ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில், கடந்த திங்களன்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய பேரணியானது இருதரப்பினரிடையேயான வன்முறையாக வெடித்தது. ஏற்கெனவே பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் மூன்று மாதங்களாக வன்முறை நடந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது பா.ஜ.க ஆளும் மற்றொரு மாநிலமான ஹரியானாவில் வன்முறை வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நூஹ், குருகிராம் உட்பட பல இடங்களில் மூன்று நாள்களாக நீடித்துக்கொண்டிருக்கும் இந்த வன்முறையில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த நிலையில், குருகிராம் பகுதியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை வன்முறைக்கு முன் 100-ஆக இருந்ததாகவும், தற்போது திரும்பிச் செல்லக் கூட பணம் இல்லாமல் அதில் 15 குடும்பங்கள் மட்டுமே அங்கேயே இருப்பதாகவும் புலம்பெயர் முஸ்லிம்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து உள்ளூர் ஊடகத்திடம் பேசிய ஷமிம் ஹுசைன் (25), ``நேற்று மாலை சிலர் வந்து அனைத்து முஸ்லிம்களையும் வெளியேறச் சொன்னார்கள். நாங்கள் திரும்பிச் செல்வதற்குக் கூட எங்களிடம் பணம் இல்லை. எனக்கு எதாவது நடந்தால் கூட பரவாயில்லை. ஆனால், எனக்கு ஒருவயதில் மகன் இருக்கிறான்.
எனவே, அரசும், மாவட்ட நிர்வாகமும், உள்ளூர்வாசிகளும் எங்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்" என்று கூறினார்.
அவரைத்தொடர்ந்து பேசிய ஷமிம் ஹுசைனின் தாயார் சஃபியா, ``நேற்று மாலை 7 மணியளவில் சுமார் 60 பேர் வந்தனர். அவர்கள் யாரும் எங்களிடம் பேசவில்லை. நாங்கள் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் பேசி, அனைத்து முஸ்லிம்களையும் வெளியேறச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. இப்போது கிட்டத்தட்ட அனைவருமே கிளம்பிவிட்டனர். 15 - 16 குடும்பங்கள் தான் இங்கு இருக்கின்றன. அதுவும் திரும்பிச் செல்வதற்குப் பணம் இல்லாததால் வெளியேற முடியவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும் அந்தப் பகுதியில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளர் ஒருவர், ``இது இந்துக்களைப் பற்றியதோ அல்லது முஸ்லிம்களைப் பற்றியதோ அல்ல. வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தான் அதற்குப் பொறுப்பு. ஆனால், இதுபோன்ற வன்முறையில் எங்களைப் போன்ற ஏழைகள் தான் விலைகொடுக்க வேண்டியதாக இருக்கிறது. நாங்கள் தினக் கூலிகள். எங்களால் வேலைக்குப் போக முடியவில்லை. இதே நிலை நீடித்தால் நாங்கள் பட்டினியாகத்தான் கிடப்போம்" என்றார்.
முன்னதாக புலம்பெயர் குடும்பங்கள் பாதுகாக்கப்படும் என்றும், மசூதிகள், கோவில்கள் போன்றவற்றில் இரவு முழுவதும் பாதுகாப்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் குருகிராம் மாவட்ட ஆணையர் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/s0dIaXB
0 Comments