‘மோடி’ சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் பேசிவிட்டார் என்று ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது குஜராத் நீதிமன்றம். குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. அது தொடர்பான அறிக்கையை மக்களவைச் செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டார்.
அதில், 'குற்றவியல் வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளித்தது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 102(1)(e)-ன்கீழ் கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது தகுதி நீக்கம், தீர்ப்பு வெளியான நாளிலிருந்தே அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அந்த நேரத்தில், அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையை முன்வைத்து பா.ஜ.க-வை டார்கெட் செய்தன எதிர்க்கட்சிகள். அந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம் சென்றபோதெல்லாம் தொழிலதிபர் கௌதம் அதானியைக்கூடவே அழைத்துச் சென்றதை வைத்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
மோடியும் அதானியும் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்தது தொடர்பான புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அதைக் காண்பித்து நாடாளுமன்றத்தில் சரமாரியாக கேள்வியெழுப்பினார் ராகுல் காந்தி. அது ஆளும் பா.ஜ.க-வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அதானி பற்றிய எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நழுவினார் பிரதமர் மோடி.
நாடாளுமன்றத்துக்கு வந்து பா.ஜ.க-வை நோக்கியும் பிரதமர் மோடியை நோக்கியும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தினமும் கேள்விகள் எழுப்பிவந்ததால், ஆளும் தரப்பினர் சங்கடத்துக்கு உள்ளாகினர். அந்த நேரம் பார்த்து, ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனையை சூரத் நீதிமன்றம் வழங்கியது. அதை வைத்து, உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறித்துவிட்டனர். அது ஆளும் தரப்புக்கு ஆசுவாசத்தை அளித்தது.
இந்த நடவடிக்கைகளால், ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டது. அதுவும் ஆளும் தரப்புக்கு ஆறுதல் தரும் விஷயமாக இருந்தது. ஆனால், நிலைமை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. நாடாளுமன்றத்துக்கு மீண்டும் வரப்போகிறார் ராகுல் காந்தி. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சூரத் நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்திவைத்திருக்கிறது.
இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்றவுடனேயே ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிப்பதற்கு அதீத ஆர்வம் காட்டிய ஆளும் தரப்புக்கு, ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்துக்குப் வரப்போகிறார் என்பதும், தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போகிறார் என்பது பெரும் பின்னடைவுதான். பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர்கள் இல்லை என்று பா.ஜ.க கூறிவரும் நிலையில், மோடிக்கு எதிராக மீண்டும் களம் காண வருகிறார் ராகுல் காந்தி. இது அரசியல்ரீதியாகவும் பா.ஜ.க-வுக்கு பின்னடைவுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு ராகுல் காந்தி மீதான மதிப்பு மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்... காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கூடியிருக்கிறது... அதுதான், கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு கைகொடுத்தது என்றெல்லாம் காங்கிரஸ் தரப்பு உற்சாகத்துடன் கூறிவருகிறது. மேலும், பா.ஜ.க-வுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகளெல்லாம் ஓரணியில் திரண்டு ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயருடன் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் களமாடிவருகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு ராகுல் காந்தி மீண்டும் வருகிறார்.. மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்ற செய்தி எதிர்க்கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. எனவே, இது பா.ஜ.க-வுக்கு பின்னடைவுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பா.ஜ.க-வைப் பொறுத்தளவில், ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்த புர்னேஷ் மோடி, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். எங்களின் சட்டப்போராட்டத்தைத் தொடருவோம்” என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவரான அமித் மாளவியா, ‘இந்த ஒரு வழக்கில் ராகுல் காந்தி தப்பியிருக்கலாம். ஆனால், இது எவ்வளவு காலத்துக்கு? சாவர்க்கர் மீது சேற்றை வாரி வீசியவதற்கு எதிரான வழக்கு உட்பட ராகுல் காந்திக்கு எதிராக ஏராளமான மானநஷ்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன’ என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் தொடங்கவுள்ள நிலையில் ராகுல் நாளை அதில் கலந்து கொள்வார் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
from India News https://ift.tt/1MXRtU0
0 Comments