்கி வருகிறது. அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்து செல்வோருக்கு எளிதாக இருக்கும். திருமழிசைக்கு கொண்டு சென்றுவிட்டால் ஒருபகுதியில் ஒதுங்கிவிடும்.

பலகோடி செலவு செய்து தான் இந்த மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறார்கள். புதிதாக திருமழிசையில் இதேபோல் கட்டமைப்புகளை உருவாக்குவதால் அரசுக்கு பல கோடி விரையம் ஏற்படும். மேலும் தற்போதைய இடத்தில் என்ன செய்ய போகிறார்கள் என்பதை இதுவரை தெளிவாக சொல்லவில்லை. ஏற்கெனவே பேருந்துநிலையத்தை கிளம்பாக்கத்துக்கு கொண்டு செல்லும் வேலைகளை பார்த்து வருகிறார்கள்.

கார்த்திகேயன்

அப்படி சென்று விட்டால் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும். பிறகு எதற்கு மார்கெட்டையில் மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றி 600-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் சிறுசிறு கடைகளை அமைத்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாகியிருக்கிறது. திருமழிசைக்கு அனைவரும் செல்வார்களா என்பதும் கேள்விக்குறிதான்.

இங்கு கொரோனா காலத்தில் மார்க்கெட் செயல்படும் பொழுது பெருங்களத்தூர், தாம்பரத்துக்கு முன்பே லாரிகள் நிறுத்தப்பட்டு வியாபாரம் நடந்தது. இதனால் பற்றாக்குறை காலங்களில் விலையேற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். ஆளும் தரப்பு தங்களுக்கு சாதகமான வியாபாரி சங்கங்களை அழைத்து மட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். இதனால் உண்மையான தகவல் சென்று சேருவதில்லை. எனவே அனைத்து சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்" என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம். "இது திமுக அறிவித்த திட்டம் இல்லை. வியாபாரிகள் சங்கத்தில் ஒருபிரிவினர் வரவேற்பும், மற்றொரு பிரிவினர் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். பல கருத்துக்கள் இருப்பதால் வியாபாரிகள் சங்கங்களுடன் கலந்து பேசி, அவர்களுக்கும், மக்களுக்கும் தொந்தரவு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இது வளர்ச்சிக்கான திட்டம் தான். அவர்கள் சொல்வதில் நியாயம் இருந்தால், அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



from India News https://ift.tt/8qOKDY7

Post a Comment

0 Comments