என்.எல்.சி விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில், மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில், பாமக அலுவலக திறப்பு விழாவுக்கு வருகை தந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ``என்எல்சி-க்கு எதிர்ப்பு தெரிவித்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``அன்னூரில் சிப்காட் நிறுவனம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அண்ணாமலையும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் போராட்டம் நடத்தி, தடுத்து நிறுத்தியது ஏன்?” என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.
மேலும், ``இருவரும் போராட்டம் நடத்தி அந்த திட்டத்தையே தடுத்து நிறுத்திவிட்டார்கள். இத்தனைக்கும் அந்த சிப்காட் இடம் தரிசு நிலம், அதில் போர் போட்டால் பல அடி தூரத்திற்கு தண்ணீர் கூட வராது. ஏன் அந்த திட்டத்தை கைவிடுமாறு கேட்டார்கள். அங்கே சிப்காட் வந்தால் 20,000 தமிழர்களுக்கு வேலை கிடைத்திருக்குமே... ஏன் தடுத்து நிறுத்தினீர்கள்... அன்னூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா?” என காட்டமான கேள்வியை முன் வைத்தவர், ‘சோறு போடும் நிலத்தை அழிக்காதீர்கள் என டெல்லியில் சென்று அண்ணாமலை கூற வேண்டும். டெல்லியில் சென்று வாதிட்டு என்எல்சி விவகாரத்தை அண்ணாமலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதோடு நின்றுவிடாமல், அண்ணாமலை சொன்ன கருத்துக்கு தனியார் தொலைக்காட்சி பேட்டிகளிலும் தனது கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் அன்புமணி ராமதாஸ். அதன்படி, “சமீபத்தில் அண்ணாமலை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. எதிர்க்கிறாராம் என்கிரார். யாரை எதிர்க்கிறார். என்ன எதிர்க்கிறார். உங்கள் அரசுதான் மத்தியில் இருக்கிறது. அங்கு போய் எதிர்க்க வேண்டியதுதானே.
அண்ணாமலை மட்டுமல்ல திமுக, அதிமுக எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள். திமுக இதே பிரச்னையை ஒட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்ன நிலைபாடு எடுத்தார்கள். அப்போது எதிர்த்தார்கள். இப்போது ஆளும் கட்சியாக வந்ததும் மாறிவிட்டார்கள்” என்று குறிப்பிட்டவர், ‘என்.எல்.சி நிறுவனத்தில் தமிழர்கள் பணி புரிகிறார்கள் என அண்ணாமலை கூறும் தமிழர்கள், என்.எல்.சி அதிகாரிகள் வீட்டில் தோட்ட வேலையில் தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள்’ என குறிப்பிட்டு, என்.எல்.சி நிர்வாகத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதையும் பதிவு செய்துள்ளார் அன்புமணி.
அதேநேரத்தில், ``பாமகவின் நோக்கம் 2026-ல் புதிய கூட்டணி ஆட்சியே தமிழகத்தில் அமைக்க வேண்டும். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்போம் , அதற்கு காலம் நேரம் வரும் , நேரம் வரும்போது சொல்வோம்’ என்று நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பொடி வைத்தும் பேசியிருக்கிறார். தேசிய ஜனநாயாக கூட்டணி கட்சிகளுடனான டெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்கு கூட அன்புமணி ராமதாஸ் செல்லவில்லை. அண்ணாமலை முன்னெடுப்பில், ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் துவக்க விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதற்காக அன்புமணி ராமதாஸ் இல்லத்துக்கு சென்று அழைத்தனர் பாஜக நிர்வாகிகள். துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கெடுக்காததோடு மட்டுமல்லமால், அன்றைய தினம்தான் என்.எல்.சி விவகாரத்தை கையில் எடுத்து நடைப்பயணம் குறித்தான செய்தியை கவனம் பெறாமல் செய்ய வைத்தது பாமக என்கிற விமர்சனமும் பாஜக தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக பாஜக, பாமக இடையேயான அரசியல் கணக்கு ஒரு பக்கம் இருக்க, ஏன் என்.எல்.சி விவகாரத்தில் அண்ணாமலை தலையிடுவதில்லை என்கிற கேள்வியையும் பாமக தரப்பில் முன் வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, “அன்னூரில் அண்ணாமலை சொந்தக்காரர்கள் நிறைய பேர் இருப்பார்கள் போல, அதனால் அதை எதிர்த்தார். அது தரிசு நிலம். இது வட மாவட்டம் என்பதால் இதன் மீது அக்கறை இல்லை. தரிசு நிலத்துக்கு குரல், கொடுப்பவர் விளை நிலங்களுக்கு கொடுக்க வேண்டாமா...” என்றவரிடம், ‘அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழாவை திசை திருப்பவே பாமக ஆர்பாட்டம் நடத்தியதக விமர்சனம் முன் வைக்கப்படுகிறதே’ என்று நாம் முன் வைத்த கேள்விக்கு,
“தமிழக அரசு அதற்கு முதல் நாள் விளை நிலத்தில் கொண்டு போய் வண்டி விட்டார்கள். அவர்களும் இதற்காகத்தான் செய்தார்கள் என்று சொல்வார்களா... இங்கு மக்களின் பிரச்னை எதுவோ அதற்குதான் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெறும். அன்றைய தேதியில் மக்களுடைய பிரச்னை என்.எல்.சி விவகாரம். அதனால், அன்று பெரிதாக பார்க்கப்பட்டது. ஒரு பெரிய சேதம், பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது அதை பற்றித்தான் பேச்சுக்கள் இருக்கும். யூகங்களாக எதுவேண்டுமானாலும் சொல்லலாம். அண்ணாமலை நடைப்பயணம் சக்சஸ் இல்லை என்பதால், இது கூட ஒரு காரணமாக சொல்கிறார்களோ என்னவோ, யாருக்கு தெரியும்” என்றார்.
“கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பாஜக சார்பாக அங்கிருக்கும் குறைகளை நுணுக்கமாக ஆராய்ந்து, எங்கள் மாநில தலைவர் வழிகாட்டுதலின் பெயரில் ஒரு மாநில செயலாளராக பல விஷயங்களை முன்னெடுத்து வருகிறேன். அங்கு பாஜக என்னென்ன செய்திருக்கிறார்கள் என்று அங்குள்ள மக்களிடம் கேட்டால்தான் தெரியும்” என்கிறார் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன். மேலும் தொடர்ந்தவர், “பாமக எங்கள் மீது இப்போது வைக்கும் அரசியல் ரீதியான காரணங்களுக்குள் செல்லவில்லை. இப்போது என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவது 26-ஆம் தேதி நடந்திருக்கிறது. ஆனால், 25-ஆம் தேதி மத்திய நிலக்கரிதுறை அமைச்சரிடம் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தினேன். அடுத்த நாள் இவ்வளவு அவசரமாக செயல்படுத்துவதற்கான அவசியம் என்ன என்கிற மர்மம் இது வரை தெரியாமல் தொடர்கிறது.
நாங்கள் தீர்வு நோக்கி செல்கிறோம். மக்கள் அங்கு நிலத்தை கொடுப்பதற்கு தயராக இருக்கிறார்கள். அதற்குரிய நிவாரணத்தை கேட்கிறார்கள். ஏற்கனவே 1956, 79, 80-களில் நடந்த நில எடுப்பின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அந்த வலி மக்களிடம் இருக்கிறது. இதெல்லாம் காங்கிரஸ் காலத்தில் நடந்தது என்று தட்டி கழித்து நாங்கள் போகவிருமவில்லை. அந்த மக்களின் வலியை சரி செய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன்பும் மத்திய நிலக்கரி துறை அமைச்சர் மற்றும் என்.எல்.சி நிர்வாகத்தினரை சந்தித்து ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்தோம். அப்போது சில அரசியல் காரணங்களுக்காக செயல்வடிவம் பெறாமல் போனது. இப்போது கூட தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் புகாரளித்து, அவர்கள் நேரடியாக கடலூர் வந்து பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களிடம் விசாரணை செய்திருக்கிறார்கள். இனி மக்கள் ஏமாற்றப்பட கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக பயணித்து கொண்டிருக்கிறோம்.
என்.எல்.சி விவகாரம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டத்தை வரவேற்கிறேன். இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதேமாதிரி அன்புமணியும் அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமாக இந்த விஷயத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என்றார்.
from India News https://ift.tt/TijvyH7
0 Comments