"சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாட்டு சட்டம் 2006-இன் அடிப்படையில் 2012-ல் உருவாக்கப்பட்ட சிறு, குறு தொழில்களுக்கான பொதுக் கொள்முதல் கொள்கை ஆணையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை" என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலில் எஸ்.சி-எஸ்.டி சிறு, குறுந் தொழில்முனைவோரிடமிருந்து எவ்வளவு கொள்முதல் செய்யப்படுகிறது என்பதைப் பற்றிய கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தேன்.
அதற்கு ஒன்றிய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சர் பானு பிரதாப் சர்மா தந்துள்ள பதில் அதிர்ச்சியை அளிக்கிறது.
2018 - 19- ல் 166 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,53,485 கோடிகள். இதில் எஸ்.சி-எஸ்.டி சிறு, குறுந் தொழில்முனைவோரிடமிருந்து கொள்முதல் ரூ.825 கோடிகள். இது மொத்த கொள்முதலில் 0.54% மட்டுமே.
2019- 20-ல் 152 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,31,461 கோடிகள். இதில் எஸ்.சி-எஸ்.டி சிறு, குறுந் தொழில்முனைவோரிடமிருந்து கொள்முதல் ரூ.691 கோடிகள் மட்டுமே. இது மொத்த கொள்முதலில் 0.53% ஆகும்!
2020 - 21-ல் 161 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,39,420 கோடிகள். இதில் எஸ்.சி-எஸ்.டி சிறு குறு தொழில் முனைவோரிடமிருந்து கொள்முதல் ரூ.769 கோடிகள். மொத்த கொள்முதலில் 0.55%.
2021 - 22-இல் 159 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,64,542 கோடிகள். இதில் எஸ்.சி-எஸ்.டி சிறு குறு, தொழில் முனைவோரிடமிருந்து கொள்முதல் ரூ.1,291 கோடிகள். மொத்த கொள்முதலில் 0.78% மட்டுமே.
2022-23-ல் 150 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,75,099 கோடிகள். இதில் எஸ்.சி-எஸ்.டி சிறு, குறுந்தொழில்முனைவோரிடமிருந்து கொள்முதல் ரூ.1,468 கோடிகள். மொத்த கொள்முதலில் 0.84% ஆகும்.
இப்படி எல்லா ஆண்டுகளிலும் கொள்முதல் செய்யப்பட்ட விகிதம் அரை சதவிகிதம், முக்கால் சதவிகிதமாக உள்ளது.
ஆனால், சிறு குறு நடுத்தரத் தொழில் மேம்பாட்டு சட்டம் 2006-இன் அடிப்படையில் 2012-ல் உருவாக்கப்பட்ட சிறு, குறு தொழில்களுக்கான பொது கொள்முதல் கொள்கை ஆணை என்ன சொல்கிறது என்றால், ஒன்றிய அரசின் அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் தாங்கள் செய்யும் சரக்கு மற்றும் சேவை கொள்முதலில் 4% எஸ்.சி-எஸ்.டி சிறு குறு, தொழில் முனைவு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த 4% எங்கே, இந்த அரை, முக்கால் சதவிகிதம் எங்கே?
2012-ஆம் ஆண்டில் பிறப்பித்த ஆணையை மீறுபவர்களுக்குத் தண்டனையாக ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது என்று அமைச்சரின் பதில் கூறுகிறது. இதுவரை எத்தனை நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டுள்ளன? மதிப்பெண் குறைவதால் ஏற்படும் விளைவு என்ன ? அப்படி தண்டிக்கப்பட்டு இருப்பதாக வைத்துக் கொண்டாலும் சதவிகிதம் 4 சதவிகிததுக்குப் பக்கத்திலேயே வரவில்லையே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை எம்.பி. எழுப்பியுள்ள இந்தக் கேள்விக்கு மத்தியஅரசு என்ன பதில் சொல்லப் போகிறதோ...?
from India News https://ift.tt/WDCHU0o
0 Comments