"பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை மட்டும் விடுவித்ததேன்?!" - உச்ச நீதிமன்றம் கேள்வி

குஜராத்தில் 2002-ல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் கலவரத்தின்போது, பில்கிஸ் என்ற இஸ்லாமிய கர்ப்பிணி, ஆண் குழுவால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த 11 குற்றவாளிகளை, கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுவித்தது.

பில்கிஸ் பானு

இதற்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருக்க, குஜராத் அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் குவிந்தன. அதன் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெறு வருகிறது. இந்த நிலையில், `பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை மட்டும் விடுதலை செய்தது ஏன்?' எனக் குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருக்கிறது.

11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை, நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, குஜராத் அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம், ``தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலைக் கொள்கை (Remission Policy) ஏன் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து கைதிகளுக்கும் சீர்திருத்த மற்றும் சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்களில் சிலருக்கு மட்டுமே அது வழங்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் - பில்கிஸ் பானு

இப்போது இங்கு கேள்வி என்னவென்றால், தகுதியுடையவர்கள் விடுதலைசெய்யப்படுவார்கள் என்றால், தகுதியுடைய ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரும் 14 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்படுவார்களா?" என்று உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி கேட்டது.

அதற்குப் பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ``11 குற்றவாளிகளுக்கும் விடுதலை அளிப்பதற்கு முன், 1992-ம் ஆண்டு குஜராத் அரசின் தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலைக் கொள்கையுடன் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்பட்டது" என்று கூறினார். அதையடுத்து உச்ச நீதிமன்ற அமர்வு, தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலைக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.



from India News https://ift.tt/Bh1JAVq

Post a Comment

0 Comments