சந்திராயன் 3, லேண்டர் நேற்று முன்தினம் (23.08.2023) மாலை நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தனது தடத்தைப் பதித்தது. இதற்கு பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர். இந்த நிலையில், சந்திராயன் 3-ன் திட்ட இயக்குநராக உள்ள வீர முத்துவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள வீர முத்துவேலின் தந்தை பழனிவேலை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் பழனி. இதை தொடர்ந்து, நேற்று மாலை பழனிவேலை அவரின் இல்லத்தில் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, "ரயில்வே தொழிலாளராக இருந்து, ரயில்வே தொழிலாளர்களுக்கு தன்னுடைய குரலை கொடுத்திருக்கின்ற பழனிவேலின் மகன், இன்று சந்திராயன் 3-ஐ நிலவிலே இறக்கியதன் மூலமாக மிகப்பெரும் பெயரை பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. இது அவருக்கு கிடைத்திருக்கின்ற பெயர் மட்டுமல்ல... விழுப்புரம் நகரத்திற்கு, தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கின்ற பெருமை.
அதனால்தான் தமிழக முதலமைச்சர் அவர்கள், வீர முத்துவேலை தொலைபேசி வாயிலாக பாராட்டியிருக்கிறார். பழனிவேல் எங்களுடைய குடும்ப நண்பர். வீர முத்துவேலின் திருமணத்திற்கு கூட என் துணைவியார், மகன் எல்லாம் கலந்து கொண்டார்கள். இப்போது சமீபத்தில் வீர முத்துவேலின் தங்கை திருமணம் நடைபெற்றது. அதற்கு கூட அவரால் வர முடியவில்லை. "இன்னப்பா தங்கச்சி திருமணத்துக்கு வரியா.." என்று அவரிடம் நான் போன் வாயிலாக கேட்டேன். "இல்லண்ணே 23-ம் தேதி தான் நிலவுல லேண்டர் இறங்குது. 20-ம் தேதி திருமணத்திற்கெல்லாம் வர முடியாது!" என்று சொல்லிவிட்டு, கடமையையே கண்ணாக பின்பற்றிய விழுப்புரத்தைச் சேர்ந்த வீர முத்துவேலுக்கு பல்வேறு வாழ்த்துக்களை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
அவரை வளர்த்து, உருவாக்கிய அவருடைய தந்தையும் விழுப்புரம் நகரத்தின் வளர்ச்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். முதலமைச்சர் சார்பாக அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வீர முத்துவேலிடம், "நீங்கள் வரும்போது நான் வந்து உங்களை சந்திக்கிறேன்" என்று சொன்ன ஒரு முதலமைச்சர், தமிழக முதலமைச்சர். அதுதான் முதலமைச்சருக்கு இருக்கின்ற பெரிய தகுதி. அதை அவர் செய்திருக்கிறார்.
பிள்ளைக்கும், தந்தைக்கும் முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து, பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். அப்படியாக நம்முடைய விழுப்புரத்திற்கு பெரிய பெயரை உருவாக்கி கொடுத்திருக்கின்றனர் பழனிவேலும், அவரது புதல்வர் வீர முத்துவேலும். பெயர் கூட பாருங்க... வீர 'முத்துவேல்'. தலைவருடைய தந்தையையும் 'முத்துவேல் கருணாநிதி..' என்று சொல்வார்களே அதுபோல இவரு முத்துவேல். அவருடைய தந்தை பெயர் பழனிவேல். எல்லாம் 'வேல்' தான்.
எப்போதும் பழனிவேல் பக்திமானாக திகழ்ந்து கொண்டிருப்பவர். அந்த உணர்வோடு இவரை பாராட்டுவதிலே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். நிச்சயமாக வீர முத்துவேல் தமிழகம் வருகின்றபோது, நானே அவரை விமான நிலையம் சென்று அழைத்துவந்து முதல்வருடன் எல்லோரும் சேர்ந்து வரவேற்போம்" என்றார்.
from India News https://ift.tt/U8kLAXC
0 Comments